
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக மாநாட்டுக்கான தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மாநாடு நடைபெறும் பாரபத்தி திடலுக்கு வெளியே 100 அடியில் கொடிக்கம்பத்தை நிறுவி தவெக கொடியை பறக்கவிட திட்டமிட்டிருந்தனர்.
விக்கிரவாண்டி மாநாட்டிலும் இதே விஷயத்தை செய்திருந்தார்கள். அங்கும் ராட்சத கொடிக்கம்பத்தை நிறுவியிருந்தார்கள்.



மாநாடு ஆரம்பிக்கையில் விஜய் பட்டனை அழுத்தி கொடியை ஏற்றி வைப்பார். அதே திட்டம்தான் இங்கேயும். அதற்காக ராட்சத க்ரேன் மூலம் இன்று காலை முதலே கொடிக்கம்பத்தை நிறுவும் வேலைகளை செய்து வந்தனர்.
மதியம் 2 மணியளவில் பொதுச்செயலாளர் ஆனந்த் வந்து இந்த வேலைகளை முடுக்கிவிட்டார்.
100 அடி கொடிக்கம்பத்தை நிமிர்த்தி நிறுவும் தருவாயில் அந்த கொடிக்கம்பம் அப்படியே சரிந்து விழுந்தது. சுற்றியிருந்த தொண்டர்கள் சுதாரித்து உடனே விலகி ஓடினர்.
அருகிலிருந்த கார் மீது கொடிக்கம்பம் விழுந்ததில், அந்தக் கார் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் யாரும் இல்லை.
உடனடியாக தவெக தொண்டர்களும் பவுன்சர்களும் சேர்ந்து கம்பத்தை சரி செய்யும் வேலையில் இறங்கியிருக்கின்றனர்.
மதுரை தவெக மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் சுமார் 10 லட்சம் தொண்டர்களைத் திரள்வார்கள் எனக் கூறப்படுகிறது. இதற்காக 500 ஏக்கரில் மாநாட்டுக்கான திடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் பிரதான பாதாகையில் விஜய் உடன் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன.