
நடிகை சமந்தா முதன்முறையாக தயாரித்த ’சுபம்’ திரைப்படம் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. அதே நேரம் குடும்ப சிக்கல், மன வருத்தங்கள், உடல் நலமின்மை எனப் பல்வேறு சவால்களை சமாளித்து இன்றும் அதே உற்சாகத்துடன் திரையுலகில் முத்திரை பதித்து வருகிறார்.
அவர் தாண்டிய தடைகள் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக பலரும் பாராட்டும் நிலையில், திரையுலகில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாகவே இருக்கிறார்.
சமீபத்தில் கிராசியா இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் இப்போதெல்லாம் முன்புபோல இல்லை. எல்லா விஷயத்திலும் தீவிரமாக இருந்த காலம் ஒன்று இருந்தது. நிறையப் படங்களில் நடிக்க வேண்டும் என ஓடிக்கொண்டே இருந்தேன்.
ஆனால், இப்போது எனக்கு எது உண்மையில் ஆர்வமாக இருக்கிறதோ அதில் மட்டும் தீவிரமாக முயற்சிக்கிறேன். அதில் ஒன்று உடற்பயிற்சி இன்னொன்று படம் நடிப்பது. நான் நிறையப் திரைப்படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் அவை அனைத்திலும் நான் ஆர்வமாக ஈடுபடவில்லை.
அதிலெல்லாம் வெற்றிப்பெற வேண்டும் என்ற தீவிரம் மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது, நான் செய்யும் ஒவ்வொரு விஷயமும், நான் முதலீடு செய்யும் ஒவ்வொரு தொழிலும், நான் தயாரிக்கும் ஒவ்வொரு திரைப்படமும், என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவை.
ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்து, மனதுக்கு நெருக்கமான கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறேன். என் உடலுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்பதால், என் வேலையின் அளவைக் குறைத்துவிட்டேன்.

அதனால், கடமைக்காக அல்லாமல் என் ஆற்றலைச் செலுத்தும் ஒவ்வொரு விஷயமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறேன். அதனால் என் திட்டங்களின் தரம் நிச்சயமாக அதிகரித்துள்ளது” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…