
நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு நடந்து முடிந்துள்ளது.
2022-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர், மூன்றரை ஆண்டுகள் தாண்டியும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இந்த மூன்றரை ஆண்டுகளில் பலர் முயற்சித்தும், இந்தப் போரை நிறுத்தத்திற்கு கொண்டுவர முடியவில்லை.
இந்த நிலையில் தான், கடந்த ஆண்டு, அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதினின் நண்பர்
பல ஆண்டுகளாக, அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் முட்டல் மோதல் போக்கு இருந்து வந்தாலும், ட்ரம்பும், புதினும் நல்ல நண்பர்கள்.
அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது, அப்போதைய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ட்ரம்ப் என இருவரையும் ஜெலன்ஸ்கி சந்தித்தார்.
அப்போது, ட்ரம்ப், ‘புதின் என்னுடைய நல்ல நண்பர். நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், பதவியேற்பிற்கு முன்பே, போர் நிறுத்தத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன்’ என்று கூறியிருந்தார்.
ட்ரம்ப்பின் வரி
ட்ரம்ப் கடந்த நவம்பர் மாதம், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அப்போதே தனது முயற்சியைத் தொடங்கிவிட்டார். ஆனாலும், புதின் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.
இந்த நிலையில், ரஷ்யா போர் நிறுத்தத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், ரஷ்யா மீது வரி விதிக்கப்படும் என்று கடந்த ஜூலையின் இறுதியில் ட்ரம்ப் எச்சரித்தார்.
அடுத்ததாக, இந்த மாதத் தொடக்கத்தில் சீனாவைத் தவிர, ரஷ்யா உடன் வணிகம் செய்யும் நாடுகளான இந்தியா, பிரேசில் மீது கூடுதல் வரியை விதித்தார்.
ஏற்கெனவே ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் ஏகப்பட்ட வரிகளை விதித்துள்ள நிலையில், ட்ரம்பின் இந்த நகர்வு புதினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
ட்ரம்ப் – புதின் சந்திப்பு
அதனால், புதின் ட்ரம்பை சந்திக்க ஒப்புக்கொண்டார்.
இதை முன்னிட்டு, அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் ட்ரம்ப், புதின் சந்திப்பு நடந்தது.
அதில் போர் நிறுத்தம் எட்டப்படவில்லை என்றாலும், அதற்கான முக்கிய அம்சங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன என்று கூறப்பட்டது.
புதினும், உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் விருப்பம் என்று தெரிவித்திருந்தார்.
ஜெலன்ஸ்கி அமெரிக்கா வருகை
ஆக, அடுத்தக்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள், ட்ரம்ப் – புதின் பேச்சுவார்த்தை குறித்து பேசுவதற்காக நேற்று ஜெலன்ஸ்கி அமெரிக்கா வந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம், போர் நிறுத்தம் குறித்து பேச ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது ட்ரம்பிற்கும் – ஜெலன்ஸ்கிக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்த முறை, அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என ஏழு ஐரோப்ப தலைவர்களும் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்காவிற்கு சென்றனர்.
அவர்கள் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஐக்கிய இராச்சிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜெர்மனி கூட்டாட்சி குடியரசின் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ருட்டே ஆவார்கள்.

என்னென்ன பேசினார்கள்?
இந்தச் சந்திப்பில் ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம், உக்ரைனின் பாதுகாப்பு உறுதிகள் ஆகியவைக் குறித்து விவாதிக்கப்பட்டது.
பிப்ரவரி மாதம் போல இல்லாமல், இந்தமுறை ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வெற்றிகரமாகவே நடந்து முடிந்துள்ளது.
இதன் விளைவாக, புதின் – ஜெலன்ஸ்கி நேரடி சந்திப்பு விரைவில் நடக்க இருக்கிறது. இந்தச் சந்திப்பிற்கு ட்ரம்ப், புதின், ஜெலன்ஸ்கி சந்திப்பு நடக்க உள்ளது. இதை ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
அது எந்த வகையான பேச்சுவார்த்தையாக இருந்தாலும், எந்த நிபந்தனையும் இல்லாமல் கலந்துகொள்கிறேன். அதன் முடிவை பொறுத்து, முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது குறித்து முடிவு செய்கிறேன் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
‘நோ’ கிரிமீயா
2014-ம் ஆண்டு, உக்ரைன் பகுதியான கிரிமீயாவை ரஷ்யா கைப்பற்றியது தான் ரஷ்யா – உக்ரைன் பிரச்னையின் தொடக்கப்புள்ளி.
பின்னர், 2022-ம் ஆண்டு, போர் தொடங்கியதில் இருந்து, ஏகப்பட்ட உக்ரைன் பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்திருக்கிறது.
புதின் உடனான சந்திப்பிற்கு முன், ரஷ்யா ஆக்கிரமித்த சில பகுதிகள், உக்ரைனிடம் கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், நேற்று முன்தினம், கிரிமீயா உக்ரைனுக்கு வழங்கப்படாது என்று கூறினார்.
இந்த நில பிரச்னை குறித்து நேற்று பெரியளவில் விவாதம் நடந்துள்ளது. ஆனால், அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதை நேட்டோ பொதுச் செயலாளர் உறுதி செய்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் வரைபடத்தை மறுவரையறுக்கப்படுவது குறித்து ஜெலன்ஸ்கி தான் முடிவு செய்ய வேண்டும். அது புதின் உடனான சந்திப்பிற்கு முடிவு முடிவு செய்யப்படும் என்று நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ருட்டே கூறியுள்ளார்.

புதினுக்கு போன்கால்
ஜெலன்ஸ்கி, ஐரோப்ப தலைவர்கள் உடனான பேச்சுவார்த்தையை பாதியில் நிறுத்திவிட்டு, புதினுக்கு போன் செய்து, பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் பேசியிருக்கிறார்.
அதன் பின், மீண்டும் புதின் பேசியது குறித்து ஐரோப்ப தலைவர்களிடம் கூறி, பேசியிருக்கிறார் ட்ரம்ப்.
அந்தத் தொலைபேசி அழைப்பில் தான் ஜெலன்ஸ்கி உடனான சந்திப்பிற்கு ஒப்புக்கொண்டுள்ளார் புதின்.
பேச்சுவார்த்தையில் பெரும்பாலும் புதின் பக்கத்தில் இருந்தே ட்ரம்ப் பேசியிருக்கிறார். மேலும், ‘எனக்காக தான் புதின் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார் என்று நினைக்கிறேன்’ என்று புதின் உடனான தனது நட்பை நிலைநாட்டிருந்திருக்கிறார்.
உடையை மாற்றிய ஜெலன்ஸ்கி
கடந்த முறை ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றிருந்தப்போது, அவரது மிலிட்டரி உடை குறித்து பெரிதாக விவாதிக்கப்பட்டது. இதை இந்த முறை தவிர்க்கும் வகையில், அவர் கருப்பு கோட் சூட்டில் சென்றிருக்கிறார்.
மேலும், அவர் நட்பு தொனியில் தான் கடைசி வரை பேசியிருக்கிறார். மேலும், ட்ரம்பின் இந்த முயற்சிகளைப் பெரிதும் பாராட்டியிருக்கிறார். இது ஜெலன்ஸ்கியின் முக்கிய மாற்றம் மற்றும் முடிவாக பார்க்கப்படுகிறது.
கடந்த முறை, ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி மோதலால், ஜெலன்ஸ்கிக்கு தான் பின்னடைவு. அதை அவர் அடுத்த சில நாள்களிலேயே புரிந்துகொண்டு, அமெரிக்காவின் உதவியை நாடினார்.
இந்த முறை எல்லா விஷயத்திலும் கவனமாக இருந்திருக்கிறார்.

மெலனியாவிற்கு கடிதம்
மேலும், பெர்சனல் டச்சாக, தன் மனைவி, அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்பிற்கு எழுதிய கடிதத்தையும் கொண்டுவந்து, ட்ரம்பிடம் கொடுத்திருக்கிறார்.
உலகளவில் போர் உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது மெலனியாவிற்கு பெரிய வருத்தமாக உள்ளது. இதை சரிசெய்ய அவர் பல்வேறு விஷயங்களை முன்னெடுத்து வருகிறார்.
அமெரிக்கா வந்த புதினிடம் கூட, இதுகுறித்த கடிதம் ஒன்றை மெலனியா கொடுத்திருந்தார்.
ட்ரம்புமே தனது மனைவியின் இந்த முன்னெடுப்புகளுக்கு பெரிதாக ஆதரவளித்து வருகிறார். அதனால், ஜெலன்ஸ்கியின் இந்த நகர்வு புத்திசாலித்தனமானது ஆகும்.
எப்போது சந்திப்பு?
ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதின் – ஜெலன்ஸ்கி சந்திப்பு நடக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், அதற்கான இடம் இன்னும் முடிவாகவில்லை.
கூடுதலாக, ஐரோப்ப நிதியுதவி மூலம் 90 பில்லியன் டாலருக்கு அமெரிக்க ஆயுதங்களை உக்ரைன் வாங்குவதாகவும், உக்ரைன் தயாரிப்பு டிரோன்களை அமெரிக்கா வாங்குவதாகவும் பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. இதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் அல்லது 10 நாள்களுக்குள் போடப்பட உள்ளது.
நடக்க உள்ள புதின், ஜெலன்ஸ்கி சந்திப்பு நல்லபடியாக முடியும் என்று நம்புவோம்!
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…