
நெல்லைக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க-வினர் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் தி.மு.க சார்பாக நகரம் முழுவதும் எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பா.ஜ.க-வினர் கோபமடைந்தனர்.
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதையும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையாற்றி வருகிறார்.
அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துள்ள பாரதிய ஜனதா கட்சியும் இந்தத் தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்புடன் களப்பணிகளைத் தொடங்கியுள்ளது.
அதன்படி பாரதிய ஜனதா கட்சி சார்பாக நெல்லையில் இன்று பூத் கமிட்டி முதல் மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்கிறார். கேரள மாநிலம் கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் மதியம் 2.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வரும் அவர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இறங்குகிறார்.
அங்கிருந்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்குச் செல்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேநீர் விருந்தில் அமித் ஷா கலந்து கொள்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடக்கும் இடத்துக்குச் செல்கிறார்.
வரவேற்பும்.. எதிர்ப்பும்..!
நெல்லைக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை வரவேற்று சாலையின் இருபுறமும் கட்சிக் கொடிகள் நடப்பட்டுள்ளன. அத்துடன் அமித்ஷாவை வரவேற்று பாரதிய ஜனதா கட்சியினர் பிளக்ஸ் பேனர்களையும் சாலையோரங்களில் கட்டியுள்ளனர். அமித் ஷாவை வரவேற்று இந்தியில் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் நெல்லை நகர மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் அரங்கத்தில் உள்ளே பலத்த சோதனைக்குப் பின்னரே கட்சியினர் அனுமதிக்கப்படுகின்றனர். மாநாடு நடைபெறும் பகுதியைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அமித் ஷா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தி.மு.க- வின் நெல்லை மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக நெல்லை மாநகரம் முழுவதும் எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
‘மறக்க.மாட்டோம்.. மறக்கவே மாட்டோம்’ என்ற தலைப்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், “ஒடிசாவை ஒரு தமிழர் ஆளலாமா? ஒடியா பேசக்கூடியவர் தான் ஆள வேண்டும்” என ஒடிசா மாநிலத் தேர்தல் பரப்புரையின்போது அமித் ஷா பேசியதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த போஸ்டர்களைக் கண்டதும் ஆத்திரம் அடைந்த பா.ஜ.க-வினர் அவற்றைக் கிழித்து எரிந்தனர். அத்துடன், அந்த போஸ்டர்களை மறைக்கும் வகையில் அமித் ஷாவை வரவேற்று எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட போஸ்டர்களை ஒட்டினார்கள். இந்தச் சம்பவத்தால் நெல்லையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.