
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி காரணமாக மூடப்பட்டிருந்த 3, 4-வது நடைமேடைகள் ஓரிரு நாளில் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, மன்னை, செந்தூர் விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்பட உள்ளன. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடியில் மறுசீரமைப்பு பணி நடந்து வருகிறது. இங்கு பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் அமைப்பது உட்பட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
இதுதவிர, 1 முதல் 11-வது நடைமேடை வரை இணைப்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணிகளும் தொடங்கின. இதையொட்டி, முதல்கட்டமாக, கடந்த ஜூன் முதல் வாரத்தில் 1, 2-வது நடைமேடைகளும், பின்னர் 3, 4-வது நடைமேடைகளும் மூடப்பட்டன. இதனால், எழும்பூரில் இருந்து மன்னார்குடி செல்லும் மன்னை விரைவு ரயில், திருச்செந்தூர் செல்லும் செந்தூர் விரைவு ரயில் உட்பட 6 ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றப்பட்டன. எழும்பூர் – புதுச்சேரி விரைவு ரயில் உள்ளிட்ட சில ரயில்கள் கடற்கரை நிலையத்துக்கு மாற்றப்பட்டன.