
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வரும் மாரியப்பன் என்பவர் 11 மற்றும் 12 – ம் வகுப்பு மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறைக்கு அண்மையில் புகார் அழைப்பு வந்திருக்கிறது.
ரகசியமாக பள்ளிக்குச் சென்ற பெண்கள் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மாணவிகளிடம் அழைத்து ரகசியமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆங்கில பாடம் நடத்தி வந்த ஆசிரியர் மாரியப்பன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக 6 பழங்குடி மாணவிகள் மற்றும் ஒரு பட்டியல் சமுதாயத்தை மாணவி ஒருவர் என 7 பேர் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஆசிரியர் மாரியப்பன் திடீரென தலைமறைவானார்.
காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடிவந்தனர். தென்காசி பகுதியில் தலைமறைவாக இருந்த அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதன் பின்னணி குறித்துத் தெரிவித்த காவல்துறையினர், “ஆசிரியர் மாரியப்பன் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் நிரந்தர ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவரின் மனைவியும் அரசுப் பள்ளியில் நிரந்தர ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளிடம் நட்பு பாராட்டுவதைப் போன்று பழகி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

மாணவிகள் கண்டித்தும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதே அத்துமீறலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் பணியாற்றிய பள்ளி ஒன்றிலும் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அது குறித்தும் விசாரணை நடத்தப்படும்” என்றனர்.