
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
இருபத்தி எட்டு வருடங்களை சொந்த ஊரான கோவையில் கழித்துவிட்டு, என் மணவாழ்க்கையை தொடங்க முதன்முதலாக செப்டம்பர் 2012ல் சென்னைக்குள் அடியெடுத்து வைத்தேன்.
திருமணம் முடிந்து மூன்று மாத பிரிவுக்குப் பிறகு, ஒரே ஊரில் வாழ்க்கையை தொடங்கப் போகிறோம் என்ற சந்தோஷம் என் கணவருக்கு இருந்தது. ஆனால் எனக்கோ அந்த சந்தோஷத்தையும் தாண்டி, “புது ஊரில் எப்படி இருக்கும்?” என்ற பயமும் தவிப்பும் அதிகம்.
இரவு சேரனில் ஏறி, அதிகாலை 6.30க்கு சென்னை சென்ட்ரல் வந்தோம்.
கணவர் இருந்த இடம் வடபழனி, அவரது அலுவலகம் பெருங்குடி. எனக்கோ, கோவையிலிருந்து டிரான்ஸ்ஃபர் வாங்கி, புதிதாக போக இருந்தது நாவலூர் ஆபீஸ்.
பெயரளவிலேயே தெரிந்த அந்த இடங்களை, முதன்முதலாக கணவரின் இருசக்கர வாகனத்தில் வடபழனியிலிருந்து நாவலூர் செல்லத் தொடங்கினோம்.
போகிறோம், போகிறோம், போய்க்கொண்டே இருக்கிறோம். இடையே வந்த சிக்னல்களில் காத்திருப்புகள் சேர்ந்து, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து தான் நாவலூரை அடைந்தோம்.
நான் சிரித்துக் கொண்டு,
“ஏங்க, தினமும் கோவையிலிருந்து ஈரோடு போற மாதிரி தூரம் இருக்கே!” என்றேன்.
அவர், “ம்ம்ம்…” என்று சிரிப்போடு ஒற்றை expression.
ஆனால் என் மனதில் – “நம்மள முடிச்சு விட்டிங்க போங்க!” என்ற சிரிப்பு வலியோடு கலந்த உணர்ச்சி.
மனதுக்குள், “கோவையில வீட்ல இருந்து லேட்டா கிளம்பினாலும் அரைமணி நேரத்துல ஆபீஸ் போயிடலாம்… நல்லா சிக்கிட்டோமே!” என்ற ப்ளாஸ்ப்ளாக் மாதிரி இருந்தது.
முதல் நாள் புது ஆபீஸ், புது முகங்கள், எல்லாமே புதுசு.
இரவு அவரின் ரூமுக்கு வந்து, இருவரும் சேர்ந்து வாடைக்காக வீடு தேடினோம். என் கண்ணில் தாரை தாரையாய் கண்ணீர்.
பதறிய கணவர், “என்னாச்சு?” என்று கேட்டார்.
என்ன சொல்ல, புது இடம், நீண்ட டிராவல், புதிய ஆபீஸ் – எல்லாமே கஷ்டமா இருக்கிறது என்று கூற
அவர், “முதலில் அப்படித்தான் இருக்கும்… அப்புறம் பழகிடுவோம்” என்று சமாதானம் செய்தார்.
ஆம், அவர் சொன்னது போலத்தான் – ஒரு வாரம் தினமும் நான் அழுதேன். சில நேரங்களில் வெளிப்படையாக, சில சமயம் மறைத்து.
இறுதியில், இருவருக்கும் சுலபமாக இருக்க, மேடவாக்கம் ஏரியாவில் வீடு தேடினோம். ஒரு வாரம் கழித்து, மேடவாக்கம் கூட் ரோட்டில் ஒரு அபார்ட்மெண்ட் கிடைத்தது.
புது கல்யாண தம்பதிகளை குடுத்தனம் வைக்க, இருவரது வீடுகளிலிருந்தும் மொத்தம் 17 பேர் சென்னை வந்தார்கள். அவர்களின் டிக்கெட்டுகளை புக் செய்ய ஒரே நாள் முழுதும் ஆபீஸிலிருந்தே வேலை செய்தது தனி கதை!
வீட்டை செட் செய்து கொடுத்து போனார்கள். எங்களின் வாழ்க்கை அங்குதான் புதிதாகத் தொடங்கியது.
மெல்ல மெல்ல சோகம், பயம் எல்லாம் மறைந்தது.
அரக்கப்பரக்க செய்த அரைகுறை சமையல். வெள்ளி கிழமை இரவுகளை அழகாக்கிய dinner . அசதியாக தூங்கி, மெதுவாக எழுந்த weekend mornings . கணவரிடம் எதிர்பார்ப்புகள், சின்ன சின்ன சண்டைகள், சமாதான படுத்திய மாசால் பூரிகள், on call support இல் கிடைத்த குக்கிங் recipes , புதிய இடத்தில் கிடைத்த புது நண்பர்கள் என்று, வாழ்க்கை அழகாக சென்றது.
ஒரு வருடம் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து விட்டது.
கால சூழலில், ஒரு வருடத்தில் டிரான்ஸ்ஃபர் ஆகி, சொந்த ஊருக்கே திரும்ப வேண்டிய சூழல் வந்தது.
பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை வந்தபோது, நகரமே மாறி இருந்தது. அதிகாலை ஐந்திலிருந்தே மக்கள் ஓடத் தொடங்கி விடுகிறார்கள். மக்கள், வாகனங்கள் அனைத்தும் கூட்டம் கூட்டமாகி விட்டது.
ஆனால் அந்த பரபரப்பான சென்னையில் நமக்கே சொல்வதற்கான அனுபவமாக அமைந்த அந்த ஒரு வருடம், எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத பயணமாகவே இருந்தது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!