• August 21, 2025
  • NewsEditor
  • 0

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்றது.

இம்மாநாட்டில், தே.மு.தி.க-வை நிறுவிய மறைந்த நடிகரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தைக் குறிப்பிட்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், “நான் இந்த மண்ணில் கால் எடுத்து வைத்ததும் ஒரே ஒருத்தரை பற்றிதான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

அவர் யார் என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும். சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது எம்.ஜி.ஆர் தான். அவரோடு பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

TVK மதுரை மாநாடு – விஜய்

ஆனால், அவர் மாதிரியே குணம் கொண்ட என் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு பழகுவதற்கு நிறையவே வாய்ப்பு கிடைத்தது.

அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர் தானே அவரை மறக்க முடியுமா” என்று கூறினார்.

இந்த நிலையில், விஜய் இவ்வாறு பேசியிருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தம்பி என்கிற எண்ணத்தில் பேசியிருக்கிறார். அவர் எப்போதும் எங்கள் வீட்டு பையன்.

பல்வேறு படங்களில் கேப்டனின் சிறுவயது கேரக்டர்களை விஜய்தான் பண்ணியிருக்கிறார். எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் கேப்டனுக்குமான உறவு என்பது, கேப்டனை வைத்து 17 படங்களை அவர் இயக்கியிருக்கிறார்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

இன்றைக்கு அரசியலுக்கு வந்ததனால் அண்ணன் தம்பி என்று இல்லை. கேப்டன் சினிமா துறையில் காலடி வைத்ததிலிருந்து இன்றைக்கு வரைக்கும் அந்த நட்பு அப்படியே தொடர்கிறது.

விஜய்யின் படத்துக்கு கூட கேப்டனின் ஏஐ பயன்படுத்த அனுமதி கொடுத்தோம். ஒரு வாரத்துக்கு முன்னாடி அனுமதி இல்லாமல் கேப்டனின் புகைப்படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறியிருந்தேன்.

அதற்கு காரணம் கேப்டன் எம்.ஜி.ஆரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர். அந்த மாதிரி விஜய்யும் சொல்லட்டும். இப்போது அண்ணன் என்று சொல்லியிருக்கிறார்” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *