
நீதிபதி பிராங்க் கேப்ரியோ சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். அமெரிக்காவில் உள்ள ரோட் தீவைச் சேர்ந்த இவர் கனிவான விசாரணைக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.
88 வயதான இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாள் போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்துள்ளார்.
கோர்ட்ரூம் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், வழக்குகளை பரிவுடனும் மனிதாபிமானத்துடன் கையாளும் விதம் உலகம் முழுவதுமுள்ள மக்கள் மனங்களை வென்றது.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உயிரிழப்பு செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் “ஒரு மரியாதைக்குரிய நீதிபதியாக மட்டுமல்லாமல் அர்ப்பணிப்புள்ள கணவர், தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா மற்றும் நண்பராகவும் நினைவுகூறப்படுவார்” எனக் கூறப்பட்டுள்ளது.
`பிரார்த்தனைகளின் சக்தியை நம்புகிறவன் நான்’
இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஃபாலோவர்களுக்காக இறுதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த ஆண்டு நீங்கள் எல்லோரும் எனக்காக பிரார்த்திக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொண்டேன். நீங்கள் நிச்சயமாக செய்தீர்கள்.
ஆனால் நான் கடுமையான சூழலை கடந்து வருகிறேன். உடல் நலத்தில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டு இப்போது மருத்துவமனையில் இருக்கிறேன்.

மீண்டும் உங்களிடம் எனக்காக வேண்டிக்கொள்ளுமாறு கேட்கிறேன். உங்களால் முடிந்தால் உங்கள் பிரார்த்தனைகளின்போது என்னை நினைவு கொள்ளுங்கள்,
நான் பிரார்த்தனைகளின் சக்தியை முழுமையாக நம்புகிறவன். நமக்கு மேலிருக்கும் எல்லாம் வல்லவர் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதனால் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.” எனப் பேசியிருந்தார்.
நீதிபதி பிராங்க் கேப்ரியோ “நீதி என்பது நியாயமாகவும், கனிவாகவும், கண்ணியத்திலும் மரியாதையிலும் வேரூன்றியதாகவும் இருக்க வேண்டும்” என நம்புபவர்.
1985 முதல் 2023-ல் ஓய்வு பெறும் வரை நகராட்சி நீதிபதியாகப் பணியாற்றினார். அமெரிக்காவின் மிகச் சிறந்த நீதிபதி என்ற பெயரை சம்பாதித்துள்ளார்.
தீர்ப்பு வழங்கும்போது அவர் கைதிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் நடத்தும் விதம் மட்டுமல்லாமல் அவர் கூறும் அறிவுரைகளும் அவரைப் பின்தொடர்பவர்கள் அதிகரிக்க காரணம்.