• August 22, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்கா இந்தியா மீது 25 சதவிகித வரி விதித்ததில் இருந்து, அமெரிக்கா – இந்தியா உறவில் சற்று விரிசல் விழுந்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து இந்தியாவைத் தொடர்ந்தும், இன்னமும் விமர்சித்து வருகிறது அமெரிக்கா.

இந்த நிலையில், இந்தியாவின் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நிக்கி ஹேலி.

இவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கட்சியான குடியரசுக் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

அவர் கூறியிருப்பது என்ன?

அமெரிக்க செய்திதாள் ஒன்றிற்கு அவர் எழுதியுள்ள கட்டுரையில், “அமெரிக்கா சீனாவைப் போல, இந்தியாவை எதிரியாக கருதக்கூடாது.

ட்ரம்பின் அரசாங்கம் வணிக வரிகளையோ, இந்தியா – பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தையையோ, உலகின் மிகப்பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளான இந்தியா, அமெரிக்கா உறவில் விரிசல் உருவாக்க விடக்கூடாது.

நிக்கி ஹேலி

இந்தியா ‘இப்படி’ நடத்தப்படக்கூடாது!

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை கொள்கைகளை முழுமையாக்கவும், சீனாவிற்கு சவாலாக அமையவும், வலிமை மூலமாக அமைதியை நிலைநாட்டவும், ட்ரம்ப் அரசாங்கம் அமெரிக்கா – இந்திய உறவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான மற்றும் ஜனநாயக கூட்டாளியாக கருத வேண்டும். ரஷ்யாவில் இருந்து அதிக அளவு எண்ணெய் வாங்குவதற்காக விதிக்கப்படும் வரிகளில் இருந்து தப்பிக்கும் சீனாவைப் போல, இந்தியா நடத்தப்படக்கூடாது.

தவறு ,முடியாது

ஆசியாவில் சீனாவின் அதிகாரத்தை பேலன்ஸ் செய்யும் ஒரே நாடான இந்தியாவின் உறவில் 25 ஆண்டுகால முன்னேற்றத்தை சீர்குலைப்பது ஒரு கடுமையான தவறாகும்.

ட்ரம்பின் அரசாங்கம் அமெரிக்காவின் உற்பத்தி சாலைகளை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டுவர நினைக்கிறது. ஜவுளித்துறை, குறைந்த விலை செல்போன்கள், சோலர் பேனல்கள் போன்றவற்றை சீனா அளவிலேயே தயாரிக்க முடிகிற ஒரே நாடு இந்தியா தான்.

அமெரிக்காவால் அவ்வளவு வேகமாகவும், குறைந்த விலையிலும் செய்ய முடியாது.

இந்தியா - அமெரிக்கா
இந்தியா – அமெரிக்கா

இந்தியா முக்கியமானது!

அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் தனது ராணுவ மற்றும் நிதி இருப்பை குறைத்து வருகிறது. இந்த நிலையில், அந்த நாடுகளில் வளரும் இந்தியாவின் செல்வாக்கு மற்றும் அதன் பாதுகாப்பு பங்கு, அந்த நாடுகளை நிலைப்படுத்தலாம்.

சீனாவின் முக்கிய வர்த்தக மற்றும் எரிசக்தி வழிகளில், இந்தியா அமைந்திருப்பது, சீனாவின் ஓங்குதலை கட்டுப்படுத்தக்கூடும்.

நீண்டக்கால அடிப்படையில் பார்த்தால், இந்தியாவின் பங்கு மிக முக்கியத்துவமானது.

டோனால்ட் டிரம்ப்

2023-ம் ஆண்டு, உலகளவிலான அதிக மக்கள்தொகை பட்டியலில் சீனாவைத் தாண்டிவிட்டது இந்தியா. சீனாவின் அதிக வயதான மக்கள் தொகையைப் போல அல்ல இந்தியாவினுடையது. இந்தியாவின் மக்கள்தொகை அதிக இளைஞர்களைக் கொண்டதாகும்.

இந்தியா வளர வளர, சீனாவின் வளர்ச்சி சுருங்கும். கம்யூனிஸ்ட் சீனாவைப்போல அல்லாமல், வளரும் ஜனநாயக நாடான இந்தியா, உலகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை” என்று எழுதியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *