
இந்திய திரையுலகில் தனித்துவமான சாதனைகளை படைத்தவர்களில் நடிகை சமீரா ரெட்டி முக்கியமானவர். இவர், தனது சொந்த வீடியோ கேமில் முதன்மைக் கதாபாத்திரமாக தோன்றிய முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றவர்.
2000-களின் முற்பகுதியில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் தனது நடிப்புத் திறனால் கவனம் ஈர்த்தவர் சமீரா ரெட்டி.
‘ரேஸ்’, ‘வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. அவரது திரைப் பயணத்தைத் தாண்டி, ஒரு வீடியோ கேமில் மையக் கதாபாத்திரமாக தோன்றியது அவருக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
2006-இல் வெளியான ‘சமீரா: வாரியர் பிரின்ஸஸ்’ என்ற வீடியோ கேம், சமீரா ரெட்டியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள வீடியோ கேம்களில் இதுவும் ஒன்று.
இதில், சமீராவின் கதாபாத்திரம் ஒரு வீரமங்கையாக சித்தரிக்கப்பட்டு, சாகசம், ஆக்ஷன் நிறைந்த கதைக்களத்தில் இடம்பெற்றது. மொபைல் மற்றும் பிற கேமிங் தளங்களில் வெளியான இந்த கேம், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இது குறித்து சமீரா ரெட்டி பழைய பேட்டியில் கூறுகையில், “எனது கதாபாத்திரத்தை ஒரு வீடியோ கேமில் பார்ப்பது மறக்க முடியாத அனுபவம். இந்தியாவில் இதுபோன்ற புதுமையான முயற்சியில் பங்கேற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது,” என்று தெரிவித்திருந்தார். அந்த வீடியோ தான் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

சொந்த வீடியோ கேமைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை சமீரா ரெட்டி தக்க வைத்துள்ளார்.