
சென்னை: நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு, தனது சட்டங்களை மீறி செயல்படலாமா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், செம்மஞ்சேரியில் நீர் நிலையை ஆக்கிரமித்து பல கட்டுமானங்கள் உள்ள நிலையில், காவல் நிலையத்துக்கு எதிராக மட்டும் வழக்கு தொடர்ந்த அறப்போர் இயக்கத்துக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.
செம்மஞ்சேரியில் நீர் நிலையில் காவல் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019-ஆம் ஆண்டு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட அந்த நிலம், மேய்க்கால் தாங்கல் சாலை என்பது மேற்கால் சாலை என வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.