• August 19, 2025
  • NewsEditor
  • 0

ரூ.12 கோடி இழந்த தொழிலதிபர்

எத்தனையோ பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளனர். அப்படி இழந்தவர்களில் சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர்.

ஏராளமானோர் பண ஆசையில் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி கடனாளியாகவும், மனநோயாளியாகவும், ஆன்லைன் சூதாட்டதிற்கு அடிமையாகவும் மாறிவிடுகின்றனர்.

மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபர், கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த ரூ.12 கோடியை ஆன்லைன் சூதாட்டத்தில் 4 ஆண்டுகளில் இழந்து தவித்து வருகிறார்.

சஞ்சய் சவான் என்ற அத்தொழிலதிபர் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து மிகவும் கடினமாக உழைத்து ரூ.12 கோடி சம்பாதித்தார். ஆனால் கொரோனா காலத்தில் அத்தொழிலதிபர் Parimatch என்ற ஆன்லைன் சூதாட்ட செயலில் விளையாட ஆரம்பித்தார்.

கொரோனா காலத்தில் ஆரம்பித்த பழக்கம்

கொரோனா காலத்தில் வீட்டிலேயே இருந்ததால் நேரப்போக்கிற்கு விளையாட ஆரம்பித்தார். ஆனால் அதில் அவருக்கு அதிக அளவில் பணம் வருவது போன்று இருந்தது. இதனால் அடுத்தடுத்து அந்த செயலியில் சூதாட்டம் ஆட ஆரம்பித்தார்.

அவர் பணம் கட்டி விளையாட விளையாட அவருக்கு அதிக லாபம் கிடைத்து இருப்பதாக மொபைல் செயலியில் காட்டியது. இதனால் சூதாட்டத்திற்கு அடிமையானவர் போன்று தொடர்ந்து அதில் கட்டி விளையாட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் டிஜிட்டல் கைது போன்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார். அதிலிருந்து அவரால் மீள முடியவில்லை.

பணத்தை எடுக்க விடாமல் மோசடி

அவர் விளையாடிய மொபைல் செயலியில் அவர் விளையாடி கிடைத்ததாக காட்டிய பணத்தை சஞ்சய் சவான் எடுக்க முயன்றார். ஆனால் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை.

கே.ஒய்.சி. பிரச்னை காரணமாக அடுத்த சில நாள்களில் பணத்தை உங்களால் எடுக்க முடியும் என்று மொபைல் செயலியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தொடர்ந்து சூதாட்டம் விளையாடும்படி கேட்டுக்கொண்டனர். சஞ்சய் சவானும் தொடர்ந்து பணம் கட்டி விளையாடிக்கொண்டே இருந்தார்.

இது குறித்து சஞ்சய் சவான் கூறுகையில்,”ஆரம்பத்தில் சிறிய தொகையை கொண்டு விளையாடினேன். பணம் செலுத்த யு.பி.ஐ.நம்பர் கொடுத்தார்கள். ஆனால் அதிக தொகைக்கு விளையாடியபோது வேறு வங்கிக்கணக்குகளை கொடுத்து அதில் பணம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.

அவர்கள் கொடுத்த வங்கிக்கணக்குகளில் ரூ.12 கோடியை டிரான்ஸ்பர் செய்தேன். ஔரங்காபாத்தைச் சேர்ந்த ஒரு வங்கிக்கணக்கிற்கு ரூ.25 லட்சம் டிரான்ஸ்பர் செய்தேன்.

Representational Image

அந்த வங்கி வங்கியில் நான் டெபாசிட் செய்த வங்கி கணக்கு விபரம் குறித்த விபரங்களை கேட்டபோது சரியாக பதில் சொல்லவில்லை. இதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் மொபைல் செயலியில் இருந்து மர்ம நபர் ஒருவர் போன் செய்து உங்களது பணம் உங்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்தார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இப்போது எனது ரூ.12 கோடியும் பறிபோய்விட்டது”என்றார்.

இப்போது Parimatch செயலிக்கு எதிராக மும்பை சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்துள்ளார். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக சஞ்சய் சவான் தெரிவித்துள்ளார்.

ஏன் தடை செய்ய மறுக்கிறார்கள்?

அவர் மேலும் கூறுகையில், ஒரு முறை ஆஸ்திரேலியா சென்று இருந்தபோது பரிமேட்ச் செயலியை அங்கிருந்து பதிவிறக்கம் செய்ய முயன்றபோது முடியவில்லை. அவர்கள் அந்த செயலியை தடை செய்து இருந்தார்கள்.

அதே போன்று இந்தியாவிலும் ஏன் தடை செய்ய மறுக்கிறார்கள். அவ்வாறு தடை செய்தால் என்னைபோன்று பலரும் பணத்தை இழப்பது தவிர்க்க முடியும். நான் பணத்தை இழந்ததை கேள்விப்பட்டு எனது தந்தை மாரடைப்பால் காலமானார்.

எனது தாயாரும் அடுத்த ஆண்டே காலமாகிவிட்டார். பணத்தை இழந்ததோடு பெற்றோரையும் இழந்துவிட்டு தனிமரமாக தவிக்கிறேன்” என்று கூறும் சஞ்சய் இப்போது சம்பந்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட கேமிற்கு எதிராக போராடி வருகிறார்.

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவது ஏன்?

இது குறித்து மனநல மருத்துவர் அவினாஷ் டிசோசா கூறுகையில்,”ஆன் லைன் சூதாட்டத்தில் ஆரம்பத்தில் அனைத்து விளையாட்டிலும் வெற்றி பெறும் வகையில் அமைத்து இருப்பார்கள். ஆனால் பணத்தின் அளவு படிப்படியாக அதிகரிக்கும்போது சூதாட்டத்தில் தோல்வி அடைய செய்வார்கள்.

சூதாட்டத்தில் பங்கேற்பவர்கள் எப்படியும் இழந்த பணத்தை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணம் கட்டி விளையாடுவார்கள். ஒரு கட்டத்தில் சூதாட்டத்திற்கு அடிமையாகிவிடுவார்கள். என்னிடம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி ஒவ்வொரு வாரமும் 3 முதல் 4 நோயாளிகள் வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி பரிமேட்ச் சூதாட்ட செயலியோடு தொடர்புடைய போலி வங்கிக்கணக்கில் இருந்து ரூ.110 கோடியை பறிமுதல் செய்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *