• August 19, 2025
  • NewsEditor
  • 0

மதுரையைச் சேர்ந்த சிராஜ், அருண் என்ற இரண்டு யூடியூபர்கள்  கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார்கள்.

கிட்டதட்ட 30,000 கி.மீ டிரை சைக்கிள் மூலம் பயணித்து, இயற்கைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களைச் செய்திருக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழகம் திரும்பிய இந்த இளைஞர்களை நடிகர் விஜய் சேதுபதி நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

சிராஜ், அருண்

இந்நிலையில் அந்த இளைஞர்களைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம். அந்தவகையில் சிராஜ் அவரது பயண அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்தார்.  இதுதொடர்பாக பேசிய சிராஜ்,  ‘இரண்டு பேருக்கும் 24 வயசு ஆகுது. மதுரையில இருந்து ஜூன் 7, 2023 இந்தப் பயணத்தை ஆரம்பிச்சோம். முதல்ல மதுரையில மரக்கன்றை நட்டு வச்சுட்டு, பக்கத்து மாநிலமான கேரளாவுக்குப் போனோம்.

29 மாநிலங்களுக்குப் பயணம்

கேரளாவுக்கு பிறகு கர்நாடகா,கோவா, மஹாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு& காஷ்மீர், லடாக், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், அசாம், மேற்கு வங்கம், சிக்கிம் அர்ணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், மேகாலயா, திரிபுரா, என இந்த மாநிலங்களுக்கு எல்லாம் போயிட்டு திரும்ப அசாம் வந்து அந்த வழியா ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு வந்தோம். மொத்தம் 29 மாநிலங்களுக்குப் பயணம் பண்ணிருக்கோம்.

சிராஜ், அருண்
சிராஜ், அருண்

விழிப்புணர்வு நோக்கம்

நாங்க சென்ற எல்லா மாநிலங்களிலும் மரக்கன்றுகளை நட்டு வச்சுருக்கோம்.  இதுவரை இரண்டாயிரம் மரக்கன்றுகளை நட்டு வச்சுருக்கோம். எங்கப் பயணத்தோட நோக்கம் முழுக்க முழுக்க மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தணுங்கிறதுதான். அதோட  Anti Rape , Anti Drug என்ற உறுதிமொழியை முன்வைத்தோம்.

அதனை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கோம். 806 நாட்கள் பயணம் பண்ணிருக்கோம். ஆகஸ்ட் 14 திரும்ப மதுரைக்கே வந்து எங்களோட  பயணத்தை முடிச்சிக்கிட்டோம். நாங்களே காசு எல்லாம் சேர்த்து வச்சுட்டு வெறும் 1000 சப்ஸ்க்ரைபர்ஸ்களோடதான் போனோம். யூடியூப்பில் வளர்ச்சி அடையணும்கிறது எங்களோட கனவு கிடையாது. பயணம்தான் முக்கியம்.

டிரை சைக்கிள் பயணம்

இந்த இரண்டு வருஷமும் டிரை சைக்கிளில்தான் பயணம் பண்ணோம். வழியில ஏகப்பட்ட திருடர்கள் இருப்பாங்க. எங்களோட கேமரா, மைக், பவர் பேங்க் எல்லாமே திருடு போயிருக்கு. நாங்க மத்திய பிரதேசம் போகும்போது ஒரு சம்பவம் நடந்தது. இரவு 9 மணிக்கு நாங்க பயணம் பண்ணிட்டு இருந்தோம். என்னோட கழுத்துல கத்தி வைச்சு ஒரு கும்பல் எங்கிட்ட பணம் கேட்டாங்க. அவுங்ககிட்ட கெஞ்சி, கொஞ்சம் இங்கிலிஷ்ல பேசி எதுக்காக வந்திருக்கோம்னு புரியவச்சோம். அதுக்கு அப்றோம் எங்கள அவுங்கக்கூட தங்கவச்சு, நாங்க அங்க இருந்து கிளம்பும்போது எங்களுக்கு 1000 ரூபாய் கொடுத்து வழி அனுப்பி  வச்சாங்க.

சிராஜ், அருண்
சிராஜ், அருண்

ஜம்மு காஷ்மீர் மக்கள்

அதே மாதிரி ஜம்மு காஷ்மீரைப் பத்தி இங்க நிறைய விஷயங்கள் நெகட்டிவ்வா பேசப்படுது. ஆனால் அப்படி கிடையாது. இந்தியாவுலேயே அதிகமாக உதவக்கூடிய மக்கள் அங்கத்தான் இருக்காங்க. நிறைய உயரங்களுக்கு டிரை சைக்கிளிலேயே பெடல் பண்ணி சென்றோம். உலகத்துலேயே  டிரை சைக்கிள்ல யாரும் இவ்வளவு தூரம் பயணம் செய்தது இல்ல. அதுபோல சுற்றுச்சூழலுக்கும் எந்தவித ஒரு மாசையும் இது ஏற்படுத்தாது. அதுனாலத்தான் நாங்க அதைத் தேர்வு செய்து பயணம் பண்ணோம். 806 நாட்கள் 29 மாநிலங்கள், 30,000க்கும் அதிகமான கி.மீ, 630-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வழியாக இந்த டிரை சைக்கிளில் பயணம் செய்திருக்கிறோம்.

நிறைய சிரமங்களைச்  சந்திச்சோம்…

வெயில், மழைன்னு எல்லாமே இருந்துச்சு. யார் கிட்டயும் நாங்க காசு வாங்கல. நாங்க சேர்த்து வச்ச 4 லட்ச ரூபாயைத்தான் எடுத்துட்டுப் போனோம். ஒரு மாசத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் தான் செலவு பண்ணணும்னு நினைச்சோம். வெள்ளம், நிறைய விபத்துகள் என எல்லாத்துலையும் மாட்டியிருக்கோம்.

பஹல்காம் அட்டாக் நடக்கும்போது நாங்க காஷ்மீர் பக்கத்துலத்தான்  இருந்தோம். அந்த சமயத்துல நிறைய சிரமங்களைச் சந்திச்சோம். பிறகு விவசாயிகள் போராட்டம் நடந்துச்சு. அதுல கலந்துகிட்டு 10 நாள் தங்கி குரல் கொடுத்தோம்.

அதேபோல கேப்டன் விஜயகாந்த் இறந்தபோது இமாச்சலப் பிரதேசத்துல அவரோட பேருல 100 மரக்கன்றுகளை நட்டோம். நிறைய வித்தியாசமான மனிதர்களைப் பார்த்தோம். மதுரையில இருந்து பயணத்தை ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி தினமும் 40, 50 கி.மீ டிரை சைக்கிளில் பயணம் செய்து பயிற்சி செய்தோம்.

சிராஜ், அருண்
சிராஜ், அருண்

உடல் ரீதியாக தயாரான பிறகுதான் நாங்கள் டிரை சைக்கிளில் பயணம் செய்ய ஆரம்பித்தோம். நாங்க இந்தப் பயணம் மூலமா இந்தி கத்துக்கிட்டோம். புரியாத மொழி பேசுற இடத்துல ‘Google Translate’  பயன்படுத்திப்போம். அப்படியே மக்களோட மக்களாவே வாழப்பழகிட்டோம்.

ப்ளாக்ஷிப்-ல வேலைப் பார்க்கக்கூடிய விக்னேஷ்  அண்ணா எங்க வீடியோ எல்லாம் பார்த்திருக்காரு. நாங்க பயணத்த முடிச்சு சென்னை வந்தப்போ எங்கள கூப்பிட்டு பாராட்டி விஜய் சேதுபதி அண்ணாவைப் பார்க்க சர்ப்ரைஸா கூட்டிட்டுப் போனாரு.

பாராட்டிய விஜய் சேதுபதி

ஒரு மணிநேரம் சேது அண்ணா (விஜய் சேதுபதி)  எங்கக்கிட்ட பேசினாரு. உங்க வீடியோலாம் பார்த்திருக்கேன்னு சொன்னாரு. எங்க அனுபவத்தை எல்லாம் கேட்டாரு. உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டாரு. பணம்லாம் வேணாம்னு சொல்லிட்டோம். எங்களுக்கு டைரக்டர் ஆகணும்னு ஆசைன்னு சொன்னோம்.

சிராஜ், அருண்
சிராஜ், அருண்

நீங்க ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கணுமா? நான் உங்களை சேர்த்து படிக்க வைக்கிறேன் சொன்னாரு. என்ன உதவி வேணும்னாலும் கேளுங்க பண்றேன்னு  சொன்னாரு. டைம் கிடைக்கும்போது கூப்பிடுறேன் அப்போ வாங்க நம்ம நிறைய பேசுவோம். உங்கக்கிட்ட நிறைய விஷயங்கள் கேட்கணும்னு சொன்னாரு” என்று தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்தார் சிராஜ்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *