• August 22, 2025
  • NewsEditor
  • 0

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கடந்த 11ம் தேதி டெல்லி தெருநாய்கள் விவகாரத்தில் பிறப்பித்திருந்த உத்தரவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தெருநாய்களை பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்கும்படி உத்தரவிட்டு இருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா மற்றும் அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று இவ்வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

அத்தீர்ப்பு விலங்குகள் நல ஆர்வலர்களை மகிழ்ச்சி படுத்துவதாக அமைந்துள்ளது. அத்தீர்ப்பில்,”தெருநாய்கள் விவகாரத்தில் விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப்படவேண்டும். தெருநாய்களை பிடித்துச்சென்று கருத்தடை ஆப்ரேஷன் செய்து, தடுப்பூசி போட்ட பிறகு அவற்றை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்துவிடவேண்டும். தெருநாய்களை அடைத்து வைக்க தடைவிதிக்கப்படுகிறது. ஆக்ரோஷமான மற்றும் நோயுள்ள நாய்களை மட்டும் தடுப்பூசி போட்டு தொடர்ந்து முகாம்களில் அடைத்து வைத்திருக்கவேண்டும்.

தெருநாய்களுக்கு பொது இடங்களில் சாப்பாடு போடக்கூடாது. அவற்றிற்கு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சாப்பாடு போடவேண்டும். மாநகராட்சி அதற்காக பிரத்யேக இடங்களை உருவாக்கவேண்டும். அதோடு அந்த இடத்தில் அறிவிப்பு பலகை ஒன்றையும் வைக்க வேண்டும். உத்தரவை மீறி செயல்படுபவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தெருநாய்களை தத்து எடுக்க மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கலாம். தத்து எடுத்த பிறகு அதனை தெருவில் விடக்கூடாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி வரவேற்றுள்ளார். அதோடு நாடு முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *