• August 22, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்கா நிதியுதவி

அமெரிக்கா, உலகளாவிய ஜனநாயக வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பல நாடுகளுக்கு நிதியுதவி வழங்குகிறது. இந்தியாவிலும், வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிக்க மற்றும் தேர்தல் செயல்முறைகளை வலுப்படுத்த சில திட்டங்களுக்கு நிதி வழங்கப்பட்டது.

இந்த உதவி CEPPS (Consortium for Elections and Political Process Strengthening) என்ற அமைப்பின் மூலம் வழங்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE) கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கா, இந்தியாவில் வாக்குப்பதிவு விழிப்புணர்வை அதிகரிக்க USAID (United States Agency for International Development) மூலம் ரூ.182 கோடி அளவிலான நிதியை வழங்கியது. இந்த நிதி பிப்ரவரி மாதத்துடன் ரத்து செய்யப்படுகிறது” என அறிவித்தது.

இந்த அறிக்கை வெளியானதிலிருந்து பா.ஜ.க – காங்கிரஸ் இடையே கடும் வார்த்தை போர் வெடித்தது.

இந்தியா – அமெரிக்கா

பா.ஜ.க குற்றச்சாட்டு

பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, “இந்த நிதி ஜார்ஜ் சோரஸ் என்ற அமெரிக்க தொழிலதிபரின் அறக்கட்டளை வழியாக வருகிறது. 2012-ல் காங்கிரஸ் ஆட்சியில், தலைமை தேர்தல் ஆணையம் ஜார்ஜ் சோரஸின் அமைப்புடன் ஒப்பந்தம் செய்தது.” எனக் குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடியின் ஆலோசகர் சஞ்சீவ் சன்யால், “இந்திய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு இது வரை இல்லாத அளவுக்கு மோசமானது” என விமர்சித்தார்.

காங்கிரஸ் கேள்வி

இதற்கு பதிலளித்த காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, “2012-ல் காங்கிரஸ் அமெரிக்காவிடமிருந்து நிதியுதவி பெற்றிருந்தால், 2014-ல் பா.ஜ.க எப்படிஆட்சியை பிடித்தது? அப்படியானால் அந்த நிதி பா.ஜ.க-வுக்கு சென்றதாக எடுத்துக்கொள்ளலாமா?” என கேள்வி எழுப்பினார்.

முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, “2012-ல் எந்த அமைப்பிடமிருந்தும் எந்த நிதியுதவியும் பெறவில்லை. பயிற்சி ஒப்பந்தம் மட்டுமே செய்துகொள்ளப்பட்டது” என விளக்கமளித்தார்.

மேலும், அப்போதே காங்கிரஸ் கட்சி, `அமெரிக்கா, USAID தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ என வலியுறுத்தியது.

ராகுல் காந்தி - மோடி
ராகுல் காந்தி – மோடி

ஜோ பைடன் அரசு நிதி?

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “இந்தியாவில் தனக்கு விருப்பமான நபரை ஆட்சியில் அமர்த்த ஜோ பைடன் அரசு நிதி வழங்கியது” எனத் தொடர்ந்து பிரசாரம் செய்தார்.

இதை மேற்கோள் காட்டி 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட பா.ஜ.க, “2024 தேர்தலில் மோடியை தோற்கடிக்க வெளிநாட்டு சதி நடக்கிறது ” எனப் பிரசாரம் செய்தது.

இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் விவாதமானது. வெளிநாட்டு நிதி இந்திய தேர்தல்களில் செல்வாக்கு செலுத்துகிறதா? ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை, அரசியல் நெறிமுறை, வெளிநாட்டு உறவுகள் குறித்த முக்கியமான கேள்விகள் எழுந்தது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கேள்வி

அதே நேரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில், “வாக்காளர் வாக்குப்பதிவு”-க்கான 21 மில்லியன் டாலர் நிதி உதவி இந்தியாவிற்கு வரவில்லை. அந்த நிதி ஜூலை 2022-ல் பங்களாதேஷுக்குச் சென்றது” எனச் செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் USAID-யின் உதவியுடன் / நிதியளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் ஏற்பட்ட செலவினங்களின் விவரங்களை, உடனே வழங்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவுத் துறையிடம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்டது.

மோடி - ட்ரம்ப்
மோடி – ட்ரம்ப்

`பெறவுமில்லை, வழங்கவுமில்லை’

எனவே அதற்கான விவரங்களை வெளியுறவு அமைச்சகம் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்தது. அதில், “2014 முதல் 2024 வரையிலான நிதியாண்டுகளில் இந்தியாவில் வாக்காளர் வாக்குப்பதிவிற்காக USAID/இந்தியா $21 மில்லியன் நிதியைப் பெறவுமில்லை. வழங்கவுமில்லை.

மேலும் இந்தியாவில் வாக்காளர் வாக்குப்பதிவு தொடர்பான எந்த நடவடிக்கைகளையும் அது செயல்படுத்தவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இந்த தகவலின்படி, அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE), அமெரிக்க அதிபர் ட்ரம்ப், காங்கிரஸ் மீது பா.ஜ.க அரசு சுமத்திய குற்றச்சாட்டு என அனைத்துக்கும் மாற்றமான செய்திகள் வெளியாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *