
கடந்த மூன்று தினங்களாக சேலத்தில் நடந்து வருகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட இந்த மாநாடு நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த மாநாட்டில் புதிய செயலாளர் தேர்வு செய்யப்படலாம் என்றார்கள். ஆனால் எல்லோரும் எதிர்பார்த்தபடி புதிய மாநிலச் செயலாளர் தேர்வு நடக்கவில்லை.
மாநில நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலக் குழு அடுத்த சில தினங்களில் சென்னையில் கூடி புதிய மாநிலச் செயலாளரைத் தேர்வு செய்யும். அதுவரை முத்தரசனே மாநிலச் செயலாளராகச் செயல்படுவார் எனத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக முத்தரசனுக்கு வயது 75 தாண்டி விட்டதால் கட்சி விதிப்படி அவரால் செயலாளராகத் தொடர முடியாது என்கிற செய்திகள் வெளியாகி வந்தன.

கட்சியின் தேசியச் செயலாளர் நாராயணனும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்தத் தகவலைப் பதிந்து முத்தரசனுக்கு செவ்வணக்கம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மாநிலச் செயலாளரைத் தேர்வு செய்யாமலேயே மாநாடு நிறைவு பெற்றுள்ளது.