
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் உள்ள பாரபத்தியில் நடைபெறவுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டை விட பிரம்மாண்டமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்காக 500 ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறு தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டில் விஜய் ரேம்ப் வாக் செய்யும் வகையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. திடல் முழுவதும் இருந்து தொண்டர்கள் நிகழ்ச்சியைப் பார்க்கும் வகையில் 140 எல்.ஈ.டி திரைகள் போடப்பட்டுள்ளன.
முன்னதாக மாநாடு 4 மணிக்குத் தொடங்கி 7 மணிக்கு முடிவடையும் எனக் கூறப்பட்டது. ஆனால் தொண்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் முன்கூட்டியே தொடங்க திட்டமிட்டுள்ளனர். விஜய் சுமார் 5 மணியளவில் பேசுவார் எனக் கூறப்படுகிறது.
இன்று காலை முதலே தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வருகை தர தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு நிர்வாகிகள் சார்பில் ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.
விஜய்யின் பேச்சுக்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது. மாநாட்டு திடலில் சுமார் 1.5 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மேலும் இருக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தொண்டர்கள் நின்றுகொண்டு பார்க்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 80,000 வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்யப்படுள்ளது.
மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன. மருத்துவ பணியில் சுமார் 600 பேர் ஈடுபட உள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், இந்த மாநாடு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மாநாட்டைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் விஜய். அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பாப்பு நிலவுகிறது.
மாநாட்டின் பிரதான பதாகையில் எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. விஜய் ரேம்ப் வாக் செய்யும்போது சித்திரை திருவிழாவுக்கு போடப்படும் வாராரு வாராரு என்ற விஜயகாந்த் பாடலை போட வேண்டுமென மதுரை தொண்டர்கள் கோரிக்கை எல்லாம் வைத்து வருகிறார்களாம்.