
காஞ்சிபுரம்: “அதிமுக இப்போது யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். பாவம்… அறியாமையின் காரணமாக பேசுவாதாக இதைப் பார்க்கிறேன்” என்று தவெக தலைவர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை தவெக மாநாட்டில் அதிமுக குறித்து விஜய் பேசியதற்கு, பதிலடி தரும் வகையில் தனது பிரச்சாரக் கூட்டத்தில் இன்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக மக்களுக்கு சேவை செய்ய தொடங்கப்பட்ட இயக்கம். தீயசக்தி திமுகவை வீழ்த்த இந்த கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் எண்ணத்தை நிகழ்த்திக் காட்டியவர் எம்ஜிஆர். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மறைந்தாலும் மக்கள் மனதில் பூமி உள்ளவரை நிலைத்து நிற்பார்கள். எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றியவர்கள்.