
ட்ரம்ப் முக்கிய நிபந்தனை
கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேசிய ட்ரம்ப், அமைதியை ஏற்படுத்த ஒரு ஒப்பந்தத்துக்கு வர முடியும் எனத் தெரிவித்திருந்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேசிய அவர், இரண்டு முக்கிய நிபந்தனைகளைத் தெரிவித்துள்ளார். அதில் முதலாவது உக்ரைன் கிரிமியாவை விட்டுக்கொடுக்க வேண்டும். மற்றொன்று நேட்டோவில் இணைய முயற்சி செய்யக் கூடாது என்பது.
இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்கும்பட்சத்தில் நான்காவது ஆண்டாக நடைபெற்றுவரும் போர் உடனடியாக நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
ஆனால் இந்த நிபந்தனைகளை ஜெலன்ஸ்கி ஏற்பாரா என்பதில் பெரும் சந்தேகம் நிலவுகிறது. கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனின் பிரதேசங்களை ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்கும் எந்த ஒரு தீர்வையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” எனக் கூறியிருந்தார்.
ட்ரம்ப்பின் முயற்சிகள் ஜெலன்ஸ்கியின் முடிவில் மாற்றம் ஏற்படுத்துமா அல்லது அடுத்தடுத்த சந்திப்புகளில் மனம் மாறுவாரா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதற்கு முன் கிரிமியா ஏன் உக்ரைனுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது அவசியம்
கிரிமியா
கருங்கடலின் வடக்கு பகுதியில் இருக்கும் தீபகற்ப பகுதி இது. உக்ரைன் பெரு நிலப்பரப்புடன் இணைந்துள்ளது. ரஷ்ய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவதுடன், ரஷ்யர்களுக்கு விருப்பமான சுற்றுலாத்தளமாகவும் உள்ளது.
இங்குள்ள செவாஸ்தேபோல் துறைமுகம் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது. ரஷ்யாவுக்கு மத்திய தரைக்கடல், மத்திய கிழக்கு பகுதிகள் அணுகலை எளிதாக்குகிறது. கிரிமியாவை கட்டுப்படுத்துபவர்கள் கருங்கடலைக் கட்டுப்படுத்த முடியும்.
1991-ம் ஆண்டு சோவியத் சிறு நாடுகளாக உடைந்தபோது உக்ரைனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கிரிமியா. எனினும் செவஸ்தபோலில் இருந்த கிரிம்ப்ளின் கருங்கடல் கடற்படைத் தளத்தை அங்கேயே வைத்திருந்தது ரஷ்யா. இது 2014-ல் கிரிமியாவை ஆக்கிரமிக்க உதவியது.

2022-ம் ஆண்டு உக்ரைன் மீதான் முழுமையான ஆக்கிரமிப்பு போரை அறிவிப்பதற்கு ஒத்திகையாக 2014-ம் ஆண்டு கிரிமியாவை ஆக்கிரமித்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் நேரடியாக ராணுவ உதவிகளை வழங்கவில்லை.
கிரிமியாவில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிகம் இருப்பதனால், உள்நாட்டில் பூசல் ஏற்படக்கூடும் எனக் காரணம் கூறினார் அவர். அந்த நேரத்தில் ஒபாமா திறமையாக செயல்படவில்லை என ட்ரம்ப் இன்றளவும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
புதின் கோரிக்கை
கிரிமியாவில் சுமார் 20 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் 5.5 லட்சம் பேர் ரஷ்ய கூட்டாட்சி செல்வாக்குமிக்க நகரமான செவஸ்தபோலில் உள்ளனர்.
2014-ம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்ய அதிபர் புதின் கிரிமியாவில் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தினார். அதில் பெரும்பாலானோர் கிரிமியா ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்ததாக கிரிமியாவைக் கட்டுப்படுத்திய ரஷ்ய நிர்வாகம் கூறியது.

இந்த வாக்கெடுப்பை அமெரிக்காவோ, சர்வதேச சபைகளோ ஏற்காது என அறிவித்தார் ஒபாமா. எனினும் ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக கிரிமியாவை ரஷ்யாவே நிர்வகித்து வருகிறது.
இப்போது கிரிமியா ரஷ்யாவின் ஒரு பகுதி என்பதை உக்ரைன் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கோரியுள்ளார் புதின்.
“உக்ரைனின் பகுதிகளை ரஷ்யாவுக்கு வழங்குவது, 2022 முதல் நடத்தப்படும் ஆக்கிரமிப்புக்கு பரிசளிப்பது போன்றது” எனக் கூறி முழுமையாக எதிர்க்கிறார் ஜெலென்ஸ்கி.
தற்போது போர் நிறுத்தத்ததைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது கிரிமியா!