• August 20, 2025
  • NewsEditor
  • 0

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவின் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கும் சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றியிருப்பதாக இந்தியா கூட்டணி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது.

அதில் மிக முக்கியமானது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த சந்தேகங்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்திருக்கிறார்.

இந்த மாதம் 7-ம் தேதி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து, “2024-ம் ஆண்டு பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில், சுமார் 1 லட்சம் “போலி வாக்காளர்களை” கண்டறிந்திருக்கிறோம். நாடு முழுவதும் தேர்தல் முடிவுகளைத் திருட போலி முகவரிகள், நகல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.

ராகுல் காந்தி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ராகுலின் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார். ஆனாலும் எதிர்க்கட்சிகள், “வாக்காளர் மோசடி குறித்த விசாரணைக்கான திசைதிருப்பும் முயற்சி” என்று விவரித்தது.

அதைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணி நடத்தியது. அப்போது ராகுல் காந்தி, “நாட்டில் சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறையை உறுதி செய்து, அரசியலமைப்பு கடமையை நிறைவேற்ற வேண்டிய தேர்தல் ஆணையம் முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது.

வாக்காளர் மோசடி குறித்த அர்த்தமுள்ள விசாரணையைக் கூட திசைதிருப்புகிறார்கள். மோசடியை வெளியே கொண்டுவந்த எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார்கள்” என்றார்.

இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தேர்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை இந்தியா கூட்டணி முன்மொழிவது குறித்து பரீசீலிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தேர்தல் ஆணையம்:

ஒவ்வொரு தேர்தலின்போதும், ஆள்பவர்களின் எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் நேர்மையான முறையில் தேர்தல் நடப்பதை உறுதிப்படுத்தவே உறுதியான, அதிகாரமிக்க அமைப்பாக தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டம் – ராகுல் காந்தி – மோடி

தேர்தல் ஆணையர் நியமனம்:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணையர்களை எவ்வாறு நியமனம் செய்வது என்பதற்கான வழிமுறைகள் எதுவும் வகுக்கப்படவில்லை.

இருப்பினும், அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 324 (2)ன் படி, தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்து நியமிப்பதற்கு நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்.

அதுவரை, தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் பொறுப்பை குடியரசுத்தலைவர் மேற்கொள்ள வேண்டும் என விளக்கப்பட்டிருக்கிறது. அதன்படியே தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டு வந்தார்.

தேர்தல் ஆணையர்:

தேர்தல் ஆணையராக நியமிப்பதற்கு முன்பு அரசுத் துறையில் செயலாளராக பணியாற்றியிருக்க வேண்டும். தேர்தல் நடத்தும் பணிகளில் அனுபவம் – நிர்வாக அனுபவம் இருக்க வேண்டும். தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர் 6 ஆண்டுகள் வரை பணி செய்ய முடியும். ஒருவேளை பணிக்காலம் ஆறு ஆண்டுகள் முடிவடைவதற்குள் 65 வயதை எட்டிவிட்டால் அவரின் பணிக்காலம் முடிந்துவிடும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கப்படும் அதே சேவைகளும், வசதிகளும், சலுகைகளும் தேர்தல் ஆணையருக்கும் வழங்கப்படும்.

தேர்தல் ஆணையமும் அரசின் தலையீடும்:

2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகு, முந்தைய ஆண்டுகளில் கடைப்பிடிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் தேர்வு நடைமுறைகள் மாற்றப்பட்டு, அச்சப்படும் அளவுக்கு அப்பட்டமான அரசின் தலையீடுகள் இருந்தது.

அதற்கு சிறந்த உதாரணமாக 2022-ம் ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட அருண் கோயலைக் குறிப்பிடலாம்.

2022 நவம்பர் 18-ம் தேதி, அருண் கோயல் தான் வகித்து வந்த பதவியை விருப்ப ஓய்வாக அறிவித்து ராஜினாமா செய்கிறார்.

பாஜக – தேர்தல் ஆணையம்

அதற்கு அடுத்த நாள் அதாவது நவம்பர் 19-ம் தேதி புதிய தேர்தல் ஆணையராக நியமிக்க அவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதே நாளில் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் தந்து விட்டார்.

அதாவது இந்த பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் என முன்கூட்டியே முடிவு செய்து, ராஜினாமா செய்ய வைத்து தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டார் என விமர்சிக்கப்பட்டது. மேலும், இது மத்திய பா.ஜ.க அரசின் மிக அப்பட்டமான எதேச்சதிகாரப் போக்கு எனக் கூறப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு:

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து, “தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அடங்கிய தேர்வுக்குழு தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும்” என தீர்ப்புக் கூறியது.

இந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில், அவசர கதியில் “தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான குழுவில் பிரதமர் மற்றும் அவரால் பரிந்துரை செய்யப்படும் மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர்தான் குழுவின் இடம் பெறவேண்டும்” என ஒரு சட்டத்தை கொண்டு வந்தது மோடி தலைமையிலானான பா.ஜ.க அரசு.

மோடி, உச்ச நீதிமன்றம்

அந்த மசோதா தாக்கல் செய்யும்போதே கடும் எதிர்ப்புகள், விமர்சனங்கள் எழுந்தபோதிலும், அனைத்தையும் நிராகரித்து விட்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் தங்களுக்கு உள்ள எம்.பி-க்கள் பலத்தால் நிறைவேற்றி, சட்டமாக்கியது.

முறைப்படி தேர்தல் நடக்காது!?:

அந்த மசோதாவின் படி ஆளும் அரசு தேர்வு செய்யும் நபர்தான் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவார் என்பது நூறு சதவீதம் உறுதியாகி விடுகிறது.

அப்போதே எதிர்க்கட்சிகள், “இப்படி தேர்தல் ஆணையர் தேர்வு செய்தால் அது இந்திய தேர்தல் ஆணையமாக அல்லாமல் மோடியின் தேர்தல் ஆணையமாகவே இருக்கும்” எனக் கடுமையாக விமர்சித்தனர்.

“எந்தக் கட்சியின் சார்பின்றி செயல்பட வேண்டிய, உச்ச பட்ச அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையத்தின் தலைவர், ஆளும் அரசின் தலைவர் பிரதமராலேயே தேர்வு செய்யப்படுவது ஜனநாயக முறைப்படி, பாரபட்சமின்றி தேர்தல் நடக்கிறது என்பதற்கு சாத்தியமில்லாத நிலையை ஏற்படுத்திவிடக் கூடும்” என அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமார்:

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 25-வது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 15 மே 2022 அன்று பதவி ஏற்றார். அவருக்கு 65 வயது பூர்த்தியடைந்த்தால் 18 பிப்ரவரி 2025 அன்று ஓய்வு பெற்றார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய குழு ஞானேஸ்வர் குமார் பெயரை அறிவித்துள்ளது. இவர் 2029-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வரை பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையமும், தேர்தல் ஆணையரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமக்கின்றன.

பதவி நீக்க செயல்முறை:

தேர்தல் ஆணையர் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்றால், அதற்கென சில வரைமுறைகள் உள்ளன.

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 324(5)-ன் படி, உச்ச நீதிமன்ற நீதிபதி மீது தவறான நடத்தைகள், ஊழல், பதவி துஷ்பிரயோகம், சார்பு நிலை போன்றவை நிரூபிக்கப்பட்டாலோ அல்லது தன் பணியை செய்ய முடியாத சூழலில் அவர் சிக்கிக்கொண்டாலோ பதவி நீக்கம் செய்யவதற்கு பரிந்துரைக்க முடியும்.

அதேப்போன்ற காரணங்களால் மட்டுமே தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யவும் நிரூபிக்க வேண்டும்.

அரசியல் அழுத்தங்களிலிருந்து தேர்தல் ஆணையத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தேர்தல் ஆணையரை பதவி நீக்கும் நடைமுறைகள் கடினமாகவே அமைக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளிலும் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும்.

தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், தேர்தல் ஆணையர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு விசாரணை குழு அமைக்கப்படும். அந்தக் குழு வழங்கும் தகவலின்படி இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அதில் கிடைக்கும் பெரும்பான்மையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர், தேர்தல் அதிகாரியை பதவி நீக்கமோ, அல்லது பதவியில் தொடர்வதையோ அறிவிப்பார்.

இப்படித்தான் தலைமைத் தேர்தல் ஆணையரோ, அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியோ பதவி நீக்கம் செய்யப்படுவார்.

தேர்தல் ஆணையர்கள் நீக்கம்:

தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்வதற்குதான் இரு அவைகளின் பெரும்பான்மை ஆதரவு தேவை. ஆனால், தேர்தல் ஆணையர்களை பதவி நீக்கம் செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையரின் பரிந்துரை இருந்தால் போதும், குடியரசுத் தலைவரே சுலபமாக பதவி நீக்கம் செய்ய முடியும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *