
மதுரை: நாமக்கல் சிறுநீரக திருட்டு புகாரையடுத்து, தற்போதுள்ள உடல் உறுப்பு மாற்று ஒப்புதல் குழுவை கலைத்துவிட்டு, புதிய குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறித் தொழிலாளர்கள், ஏழை தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டுள்ளன.
இருப்பினும் சிறுநீரகத் திருட்டு தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினருக்கு தொடர்புள்ளது. இதனால் மாநில போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சிறுநீரக திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.