
நடிகர் விஜய்-யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் உரையாற்றிய நடிகர் விஜய் பிரதமர் மோடியையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
கச்சத் தீவை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்றும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனவும் பேசினார்.
இந்த நிலையில், தவெக தலைவரின் பேச்சுக்கு பதிலளித்த பா.ஜ.க-வின் முன்னாள் ஆளுநரும் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, “ த.வெ.க-வின் மாநாடு அரசியல் மாநாடல்ல. அது ஒரு நடிகரைப் பார்க்க வந்த கூட்டம். அதனால்தான் விஜயைப் பார்த்ததும் கூட்டம் கலைந்துப்போகத் தொடங்கியது. அவருடைய பேச்சில் முதிர்ச்சியற்ற தன்மையை பார்க்கிறேன். அவர் கொள்கை எதிரியாக பா.ஜ.க-வை என சொல்கிறார்.
ஆனால் அவருடைய கொள்கை என்ன என்பதை சொல்லவில்லை. கட்சத் தீவை பற்றிப் பேசுகிறார். அதை மீட்கும் நடவடிக்கையில் பிரதமரின் பங்கும் இருக்கும். கட்சத் தீவைப் பற்றிப் பேசியவர் ஏன் காங்கிரஸ் குறித்துப் பேசவில்லை.
தீவிரவாதத்துக்கு எதிராக பிரதமர் மோடியின் நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது. ஒரு சார்புடன் பேசக்கூடாது. ஒரு திரைப்படத்தை பார்த்த மகிழ்ச்சியில் எல்லோரும் கைத்தட்டிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
பெண்களின் சிந்தூர் பாதிக்கப்படக் கூடாது என உலகம் முழுவதும் இந்த நாட்டு மக்களின் சோகத்தில் பங்கெடுத்து பயணம் செய்த பிரதமர் சொகுசு பயணம் மேற்கொள்வதாகப் பேசுகிறார்.
ஆபரேஷன் சிந்தூரை நடத்தி, இந்த நாட்டை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக அழைத்துச் செல்கிறார் பிரதமர் மோடி.

கொரோனா காலத்தில் பிரதமர் இல்லை என்றால் நடிகர் விஜய்க்கு கூட வேக்சினேஷன் கிடைத்திருக்காது. எல்லாவற்றையும் நன்றியோடு நினைவு கூற வேண்டும்.
தன்னை சிங்கம் எனச் சொல்லிக் கொள்கிறார். அரசியல்வாதிகள் எல்லோரும் புத்திசாலிகள் அல்ல, நடிகர் எல்லோரும் முட்டாள்கள் அல்ல எனப் பேசுகிறார். இப்படியெல்லாம் யார் சொன்னது?
அவராக ஒன்றை கற்பனை செய்துப் பேசுகிறார். தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டியதில்லை. ஆனால், அந்தத் தண்ணீரில்தான் தாமரையே மலரும். நடிகர் விஜய் விரைவில் அரசியல் தலைவராக மாற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.