• August 22, 2025
  • NewsEditor
  • 0

எம்.ஜி.ஆர் டிக்‌ஷனரி

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியைச் சேர்ந்த ராஜாப்பா வெங்கடாச்சரி நடிகர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட அளவற்ற அன்பினால் அணிந்திருக்கும் மோதிரம், வைத்திருக்கும் பேனா, மொபைல் ரிங்டோன் என எல்லாவற்றிலும் எம்.ஜி.ஆரே மிளிர்கிறார்.

நடிகர் எம்.ஜி.ஆரைப்பத்தி யார் என்ன கேட்டாலும் சொல்லுவேன் என நெகிழ்ச்சிப் பொங்க சொல்லும் ராஜாப்பாவை அந்தப்பகுதி மக்கள் ‘எம்.ஜி.ஆர் டிக்‌ஷனரி’ என்றே அழைக்கின்றனர். தன் பால்யத்திலிருந்து தனக்கு பிடித்த எம்.ஜி.ஆரை மீட்டெடுத்து நம்மிடம் பகிரத்தொடங்கினார் ராஜாப்பா,

உழைக்கும் கரங்கள் படம் பார்த்த டிக்கெட்

மலைக்கள்ளன், மதுரை வீரன்

“1954 -ல் மதுரைல் தான் முதன்முதலில் மலைக்கள்ளன் படம் பாத்தேன். அப்போதிருந்தே  எம்.ஜி.ஆரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கு அப்புறம் 1956ல மதுரை வீரன் படம் பாத்தேன். இன்னும் இன்னும் எம்.ஜி.ஆரை பிடிக்க ஆரம்பிச்சது. அப்போ எனக்கு வயசு 9. அப்ப புடிச்சது தான் இப்போ வரைக்கும் நான் எம்.ஜி.ஆரை விடவே இல்ல.

இப்பவரைக்கும் ஆல் ஓவர் த தமிழ்நாடு எங்க எப்போ எம்.ஜி.ஆர் படம் ரிலீஸ் ஆனாலும் நான் அங்க இருப்பேன். 1975ல என்னுடைய கல்யாணத்துக்கு முந்தின நாள் வீட்ல பங்ஷன்ல கலந்துக்காம ‘நாளை நமதே’ படம் பார்க்க திருநெல்வேலிக்கு போய்ட்டேன்.

எம்.ஜி.ஆர்.

வீட்ல எல்லாருமே தேடியிருக்காங்க. என்னுடைய குழந்தை பிறக்கும் போது கூட ‘உழைக்கும் கரங்கள்’ படம் பார்க்க போய்ட்டு வந்து பிறந்து 18 மணிநேரம் கழிச்சி தான் பிள்ளையவே பார்த்தேன், என புன்சிரிப்போடு பேசிக்கொண்டிருக்கும் போதே எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ‘நமது வெற்றியை நாளை’ பாடல் அவரின் போன் ரிங்டோனாக அடித்தது. 

மறுபடியும் பேசத்தொடங்கியவர்,

“ உலகம் சுற்றும் வாலிபன் படத்தோட டைட்டில் சாங் தான் என் ரிங்க்டோனா வச்சிருக்கேன். எனக்கு அந்த படம் ரொம்ப பிடிக்கும். அந்த படத்த மட்டுமே நான் 327 தடவ பாத்திருக்கேன்.

உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு முதல் டிக்கெட் ரொம்ப கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்குனேன். அந்த தருணத்த என்னால என்னைக்குமே மறக்க முடியாது. அதனாலதான்  அந்தப் படத்தோட டிக்கெட்ட ஃபிரேம் போட்டு எப்போதும் என்கூடயே வச்சிருக்கேன். 

எம்.ஜி.ஆர் பட கேசட்டுகள்

`எல்லாமே சிம்பிள் தான்’

எம்.ஜி.ஆர் பத்தின எல்லா புக்ஸ், சி.டி. கேசட்டுகளும் என் வீட்ல இருக்கு. அதே மாதிரி, ‘இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ இலக்கணம் படித்தவன் ‘னு தொழிலாளி படத்துல எம்.ஜி.ஆர் பாடியிருப்பாரு.. அதுக்கேற்ற மாதிரி தான் நான் இன்ன வரைக்கும் வாழ்ந்திட்டு இருக்கேன். ஒரு காஸ்ட்லியான சட்டை வேட்டி, செருப்புன்னு எதுவுமே போடமாட்டேன். எல்லாமே சிம்பிள் தான்.

அவரை சினிமா வாழ்க்கையில மட்டும் இல்ல, அரசியல் வாழ்க்கையிலும் எனக்கு அவர ரொம்ப பிடிக்கும். அவர் ஆட்சியில ஒரு நாள் கூட அரிசி விலை கூடுனதே இல்ல.

ஒவ்வொரு குடிசைக்கும் இலவச விளக்கு கொண்டு வந்தாரு. மாணவர்கள் செருப்பு போடாம பள்ளிக்கு போறாங்கன்னு இலவச செருப்பு கொண்டு வந்தாரு.

எம்.ஜி.ஆர் சந்திப்பு

ஒருமுறை எம்.ஜி.ஆர் திருநெல்வேலிக்கு 1978 ல பெரியார் நூற்றாண்டு விழாக்காக வந்திருந்தாரு. அப்போ அவரப் பாத்து அவர் கூட பேச வாய்ப்பு கிடைச்சது.

நான் உங்களோட உண்மையான ரசிகன்னு அவர்கிட்ட சொன்னேன். அதுக்கு முன்னாடியே அவர பாக்குறதுக்கு நான் முயற்சி பண்ணி இருக்கேன்.

1967 ல ஜெயலலிதா அம்மாவுடைய நாட்டிய நாடகம்  வி.ஓ.சிங்கிற இடத்துல நடந்தது. ஓபன் கார்ல வந்த எம்.ஜி.ஆரை கார் விளிம்பில நின்னு ஒருமுறை அவர் கைய தொட்டேன். அப்போ ஒரு போலீஸ்காரர் என் கைய அடிச்சு விட்டுட்டாரு. அப்போ எம்.ஜி.ஆர் அந்த போலீஸ்காரரை  கூப்பிட்டு திட்டினார்.

எம்.ஜி.ஆர் இறந்த பின்னும் கூட எப்போதும் அவர் பெயரை சொல்லிட்டு போயிட்டே இருக்கணும்னு நினைச்சேன்.

எம்.ஜி.ஆர் நினைவு நாளில் மௌன விரதம்

இன்னைக்கும் எம்.ஜி.ஆர் நினைவு நாளில் மௌன விரதம் இருப்பேன். எதையும் சாப்பிட மாட்டேன். நான் இப்போ ஒரு ரிட்டயர்டு பி.டி.ஓ.

தாலி பாக்கியம் படத்துல எம்.ஜி.ஆர் பி.டி.ஓ-வாகத்தான் நடிச்சிருப்பார். இரண்டு முறை வேலை வேணாம்ன்னு எழுதிக்குடுத்தும் அந்த படம் பார்த்ததுக்கு அப்பறம் மூணாவது முறையா வேலையில போய் சேர்ந்தேன். அதனால இந்தப்பதவிக்கு வந்ததே எம். ஜி.ஆர் னால தான்னு சொல்லுவேன்.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் 134. 28 படங்கள் ஜெயலலிதாவுடன் நடித்தார். 26 படங்கள் சரோஜாவுடன் நடித்தார். 12 படங்கள் லதாவோடநடித்தார்.

நீலகண்டன் தயாரிப்பில் 17 படங்கள் நடித்தார் .எம்.ஜி.ஆர் நடித்த கலர் படங்கள் 39அரை. அது என்ன அரை ன்னு நீங்க கேட்கக் கூடாது.

ஏன்னா நாடோடி மன்னன் பாதி படம் தான் கருப்புல எடுத்தாங்க. இடைவெளிக்கு அப்புறம் கலர்ல எடுத்தாங்க. இப்பயும் சொல்றேன் எம்.ஜி.ஆரைப்பத்தி யார் என்ன கேட்டாலும் நான் சொல்லுவேன்.

என்ன சில பேரு டிக்கெட் தாத்தா ன்னு கூப்பிடுவாங்க. ஆனா எனக்கு தாத்தா என்று கூப்பிட்டா சுத்தமா பிடிக்காது. நான் இன்னும் இளமையா தான் இருக்கிறேன்.” என இளமை ததும்ப நம்மிடம் உரையாடி முடித்தார். 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *