
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு மசோதாக்கள் மீது ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க கால வரம்பு நிர்ணயம் செய்திருந்தது. நாடு முழுவதும் இந்த தீர்ப்பு பெரும் விவாத பொருளாக மாறிய நிலையில் இந்த தீர்ப்பு குறித்து 14 கேள்விகளை முன்வைத்து குடியரசு தலைவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்த கடிதத்தை மனுவாக மாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக அதைப் பட்டியலிட்டு இருந்தார்.
அம்பேத்கரின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா?
இந்த மனு மீதான விசாரணை இரண்டாவது நாளாக இன்றைய தினமும் முன்வைக்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேத்தா, “அரசியல் சாசனம் ஆளுநருக்கு சில அதிகாரங்களை வழங்கி இருக்கிறது. இவ்வாறு அதிகாரங்கள் வழங்கப்படுவது இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையின் விவாதத்தின் போதும் முன்வைக்கப்பட்டது. ஆளுநர்களுக்கு இவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்காது என்பது அரசியல் சாசன நிர்ணய சபை தலைவர் அம்பேத்கர் அவர்களின் கருத்தாக இருந்தது.” என வாதங்களை முன் வைத்தார்
அப்போது பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “அவ்வாறு முரணாக இருக்காது என்ற அரசியல் நிர்ணய சபை மற்றும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறி இருக்கிறதா, இல்லையா என்பதை தான் நாம் இந்த இடத்தில் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், அரசியல் நிர்ணய சபை பல்வேறு அம்சங்களையும் அலசி ஆராய்ந்து தான் முதல்வர் மற்றும் ஆளுநர் என்ற இரண்டு அதிகார மையங்களை வகுத்தனர். ஆனால் ஆளுநர் தனக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தை பயன்படுத்தி செயல்படும்போது அது அரசின் நிகழ்வுகளுக்கு எதிராக அமைந்தால் சிக்கல் எழும். அவ்வாறு சிக்கல் எழுந்தால் உச்ச நீதிமன்றத்தை நாடுவார்கள் அப்போது நாங்கள் அதை ஆளுநரின் செயல்பாடுகள் சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வுக்கு உட்படுத்துவோம்.” என கூறினார்.

ஆளுநரை தபால்காரர் போல கையாள்வதா?
அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, “இந்தியா என்பது பழமையான ஜனநாயக நாடு. அரசியல் சாசனத்தின் கீழ் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து திறமையாக செயல்படுகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் அரசியல் சாசனத்தின் கீழ் இயங்கும் அத்தனை அமைப்புகளும் ஒன்றாக இணைந்து நேர்த்தியாக வேலை செய்தோம். ஆங்காங்கே சிறு பிரச்சனைகள் இதில் ஏற்படும் ஆனால் அது ஒன்றும் அவ்வளவு மோசமானது கிடையாது. ஒரு மசோதாவை நிறுத்தி வைக்கவும் அதற்கு ஒப்புதல் வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. அதை விட்டுவிட்டு அவரை ஒரு தபால்காரர் போல கையாள்வது நிச்சயம் ஏற்க முடியாது.” என வாதங்களை முன் வைத்தார்.
அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், “ஒரு சட்டப்பேரவை இரண்டாவது முறையாக ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், அதற்கு ஒப்புதல் வழங்குவதை தவிர ஆளுநருக்கு வேறு எந்த வழியும் கிடையாது. ஆனால் அதை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக மசோதாக்கள் மீது எந்த முடிவு எடுக்காமல் கால வரம்பு இல்லாமல் அப்படியே கிடப்பில் போட்டு வைப்பதை எப்படி பார்ப்பது? மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதும் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதும் நிறுத்தி வைப்பதும் அவருக்கு இருக்கக்கூடிய அதிகாரங்கள் தான். ஆனால் அதில் அவர் காலதாமதம் செய்யும்போது அது பிரச்னையாக மாறுகிறது.” என மீண்டும் தெளிவுபடுத்தினர்

மசோதா காலாவதி ஆகும் வரை நிறுத்தி வைக்க முடியும்?
அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, “1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் பிரிவு 75 இன் கீழ் ஒரு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவிற்கு ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது கட்டாயம் என்று கிடையாது. ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பதன் மூலம் அதை நிராகரிக்கும் அதிகாரத்தை ஆளுநர் பெறுகிறார். ஒரு மசோதாவை மறுபரிசீலனை செய்ய சட்டமன்றத்துக்கு தான் கால அவகாசம் இருக்கிறதே தவிர ஆளுநருக்கு எந்த கால வரமும் கிடையாது.” என பதில் வாதங்களை வைத்தார்.
“அப்படி என்றால் என்ன பொருள்” என நீதிபதிகள் கேட்டபோது, “ஒரு மசோதா தானாகவே காலாவதி ஆகும் வரை ஆளுநரால் அந்த மசோதாவை நிறுத்தி வைக்க முடியும்.” என மத்திய அரசு பதிலளித்தது.
ஆனால் அதை முழுமையாக ஏற்க மறுத்த நீதிபதிகள், “ஒரு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டாலே அது செயலிழந்து விட்டது என நீங்கள் கூறுவதை ஏற்க முடியாது. அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசானது ஆளுநரின் விருப்பப்படி தான் செயல்படும் என நீங்கள் சொல்ல வருகிறீர்கள். தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக கூறினார். ஆனால் ஏன் நிறுத்தி வைக்கிறேன் என்றால் எந்த ஒரு காரணத்தையும் அவர் அரசிடம் தெரிவிக்கவில்லை. இதை எப்படி ஏற்றுக் கொள்வது?” என நீதிபதிகள் கேட்டனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை விட குறைவானவர் இல்லை?
அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, “மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை விட எந்த வகையிலும் குறைவானவர் கிடையாது. ஏனென்றால் ஆளுநருக்கு என்று அரசியல் சாசனம் அதிகாரங்களை வழங்கி இருக்கிறது. அதை பறிக்கும் வகையில் யாரும் எதையும் செய்ய வேண்டாம். ஆளுநர் அவரது ஞானத்தை பயன்படுத்தி செயல்படக் கூடியவர். அவரை தபால்காரர் போன்று சித்திரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.” என கூறினார்.
அப்போது மீண்டும் பேசிய நீதிபதிகள், “அரசியல் சாசனம் கொண்டுவரப்பட்டபோது சபாநாயகர் என்பவர் நடுநிலையாக இருப்பவராக அறியப்பட்டார். ஆனால் காலப்போக்கில் அரசியல் எதார்த்தங்களின் அடிப்படையில் சபாநாயகர்களின் செயல்பாடுகள் மாறிக்கொண்டே வந்தது. அதனால் தான் சமீபத்தில் சபாநாயகர்களின் அதிகாரத்தின் மீது ஆய்வு செய்யும் வகையில் தெலங்கானா சபாநாயகர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது. நமது அரசியல் சாசனம் என்பது சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்தும் போது தான் சிக்கல் ஏற்படுகிறது. சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் எப்படி காலதாமதம் செய்கிறார்களோ, அதே போல கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தின் போது சபாநாயகர்கள் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்கிறார்கள். இப்படி காலதாமதம் செய்து கொண்டே இருந்தால் ஆப்ரேஷன் சக்சஸ் பட் பேஷண்ட் டெட் என்ற நிலைதான் ஏற்படும்.” என்றனர்.
இன்றைய அலுவல் நேரம் முடிந்ததை அடுத்து வழக்கு விசாரணை நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது