
Doctor Vikatan: ஒரு காலத்தில் குங்குமாதி தைலத்துக்கு இருந்தது போல இப்போது பலரும் மஞ்சிஷ்டா எண்ணெய், மஞ்சிஷ்டா சோப் என தேடித்தேடி உபயோகிக்கிறார்கள். மஞ்சிஷ்டா என்பது என்ன, அது எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளுமா, எப்படி உபயோகிக்க வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர், மூலிகைமணி அபிராமி
சம்ஸ்கிருதத்தில் ‘மஞ்ஜிஷ்டா’ என்றும் தமிழில் ‘மஞ்சட்டி’ என்றும் இதைச் சொல்வோம். மஞ்சட்டியின் வேர், சிவப்பு நிறத்தில் இருக்கும். அதிலுள்ள சிவப்பு நிறமிக்காக அந்தக் காலத்தில் டெக்ஸ்டைல் பிரின்ட்டிங், பெயின்ட் போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதை நிறைய தைலங்கள் மற்றும் வெளிப் பிரயோக மருந்துகளில் பயன்படுத்துவதுண்டு.
மஞ்ஜிஷ்டா என்பது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஒருவகையான வேர். மலைப்பிரதேசத்தில் விளையக்கூடிய காபி போன்ற செடியின் வேர் இது.
சருமத்துக்கான தைலங்கள் மற்றும் புண்களை ஆற்றும் தைலங்களில் வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்துவோம்.
பிக்மென்ட் எனப்படும் மங்கு பாதிப்பைக் குறைக்கும் ஆற்றல் மஞ்ஜிஷ்டாவுக்கு உண்டு என்பதால்தான் சமீப காலமாக இதற்கான வரவேற்பு அதிகமிருக்கிறது.
மஞ்சட்டி வேரைப் பயன்படுத்த ஆரம்பித்தால், சரும நிறம் சீராகும். மஞ்ஜிஷ்டா வேர் சேர்த்த தைலத்தை சருமத்தில் பயன்படுத்த ஆரம்பித்தால், ஆங்காங்கே காணப்படும் சரும கருமை மாறும்.

வீட்டிலேயே தயாரிக்கப்படும் சோப் மற்றும் தைலங்களில் மஞ்ஜிஷ்டா பயன்படுத்துவது சோஷியல் மீடியாவிலும் பிரபலமாகி வருகிறது.
கால்களில் புண்களை ஏற்படுத்தி, நிறத்தை மாற்றும் வேரிகோஸ் வெயின்ஸ் பிரச்னைக்கும் இந்த வேர் பயன்படும். சித்த மருத்துவத்தில் இந்த வேரை உள்ளுக்குக் கொடுக்கும் சில மருந்துகளிலும் பயன்படுத்துவோம். ஆனால், அந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை, ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தவே கூடாது.
100 கிராம் தேங்காய் எண்ணெயில் 10 கிராம் மஞ்ஜிஷ்டா வேரை நசுக்கிச் சேர்த்து சூடு செய்ய வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துதான் காய்ச்ச வேண்டும். எண்ணெய் தீய்ந்துவிடக்கூடாது. காய்ச்சிய எண்ணெயை ஆறவைத்து சருமத்தில் தடவி வரலாம்.
இப்படிச் செய்யவெல்லாம் நேரமில்லை என்பவர்கள், சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் சிவப்பு குக்கிலி எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதில் மஞ்சட்டி மட்டுமன்றி, குங்கிலியம், தேன்மெழுகு போன்ற வேறு சில பொருள்களையும் சேர்த்திருப்பார்கள்.

இதில் சில துளிகளை சருமத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிய பிறகு குளித்து வந்தால் சரும அழகு மேம்படும். மெனோபாஸ் காலத்தில் நிறைய பெண்களுக்கு சருமத்தில் மங்கு பிரச்னை வரும். அவர்கள் இந்த எண்ணெயை உபயோகிக்கலாம். அதே போல வெயில் பட்டுக் கருத்துப்போன சருமத்தின் நிறத்தை மாற்றவும் பயன்படுத்தலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்: அதற்கான பதில்கள் தினமும் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.