
மும்பையில் நான்கு நாள்கள் தொடரும் மழை
மும்பையில் கடந்த நான்கு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை மும்பையில் 170 மிமீ அளவுக்கு மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விக்ரோலியில் அதிக பட்சமாக 194 மி.மீ அளவுக்கு மழை பெய்தது. மும்பை வடாலா பகுதியில் மழையின் போது டாக்சிக்காக காத்திருந்த தாய், மகன் மீது மாநகராட்சி பஸ் ஒன்று மோதியதில் அவர்கள் இரண்டு பேரும் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவின் ராய்கட், ரத்னரி, கோலாப்பூர், சதாரா, புனேயில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையையொட்டி இருக்கும் தானே மாவட்டத்தில் கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.
சுரங்க பாதையில் சிக்கிய கார்
நரிவாலி மற்றும் உத்தவ்சிவ் கிராமங்களிடையே மேம்பாலத்திற்கு கீழே வாகனங்கள் செல்ல பைபாஸ் சாலை ஒன்று கட்டப்பட்டு இருந்தது.
இந்த சுரங்க பாதையில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தண்ணீர் பல அடி உயரத்திற்கு சென்ற நிலையில் கார் ஒன்று அதனை கடக்க முயன்று நடு வழியில் சிக்கிக்கொண்டது.

இதனால் காரில் இருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர். தண்ணீர் காருக்குள் வந்துவிட்டது. அந்நேரம் அதனை கவனித்த இரண்டு பேர் காரில் இருந்தவர்களை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் நீந்தி கார் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.
காரின் முன்பகுதி தண்ணீரில் கவிழ்ந்த நிலையில் இருந்தது. இதனால் நீந்தி வந்த இரண்டு பேரில் ஒருவர் காரின் மேல் பின்புறம் ஏறி நின்று காரை சமநிலைப்படுத்த முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை.
இதையடுத்து காருக்குள் இருந்தவர்களிடம் உடனே வெளியில் வெளியில் வரும்படி கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து கார் கதவை திறந்து கொண்டு இரண்டு பேரும், தண்ணீரில் நீச்சலடித்து பாதுகாப்பாக வெளியில் வந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு
கல்யான் பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 4 வீடுகள் சேதம் அடைந்தன. தானே கோட்பந்தர் சாலையில் மிகப்பெரிய பாறை கல் ஒன்று மலையில் இருந்து சாலையில் விழுந்தது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து காவலர்கள் உடனே விரைந்து செயல்பட்டு அக்கல்லை அப்புறப்படுத்தினர்.
மாநிலத்தில் உள்ள சத்ரபதி சாம்பாஜி நகர் மண்டலத்தில் மழையால் 800 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.