
தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் த.வெ.க தலைவர் விஜய் உரையாற்றினார்.
அதில், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்திருந்தார். ‘அ.தி.மு.க வெளிப்படையாகவும், தி.மு.க மறைமுகமாகவும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறது.
கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலி வென்றுவிடலாம் எனத் தி.மு.க கனவு காண வேண்டாம். 2026 தேர்தலில் தி.மு.க த.வெ.க-வுக்கு மத்தியில்தான் போட்டி” எனப் பேசினார்.
இந்த நிலையில், நேற்று மாலை திமுக-வுடன் கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, தவெக தலைவர் விஜய் மாநாட்டில் பேசும்போது, நான் மார்க்கெட் போனதற்கு பிறகு அரசியலுக்கு வரவில்லை. நான் வரும்போதே ஒரு பெரும் படை பலத்தோடுதான் வந்திருக்கிறேன் எனப் பேசியிருக்கிறார். இது குறிந்து உங்கள் கருத்து என்ன? எனக் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த எம்.பி.கமல்ஹாசன், “விஜய்-யின் பேச்சு குறித்து நான் என்ன கருத்து சொல்வது? எனது பெயரைச் சொல்லியுள்ளாரா? யார் பெயரையாவது சொல்லியுள்ளாரா? யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றால் அது முகவரி இல்லாத கடிதம். முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் போடலாமா? தப்புங்க அவர் எனது தம்பி” எனக் கடந்து சென்றுவிட்டார்.