
சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் எம். ஜோதிபாசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ எங்கள் நிறுவனத்தின் ஒரு பிரிவான சன் பிக்சர்ஸ் சார்பில் இதுவரை 29 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல மொழிகளில், பல திரைப்படங்களின் ஒளிபரப்பு உள்ளிட்ட உரிமைகளையும் பெற்றுள்ளோம். தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தை எங்களது நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படத்தில் நாகார்ஜூனா, அமீர்கான் போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாகக்கூறி இப்படத்துக்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.
இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் இப்படத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கேஜிஎஃப் போன்ற மற்ற படங்களில் இதைவிட வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளது. ஆனால் அந்த படங்களுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே கூலி படத்துக்கு வழங்கப்பட்டு ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக்கோரி மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பாக முறையீடு செய்தார். அதையடுத்து இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.
இன்றைய விசாரணையில், “கூலி படத்தின் தயாரிப்பாளர்கள், ‘U/A’ சான்றிதழ் பெற, தேவையான மேலதிக திருத்தங்களை மேற்கொள்ள மறுத்ததன் பிறகே, இந்திய திரைப்பட சென்சார் வாரியம் (CBFC) வழங்கிய ‘A’ ( பெரியவர்கள் மட்டும் பார்க்கும்) சான்றிதழை ஏற்றுக் கொண்டனர் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் CBFC சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதம் செய்தார்.
இந்நிலையில் இன்று இருதரப்பிலும் விசாரித்த நீபதிபதி வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…