• August 22, 2025
  • NewsEditor
  • 0

உலக தொழில் முனைவோர் தினத்தையொட்டி தேனி சின்னமனூரில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் சார்பில் தொழில் முனைவோர் தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 10-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு தாங்கள் தயாரித்த இயற்கை முறையிலான உணவு பொருள்களை விற்பனை செய்தனர். இதை பார்வையிட்ட வருவாய் கோட்டாட்சியர் சில பொருள்களை வாங்கினார்.

உலக தொழில் முனைவோர் தின விழா

விழாவில் பேசிய சென்டெக்ட் வேளாண் மையத்தின் சேர்மேன் பச்சைமால் “தொழில் முனைவோர்கள் அதிகமாகியிருப்பதால் தான் இந்தியாவில் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிக்கிறது. வெளி நாடுகளில் இறக்குமதி செய்து கொண்டிருந்த பொருள்களை தற்போது இந்தியாவிலேயே தயாரித்து வருகிறோம். சென்டெக்ட் சார்பில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்து அந்த கிராமத்தின் விவசாயிகளை இரண்டு மடங்கு லாபம் பெற செய்திருக்கிறோம்” என்றார்.

இதை தொடர்ந்து பேசிய உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது , ” தொழில் முனைவோர்களை உருவாக்க என்ன உதவி வேண்டுமானலும் எங்களை தொடர்பு கொள்ளலாம். மாநில அரசின் திட்டங்களையும் மானியங்களையும் தகுதியான நபர்களுக்கு கொடுப்பதற்கான வேலைகளை செய்யலாம்” என்றார்.

மாவட்ட தொழில் மையத்தின் உதவி இயக்குநர் மோகன்ராஜ் பேசும் போது, “தொழில் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடனுதவி வழங்கபடுகிறது. மத்திய அரசு நிறைய கடனுதவிகள் மானியங்களுடன் கொடுக்கிறது.

உலக தொழில் முனைவோர் தின விழா

குறிப்பாக பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறுந்தொழில்கள் முறைப்படுத்தும் திட்டத்தின் (PMFME) கீழ் 10 இலட்சம் 35 சதவீத மானியத்துடன் கடன் கிடைக்கும். கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் 25 வகையான தொழில்களுக்கு அதிகபட்சம் 3 இலட்சம் வரை கடன் பெறலாம். இதில் 50 ஆயிரம் வரை மானியம் மற்றும் வட்டிக்கும் மானியம் தருகிறோம்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளும், தொழில் முனைவோர்களும் கலந்து கொண்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *