
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற்றது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு தொடங்கி கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார், கட்சியின் திட்டம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.
இதில் விஜய் பேசும்போது, “சினிமாவிலும், அரசியலிலும் எனக்கு மிகவும் பிடித்தவர் எம்ஜிஆர். அவரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை ஆனால், அவருடைய குணம் கொண்ட இந்த மதுரை மண்ணில் பிறந்த விஜயகாந்த்துடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரை என்றும் மறக்க முடியாது. தமிழகத்தில் எம்ஜிஆர் ‘மாஸ்’ தலைவர். தனது எதிரியைக் கூட கெஞ்ச வைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அந்தக் கட்சியை இப்போது கட்டிக் காப்பது யார்? அது எப்படி இருக்கிறது. அந்தக் கட்சியின் அப்பாவி தொண்டர்கள் வேதனையில் தவிக்கிறார்கள்” என்றார்.