
அமெரிக்க வெளியுறவுத்துறை அந்த நாட்டில் தங்கிப் படிக்கும் 6000 மாணவர்களின் விசாக்களை ரத்து செய்துள்ளது. சட்டத்தை மீறியதாகவும், தேவைக்கு அதிகமான காலம் தங்கியிருப்பதாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலானவர்கள் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, மோதலில் ஈடுபட்டது, திருட்டு மற்றும் தீவிரவாத ஆதரவு உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அதிபர் ட்ரம்ப் பதவியேற்றது முதலே குடியேற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டிலிருந்து மாணவர்கள் அமெரிக்காவில் தங்குவதை எதிர்க்கிறார். அதன் பகுதியாகவே இந்த நடவடிக்கையும் பார்க்கப்படுகிறது.
மாணவர்களை வெளியேற்ற ‘தீவிரவாத ஆதரவு’ எனக் கூறப்படும் காரணத்தை வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தவில்லை. எனினும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர்கள் ‘யூத எதிர்ப்பு’ நடத்தைக் கொண்டவர்களென அமெரிக்க அரசு கூறுகிறது.
தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள 6000 விசாக்களில் 4000 பேர் சட்டத்தை மீறியிருப்பதாக வெளியுறவுத்துறை கூறியுள்ளது. 200-300 விசாக்கள் குடியுரிமைச் சட்டம் 3B அடிப்படையில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் ‘தீவிரவாத செயல்பாடுகளில்’ ஈடுபடுவதைத் தடுக்கும் சட்டமாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் வீசா பெறுவதற்குத் தடைவிதிக்கப்பட்டது. ஜூன் மாதம் மீண்டும் அனுமதிக்கப்பட்டபோது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. குறிப்பாக குடியேறும் மாணவர்கள் அரசு கண்காணிப்பதற்கு ஏதுவாக அவர்களது சமூக வலைத்தளங்களை ‘பொது நிலையில்’ வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த விசா ரத்தினால் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படவுள்ளனர்.
வெளிநாட்டு மாணவர்கள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் அமைப்பான ஓபன் டோர்ஸ் கூற்றுப்படி, 2023-24 கல்வியாண்டில் 210க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1.1 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் அமெரிக்கக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 3.3 லட்சம் மாணவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என அனுமானிக்கப்படுகிறது.