
சென்னை ரிப்பன் மாளிகைக்கு முன்பு நடந்த தூய்மைப் பணியாளர் போராட்டத்தின் போது, சமூக செயற்பாட்டாளர்கள் வளர்மதியும், நிலவுமொழியும் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது கடுமையாக தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தது. காவல் நிலையத்திலிருந்து இருவரையும் அழைத்து செல்கையில், அவர்கள் இருவரும் தாங்கள் தாக்கப்பட்டதாக கூறிய வீடியோ இணையத்திலும் பரவியது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையால் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் நிலவுமொழியை சந்தித்து பேசினோம்.
“போராட்டக்களத்துக்கு நீங்கள் எப்போது சென்றீர்கள்? காவல் நிலையத்தில் நீங்கள் தாக்கப்பட்டதாக புகார் கூறிய வீடியோ வெளியானதை பார்த்தோம். என்னதான் நடந்தது?”
“சென்னை ரிப்பன் மாளிகைக்கு முன்பு நடந்த 13 நாள் போராட்டத்துக்கு நான் ஒரு நான்கைந்து முறை சென்றிருப்பேன்.
கைது நடந்த கடைசி நாளில் அங்கேதான் இருந்தேன். நான் சார்ந்த ஜனநாயக உரிமை பாதுகாப்புக் குழு சார்பில் ஆதரவளிக்கத்தான் களத்தில் நின்றேன்.
ராம்கி நிறுவனம் எப்படிப்பட்ட சூழலியல் அழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதை நோட்டீஸாக அடித்து, போராடும் மக்களிடம் வழங்கிக் கொண்டிருந்தேன்.
ராம்கி பல முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம். கொரோனா சமயத்தில் ஓசூரில் மருத்துவக்கழிவை திறந்த வெளியில் கொட்டி அபராதம் கட்டியிருக்கிறது.
விருதுநகர் அ.முத்துகளத்தில் இவர்களின் சூழலியலுக்கு எதிரான செயல்பாடுகளால் மக்கள் உடலளிவிலேயே பெரிதாக பாதிக்கப்பட்டனர்.
அதற்காகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இவர்களுக்கு அபராதம் விதித்திருக்கிறது. போபால் விஷவாயுக் கழிவை அகற்றுவதிலும் இந்த நிறுவனம் மோசமாகத்தான் செயல்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் முன்வைத்துதான் அங்கே பேசிக்கொண்டிருந்தேன். இரவு 8:30 மணியளவிலேயே போராடும் இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டேன். ஆனாலும் அதே பகுதியில்தான் இருந்தேன்.
கைது நடக்கையில் அத்தனைக்கும் சாட்சியாக இருந்தேன். போலீஸார் செய்த அட்டூழியங்களை கண்கூடாக பார்த்தேன். ஒரு வழக்கறிஞராக மக்களை எங்கே கொண்டு செல்கிறார்கள் என்பதை அறிய வேண்டியது என்னுடைய கடமை.
அதனால் ஒரு பேருந்தை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தேன். திருவான்மியூரில் உள்ள ஒரு சமுதாய நலக்கூடத்துக்கு அந்தப் பேருந்து சென்றது.
அங்கே போராட்டக்காரர்களை அடைத்து வைத்தார்கள். அதை நோட் செய்து கொண்டு வீட்டுக்கு திரும்பிவிட்டேன். 1:45 மணியளவில் வளர்மதியிடமிருந்து அழைப்பு வந்தது.
ஆண் காவலர்கள் தாக்குவதாகவும், அவரை தனியாக கைது செய்ய முயல்வதாகவும் கூறினார். உடனே வேளச்சேரிக்கு சென்றேன்.
அங்கே எங்கள் தரப்பு வழக்கறிஞர்களுடன் போலீஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நான் அங்கே சென்று வளர்மதிக்கு ஆதரவாக, ‘எல்லாரும் இருக்கும் மண்டபத்திலேயே வளர்மதியையையும் வையுங்கள். எதற்கு தனியாக அழைத்துச் செல்கிறீர்கள்?’ என்றேன்.

உடனே என்னையும் தாக்க ஆரம்பித்து விட்டார்கள். என் கையையும் முறுக்கி வளர்மதியோடு காவல்துறையின் வாகனத்தில் ஏற்றிவிட்டார்கள்.
அந்த வாகனம் சிந்தாதரிப்பேட்டை காவல்நிலையத்துக்கு சென்றது. அங்கே AC கார்த்திகா என்பவர் தலைமையில் பெயர் சில்லை இல்லாத காவலர்களும் காக்கி உடை அணியாத காவலர்களும் என 20 பேர் எங்களை தாக்கினர்.
வளர்மதியை போராட்டக்களத்திலிருந்து கைது செய்திருக்கிறீர்கள்? என்னை ஏன் கைது செய்தீர்கள் என கேட்டேன். அதற்கு அவர்களிடம் முறையான பதில் இல்லை.
விடியகாலை 4 மணிக்கு மேல் வரை எங்களை அடித்து துன்புறுத்தினார்கள். வலி தாங்காமல் எங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொல்லி கேட்டோம்.
அதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. காலை 10 மணிக்கு எங்களை மீண்டும் வாகனத்தில் ஏற்றினார்கள். அப்போதுதான் இணையத்தில் வெளியான அந்த சம்பவம் நடந்தது.
சிந்தாதரிப்பேட்டையிலிருந்து எங்களை அண்ணா சாலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தார்கள். அதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
சில நிமிடங்களில் அண்ணா சாலை காவல் நிலையத்துக்கு வந்திருக்க முடியும். ஆனால், மூணே கால் மணி நேரம் எங்களை அதே வண்டிக்குள் வைத்து சிட்டி முழுவதும் சுற்றினர்.
வளர்மதி மயங்கிவிட்டார். எங்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொன்னோம்.
ராஜீவ் காந்திக்கு செல்கிறோம், ஓமந்தூரார் செல்கிறோம், ஸ்டான்லி செல்கிறோம் என ஏமாற்றி ஏமாற்றி ஊரை சுற்றினார்கள்.”
“அண்ணா சாலை காவல் நிலையத்தில் என்ன நடந்தது? எப்போது விடுவிக்கப்பட்டீர்கள்?”
“அண்ணா சாலை காவல் நிலையத்திலும் ஒரு பெண் அதிகாரி வளர்மதியை தாக்கினார். நீதிமன்றம் மாலை 3:30 மணி சமயத்திலேயே எங்களை விடுவிக்க சொல்லிவிட்டது.
ஆனால், கோர்ட் ஆர்டர் கிடைக்கவில்லை என எங்களை விடுவிக்க தாமதப்படுத்தினார்கள். இடையில் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
எங்களுக்கு அட்மிஷன் போட வேண்டும் என டாக்டர்கள் கூறினர். ஆனால், அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி எங்களை அழைத்து வந்துவிட்டார்கள்.
எனக்கு கையிலும் கழுத்திலும் நல்ல அடி. உடல் முழுவதும் நக கீறல்கள் இருந்தது. வளர்மதிக்கு இடுப்புப் பகுதியில் நல்ல அடி. ஆனாலும் எங்களை உள்ளே அட்மிட் செய்து சிகிச்சை வழங்க காவலர்கள் அனுமதிக்கவில்லை.
என்னை எதற்கு கைது செய்தார்கள் என காவலர்களுக்கு கடைசி வரை தெரியவில்லை.என் மீது வழக்குப்பதிவு செய்தார்களா என்று கூட தெரியவில்லை.
ஆனால், வளர்மதியோடு சேர்த்து என்னையும் பெயிலில்தான் விட்டார்கள். இரவு 8 மணிக்கு மேல் நாங்கள் விடுவிக்கப்பட்டோம். மறுநாள் நானும் வளர்மதியும் சென்று ஓமந்தூரார் மருத்துவமனையில் அட்மிட் ஆகினோம்.”
`மருத்துவமனையில் முறையாக சிகிச்சை வழங்கப்பட்டதா?’
“இருவருக்குமே உடலில் பல இடங்களில் காயம் இருந்தது. எனக்கு இடதுகையை அசைக்கவே முடியவில்லை. கழுத்தை சாய்த்து படுக்க முடியவில்லை.

வளர்மதிக்கும் இப்படி நிறைய பிரச்னைகள். ஆரம்பத்தில் மருத்துவர்கள் முறையாகத்தான் சிகிச்சை அளித்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் மீதும் காவல்துறை அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது.
என்னுடைய கை குணமாகவே இல்லை. ஆனால், என்னை குணமாகிவிட்டதாகக் கூறி திங்கட்கிழமையே டிஸ்சார்ஜ் செய்தார்கள். வளர்மதியையும் டிஸ்சார்ஜ் ஆகிக்கொள்கிறீர்களா என்று கேட்டார்கள்.
ஆனால், திடீரென ஒரு மருத்துவர் ரிப்போர்ட்டில் சிலவற்றை திருத்தி எழுதி அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு இருப்பதாக சொல்லிவிட்டார்.
அதனால் வளர்மதி இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சையில்தான் இருக்கிறார். எங்களுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.”
“காவல்துறையின் இப்படியான கவலைக்குரிய போக்கின் மீதான உங்கள் பார்வை என்ன?”
“காவல்துறை செய்திருப்பது அப்பட்டமான சட்டமீறல். நீதிபதி டி.கே.பாசுவின் தீர்ப்புப்படி பெண்களை நள்ளிரவில் கைது செய்து தாக்குவது சட்டத்துக்கு புறம்பான செயல்.

அதை இந்தக் காவல்துறை மீறியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் வழக்குத் தொடருவோம். காவல்துறை நீதிமன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அதேமாதிரி, இதை காவல்துறை சம்பந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்க முடியாது. உள்துறையை கையில் வைத்திருக்கும் காவல்துறையின் மந்திரியான முதல்வர் ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
தொடர்ச்சியாக காவல்துறையின் குரூரங்களை அவர் கண்டும் காணாமலும்தானே இருக்கிறார். அவரையும்தான் நாம் கேள்வி கேட்டாக வேண்டும்.” என்றார் ஆவேசமாக.