
திருச்செந்தூரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (32), நத்தம் கோபால்பட்டியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஓசூரைச் சேர்ந்த சத்யா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருவரும் திண்டுக்கல், கோபால்பட்டி எல்லாநகர்ப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பின்பு சத்யா (26) கர்ப்பமாகியுள்ளார். இது தொடர்பாக எந்த ஒரு மருத்துவமனையிலும் கர்ப்பம் தொடர்பான சிகிச்சை பெறாமல் கணவரும் மனைவியும் தங்களுக்குள்ளாகவே சொந்தமாகச் சிகிச்சை அளித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக நேரில் வந்து கணவன், மனைவி இருவரையும் சந்தித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வலியுறுத்தினர்.
ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து தாங்கள் வீட்டிலேயே சொந்தமாகப் பிரசவம் பார்த்துக் கொள்வதாகக் கூறியுள்ளனர். நிறைமாத கர்ப்பிணியான சத்யாவிற்கு நேற்று பிரசவ வலி வந்ததாகவும் அவர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதாக தகவல் பரவியது.
உடனே கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி தலைமையில் நடமாடும் ஆம்புலன்ஸ்லில் மருத்துவக் குழுவினர், மற்றும் சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ் மற்றும் போலீசார், பொதுமக்கள் ஆகியோர் சத்யா வீட்டின் முன் குவிந்தனர்.
கஜேந்திரன்- சத்யா தம்பதியினரிடம் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்குமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் கணவர் கஜேந்திரன் மனைவி சத்யா ஆகிய இருவரும் வீட்டு அறையை மூடிக்கொண்டுள்ளனர். கஜேந்திரன் தனது செல்போனில் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலமாக யாரிடமோ பேசி அவர்கள் கொடுக்கும் கட்டளைப்படி சொந்தமாகப் பிரசவம் பார்த்துள்ளார்.

இரவு 7 மணி அளவில் வீட்டின் கதவை கஜேந்திரன் திறந்ததுள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது 3 கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்திருந்தது. தாயும் குழந்தையும் நலமாக இருந்தாலும் இருவரின் பாதுகாப்பு கருதி சத்யாவின் வீட்டிற்கு வெளியே ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் சிகிச்சை அளிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.
வீட்டில் பிரசவம் பார்ப்பதற்குச் சில வாட்ஸப் குழுக்கள் ஊக்குவிப்பதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் மூன்று வாட்ஸ்அப் குரூப்களை ஆய்வு செய்து வருகின்றனர்.