
புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் (74), உடல்நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, வரும் செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவரும் மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தேர்வு செய்தது. இதையடுத்து, சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இது தொடர்பான புகைப்படத்தை பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.