• August 22, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் வீடுகளையும், சொத்துக்களையும், ரௌடிகள் மற்றும் போலிப் பத்திரங்கள் மூலம் அபகரிப்பது தொடர் கதையாகி வருகிறது.

அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரௌடிகளின் பின்னணியைக் கொண்டிருப்பதால், பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் புகார் கொடுக்க முன் வருவதில்லை.

முதியவர் மூர்த்தி பால்ராஜ்

இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் செய்தியாளர்களைச் சந்தித்த மூர்த்தி பால்ராஜ் என்ற 75 வயது முதியவர், “கொசக்கடை வீதியில் எனக்குச் சொந்தமான 2,200 சதுர அடி இடத்தில் சிறிய வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விட்டேன். 2000-ம் ஆண்டு அங்குத் தரை தளத்தில் வாடகைக்கு வந்த பாலசுப்பிரமணியன் என்பவர், `ஜுவல் பேலஸ்’ என்ற நகைக் கடையை நடத்தி வந்தார்.

அதன்பிறகு என்னிடம் எதையும் சொல்லாமல் அவர்களுக்குள்ளாகவே பார்ட்னர்ஷிப்பை மாற்றிக் கொண்டு, தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சிவக்குமாரும், அவரது மகன் ஆனந்தராஜும் ஜூவல் பேலஸ் என்ற பெயரை மாற்றிவிட்டு `விஷாகா ஜூவல்லர்ஸ்’ என்ற பெயரில் கடையை நடத்தினார்கள். வயதான காலத்தில் வாடகை வந்தால் போதும் என்றும் நானும் அதைக் கண்டுகொள்ளவில்லை.

பிரச்னைக்குரிய வணிக வளாகம்
பிரச்னைக்குரிய வணிக வளாகம்

எங்களுக்கு வயதாகி விட்டதால் அந்த இடத்தை விற்றுவிட்டு, பிரான்சில் இருக்கும் எங்கள் மகன்களுடன் சென்று செட்டிலாக முடிவெடுத்தோம். அதற்காக கடையை விற்க முடிவெடுத்த நான், கடையைக் காலி செய்து தரும்படி எஸ்.பி. சிவக்குமாரிடம் கேட்டேன். ஆனால் கடையைக் காலி செய்ய மறுத்த அவர், ரூ.5 கோடி மதிப்புள்ள அந்த இடத்தை வெறும் ரூ.2.5 கோடிக்குக் கேட்டார்.

அதற்கு நான் மறுத்ததும், அவரும் அவருடைய மகன் ஆனந்தராஜும் என் வீட்டிற்கு வந்து, `என்னைத் தாண்டி யாரிடமும் உன்னால் இந்தக் கடையை விற்க முடியாது. அப்படியே விற்றாலும் வாழ்நாள் முழுவதும் நீ வருத்தப்படுவாய். தமிழக முதல்வர் ஸ்டாலின் வரைக்கும் எனக்குச் செல்வாக்கு இருக்கிறது. உன்னை சும்மா விட மாட்டேன்’ என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் எஸ்.பி சிவக்குமார்
தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் எஸ்.பி சிவக்குமார்

அந்த மன உளைச்சலில் உடல் நிலை சரியில்லாமல் என் மனைவி இறந்துவிட்டார்” என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க திமுக அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமாரை நாம் தொடர்பு கொண்டபோது, `முகாந்திரமற்ற புகார்கள். அனைத்தையும் மறுக்கின்றேன்.

என்னையும், என் அமைதியான சுபாவத்தையும் அனைவரும் நன்கு அறிவார்கள், நன்றி’ எனச் சுருக்கமாக வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பினார்.

இந்த நிலையில் முதியவர் மூர்த்தி பால்ராஜ் கதறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால், அவரை நேரில் அழைத்து விசாரணை செய்தார் கவர்னர் கைலாஷ்நாதன்.

புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்
புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்

அதையடுத்து, `இந்த விவகாரம் குறித்து எனக்கு 24 மணி நேரத்தில் அறிக்கை வேண்டும்’ என்று தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியிடம் உத்தரவிட்டிருக்கிறார்.

புதுச்சேரி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கும் இந்த விவகாரம், தி.மு.க கூடாரத்தையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *