
ராஜஸ்தான் மாநிலத்தில் கைர்தல்-திஜாரா என்ற இடத்தில் வசிப்பவர் சுனிதா. இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றன. அவர்கள் அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவரது கணவர் ஹன்ஸ்ராம் அங்குள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார்.
அவர்களது சொந்த ஊர் உத்தரப்பிரதேசம் ஆகும். ஹன்ஸ்ராம் வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டு உரிமையாளர் மகன் ஜிதேந்திராவிற்கும் சுனிதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு நாளடைவில் அவர்களுக்குள் திருமணம் தாண்டிய உறவாக மாறியது.
ஜிதேந்திராவின் மாடி வீட்டில் சுனிதா தனது கணவர் மற்றும் குழந்தைகளோடு வசித்து வந்தார். ஹன்ஸ்ராம் வேலைக்குச் சென்றவுடன் ஜிதேந்திரா மாடி வீட்டுக்குச் சென்று உல்லாசமாக இருந்தார். ஆனால் இந்த உறவு நாளடைவில் ஹன்ஸ்ராமிற்குத் தெரிய வந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
இச்சண்டையால் சுனிதா மற்றும் ஜிதேந்திரா இடையேயான உறவுக்குத் தடை ஏற்பட்டது. ஹன்ஸ்ராம் மதுப் பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்தார். அதனைப் பயன்படுத்தி அவரைக் கொலை செய்ய இரண்டு பேரும் திட்டமிட்டனர். ஜிதேந்திராவின் மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
இந்நிலையில் ஹன்ஸ்ராம் வீட்டிலிருந்து கெட்ட வாசனை வருவதாகப் பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்த வீட்டைச் சோதனை செய்து பார்த்தபோது அங்கிருந்த ஒரு ஊதா கலர் டிரம்மில் ஹன்ஸ்ராம் உடல் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது.
அந்த உடல் விரைவில் அழுக வேண்டும் என்பதற்காக டிரம்மில் அதிக அளவு உப்பைப் போட்டு வைத்திருந்தனர். வீட்டிலிருந்த சுனிதாவையும், அவரது குழந்தைகளையும் காணவில்லை. அதோடு வீட்டு உரிமையாளர் மகன் ஜிதேந்திராவையும் காணவில்லை.

ஹன்ஸ்ராம் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் சுனிதாவும், அவரது காதலனும் பதுங்கி இருக்கும் இடம் அவர்களது மொபைல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விரைந்து செயல்பட்டு அவர்கள் இரண்டு பேரையும் போலீஸார் கைது செய்து அழைத்து வந்தனர். ஜிதேந்திராவிடம் போலீஸார் விசாரித்தபோது, ஹன்ஸ்ராம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் அவருடன் அமர்ந்து ஜிதேந்திரா மது அருந்தி இருக்கிறார்.
ஹன்ஸ்ராம் அளவுக்கு அதிகமாக மது அருந்தியவுடன் அவரை கழுத்தில் குத்தி கொலை செய்து ஊதா கலர் டிரம்மில் அடைத்துவிட்டுத் தப்பிச் சென்று இருப்பது தெரிய வந்தது. அவர்கள் இரண்டு பேரையும் போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் தனது காதலனுடன் சேர்ந்து தனது கணவர் செளரப் ரஜபுத்தைக் கொலை செய்து உடலைப் பல துண்டுகளாக வெட்டி அதனை ஊதா கலர் டிரம்பில் போட்டு அதில் சிமெண்ட் போட்டு அடைத்துவைத்து விட்டு தனது காதலனுடன் பிக்னிக் சென்றார்.
கடந்த மார்ச் மாதம் நடந்த இக்கொலை தொடர்பாக அதே மாதம் 18ம் தேதி முஸ்கான் அவரது காதலனுடன் கைது செய்யப்பட்டார். ரஜபுத் தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வெளிநாட்டிலிருந்து வந்திருந்த போது படுகொலை செய்யப்பட்டார்.