
கணவனைவிட மனைவி வயது கூடுதலாக இருப்பது தற்போது சகஜமாகிக்கொண்டு வருகிறது. அந்தக் காலத்தில் உறவு விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக இது பெற்றோர்களாலே நடத்தி வைக்கப்பட்டது. இந்தக் காலத்தில் காதல் திருமணங்களில் இது சகஜமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
அதில் சிலருக்கு வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்தால் குழந்தை பிறக்காதோ என்கிற சந்தேகம் இருக்கிறது. அதற்கான பதிலை இங்கே சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.
”அந்த இளம் தம்பதியர் என்னை சந்திப்பதற்கு வந்திருந்தனர். கூடவே, அந்த ஆணுடைய பெற்றோரும். தங்கள் மகன் அவனைவிட வயது அதிகமானப் பெண்ணை திருமணம் செய்ததால்தான், அவர்களுக்கு இன்னும் குழந்தை உண்டாகவில்லை என்றார்கள். அவர்களை வெளியே அமர சொல்லிவிட்டு, அந்த இளம் தம்பதியரிடமும் தனித்தனியாகப் பேசினேன்.
அவர்களுக்குத் திருமணமாகி ஜஸ்ட் ஒரு வருடம்தான் ஆகியிருக்கிறது. அந்தப்பெண், கணவனைவிட 3 வயது மூத்தவள். காதலித்துத் திருமணம் செய்திருக்கிறார்கள்.
இந்த வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி திருமணத்தை தடைசெய்ய முயற்சி செய்திருக்கிறார்கள் கணவனின் வீட்டார். ஆனால், இவர்கள் உறுதியாக இருந்து திருமணம் செய்திருக்கிறார்கள்.
இப்போது திருமணமாகி ஒருவருடம் ஆன நிலையில், ‘நம்ம குடும்பத்துல எல்லாம் கல்யாணமான ஒரு வருஷத்துலேயே பொண்ணுங்க கர்ப்பமாகிடுவாங்க. ஆனா, உன் மனைவி உன்னைவிட மூத்தவங்கிறதாலதான் அவ இன்னும் கர்ப்பமாகலை’ன்னு சொல்லியிருக்காங்க.

இந்த விஷயம் தெரிய வந்ததும், அந்தப் பெண் உடனே மகப்பேறு மருத்துவரைப் பார்த்து, அவர் குழந்தைப் பெறுவதற்கான உடல் ஆரோக்கியத்தோடுதான் இருக்கிறார் என்பதை உறுதிபடுத்தியதோடு அதை கணவர் வீட்டாரிடம் தெரிவித்திருக்கிறார். கூடவே, ‘என்னிடம் எந்தக் குறையும் இல்லை. உங்கள் மகனையும் செக் செய்ய சொல்லுங்கள்’ என்றிருக்கிறார். அதனால்தான், குடும்பமாக வந்திருக்கிறார்கள்.
உங்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே ஆகியிருப்பதால், இவ்வளவு சீக்கிரம் குழந்தைப்பற்றி யோசிக்காமல் உங்கள் செக்ஸ் லைஃபை நன்றாக என்ஜாய் செய்யுங்கள். தினமும் உறவுகொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு குழந்தைப்பேறை ஏற்படுத்தி கொடுத்துவிடும் என்றேன். ‘என்னைவிட என் மனைவியின் வயது அதிகமாக இருப்பதால்தான் இன்னும் கருத்தரிக்கவில்லை என்கிறார்களே’ என்றவரிடம், விளக்கமாக பேசினேன்.

நம்முடைய சமூகத்தில் பெரும்பாலும் மனைவியைவிட கணவன் வயது அதிகமானவராக இருப்பார். கணவனைவிட மனைவிக்கு வயது குறைவாக இருந்தால், ‘நம்மளைவிட சின்னவ’ என்று கணவன் மனைவியின் குறைகளை அனுசரித்துப் போவான். மனைவி கணவரிடம் ‘நம்மளவிட பெரியவர்’ என்கிற மரியாதையுடன் நடந்துகொள்வார். இதனால், குடும்பத்தில் பிரச்னை வராது என நம்பி நம் முன்னோர்கள் இதை செய்திருக்கலாம்.
வீட்டுப் பொறுப்பு, குழந்தைகள் வளர்ப்பு, கூடவே கணவனையும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றால், மனைவி வயதில் சிறியவராக இருந்தால்தான் முடியும் என்கிற ஆணாதிக்க மனப்பான்மைகூட இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், இன்றைக்கு கணவனும் மனைவியும் சம வயதாக இருப்பதும், கணவனைவிட மனைவி வயது கூடுதலாக இருப்பதும் சகஜமாகி விட்டது.
கணவனுக்கு வயது அதிகமாகவும், மனைவிக்கு வயது குறைவாகவும் இருக்கையில் எப்படி குழந்தைப் பிறக்குமோ, அதேபோல கணவனுக்கு வயது குறைவாகவும் மனைவிக்கு வயது அதிகமாகவும் இருந்தால்கூட குழந்தைப் பிறக்கும். அதற்கு உங்களுடைய தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதும் என்றேன்.
குழந்தையில்லாத பிரச்னையை என் பெற்றோர் எழுப்புவதற்கு முன்னால் வரை, நாங்கள் தாம்பத்திய உறவில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம் டாக்டர் என்றவருக்கு, விறைப்புத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கை எல்லாமே நார்மலாகவே இருந்தன. மகிழ்ச்சியாக இருங்கள் என்று வாழ்த்தி அனுப்பினேன் என்றார் டாக்டர் காமராஜ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…