
துபாயில் எமிரேட்ஸ் விமானச் சேவையில் பணியாற்றும் ஜைனப் ரோஷ்னா என்ற பெண் தனது பாட்டியை ஆச்சரியப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளன்று கேரளா சென்றுள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
வைரலாகும் வீடியோவின்படி, ஜைனப் வீட்டுக்குள் நுழைகிறார், தனது பாட்டியின் கையில் தங்க வளையலை அணிவிக்கிறார். முதல் முறையாக தங்கப் பரிசு கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைந்த அவர், “இது எனது முதல் தங்கப் பரிசு என்பதால், நேரில் வந்து கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதற்காகவே துபாயிலிருந்து கேரளா வந்தேன்” எனக் கூறியிருக்கிறார்.
இதில் நெகிழ்ந்துபோன பாட்டி, பேரன்புடன் ஆசீர்வாதங்கள் கூறி, பேத்தியின் கன்னத்தில் முத்தமிட்டார். இந்த வீடியோ பலரின் மனங்களை நெகிழச் செய்துள்ளது. இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமீப காலங்களில் குடும்பப் பாசத்தை வெளிப்படுத்தும் இத்தகைய வீடியோக்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சில வாரங்களுக்கு முன்பும், எமிரேட்ஸ் விமானச் சேவையில் பணிபுரியும் மற்றொரு பணிப்பெண், தனது பாட்டி-தாத்தாவை விமானத்தில் ஆச்சரியப்படுத்திய வீடியோ வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.