• August 19, 2025
  • NewsEditor
  • 0

சினிமா ஆர்வம் வந்தவுடன் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து இளைஞர்களும் பையைத் தூக்கிக்கொண்டு, கிளம்பிச்செல்லும் இடம் சென்னையாகத்தான் இருக்கிறது.

அப்படி தென் தமிழகத்திலிருந்து சென்ற பல கலைஞர்கள் திரையில் வெற்றி பெற்றதை நம்மால் காண முடியும்.

ஆனால் திரைப்படத் துறையின் 24 கலைகளையும், அதன் தொழில்நுட்ப நுணுக்கங்களையும் கற்றுக்கொள்வதற்கு அவர்கள் தலைநகரம் வரை செல்ல வேண்டியிருந்தது.

வைகை திரைப்பட இயக்கம்

அந்தப் பாரம்பரியத்தை மாற்றியமைக்க, சினிமாவைப் பற்றிய கலந்துரையாடல், உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை திரையிடுதல், திரைப்படத் துறை வல்லுநர்களின் மாஸ்டர் க்ளாஸ், சமூகப் பொறுப்புடன் வெளிவரும் திரைப்படங்களின் படக்குழுவை அழைத்துப் பாராட்டுதல் மற்றும் சுயாதீன திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுதல் போன்ற மாற்று சினிமாக்கான விதையை மதுரையில் ஒரு மொட்டை மாடியில் தூவிக் கொண்டிருக்கிறார்கள் ‘வைகை திரைப்பட இயக்கத்தை’ச் சார்ந்தவர்கள்.

‘எல்லாக் கலைகளிலும், எங்களுக்கு சினிமாவே மிக முக்கியமானது.’ என்பார் புரட்சியாளர் லெனின்.

அப்படி சினிமா என்பது வெறும் தொழில்நுட்பப் பிரமாண்டம் மட்டுமின்றி, அது எளிய மக்களின் குரலாகவே இருந்து வருகிறது.

வாரந்தோறும் சனிக்கிழமை, மதுரை அண்ணா நகரில் உள்ள பென்னிகுயிக் பதிப்பகத்தின் மொட்டை மாடியில் சினிமாவை நேசிக்கும் வருங்காலக் கலைஞர்களுக்கு மத்தியில், படமெடுக்கும் குறிப்புகளை வைகை திரைப்பட இயக்க உறுப்பினர்கள் வழங்குவார்கள்.

இந்த இயக்கத்தைத் தொடங்கியதில் மிக முக்கியமான பங்கு துணை இயக்குநராகப் பணியாற்றி வரும் கிட்டு, ஃபோட்டோகிராஃபி ஸ்டூடியோ வைத்திருக்கும் சரவணன், கண்ணன் மற்றும் தனது வீட்டின் மொட்டை மாடியை சினிமா வகுப்பறையாகப் பரிசளித்த பென்னிகுயிக் பதிப்பகத்தின் ஆசிரியர் சரவணனுக்கே சேரும்.

வைகை திரைப்பட இயக்கம்
வைகை திரைப்பட இயக்கம்

இந்த இயக்கத்தின் நோக்கத்தைப் பற்றி கிட்டுவிடம் கேட்டபோது உதவி இயக்குநர்களுக்கே உரிய கதை சொல்லும் பாணியில் நம்மிடம் விவரித்தார். அவர், “சினிமானாலே எல்லாரும் சென்னைக்குத்தான் போறாங்க, ஏன் கோயம்புத்தூர்ல கூட ஸ்டூடியோன்னு சினிமாவைப் பத்தித் தெரிஞ்சுக்க ஒரு மன்றம் இருக்கு.

ஆனா மதுரையில குறைவான ஸ்டூடியோ இருந்தாலும் அது எல்லாம் மிகவும் அறிவார்ந்தவர்களுக்கானதாக இருக்கு.

அப்படி இருக்கும்போது சினிமா ஆர்வமுள்ள ஆட்களை வெறுமனே தொழில்நுட்பம் சார்ந்து இல்லாம, அதோடு சேர்த்து சினிமாங்கற தளத்தைப் பயன்படுத்தி பெரிய அளவிலான ஆடியன்ஸை எப்படி அரசியல் படுத்துறதுக்கான தளமா படைப்பாளர்கள் மாத்திக்கணும்னு ஒரு சமூகப் பொறுப்புணர்வோட பிப்ரவரி 11, 2023 அன்னைக்குத் தொடங்குனது தான் வைகை திரைப்பட இயக்கம்.” எனப் புன்னகைத்தார்.

அது மட்டுமில்லாம உலக சினிமாக்களான ‘சிட்டி ஆஃப் காட்’, ‘வேர் இஸ் மை ஃபிரண்ட்ஸ் ஹவுஸ்?’, ‘தி சர்கிள்’, ‘பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்’, ‘அக்ரஹாரத்தில் கழுதை’ போன்ற படங்களின் இயக்கமுறை பத்தியும் அந்தப் படங்கள் பேசுகிற அரசியல் கோணங்களைப் பத்தியும் விவாதிச்சோம்.

அதோடு சமகாலப் பிரச்னையைத் தொடர்புபடுத்துற மாதிரியான படங்களைத் திரையிடுவோம். ஒரு எடுத்துக்காட்டுக்கு இஸ்ரேல்-பாலஸ்தீன் போர் உக்கிரமா நடந்துட்டு இருக்கும்போது ‘ஃபார்ஹா’னு ஒரு பாலஸ்தீன் படத்தைப் போட்டு விவாதிச்சோம்.

வைகை திரைப்பட இயக்கம்
வைகை திரைப்பட இயக்கம்

‘அயலி’ மற்றும் ‘கொட்டுக்காளி’ படக்குழுவைக் கூப்பிட்டு பாராட்டு விழா நடத்துனோம். எங்க காண்டாக்ட்ஸை வச்சு திறமையான கலைஞர்களை இண்டஸ்ட்ரிக்குள்ள சேர்த்து விட்றோம்.

இப்ப மூணு மாசமா, மழை, அப்பறம் வேற சில காரணங்களால நடத்த முடியல. வேற ஒரு பெரிய இடமா பாத்துட்டு இருக்கோம். “கண்டிப்பா திரும்ப நடத்துவோம்” என்ற அவரின் வார்த்தைகளில் நம்பிக்கை தெரிந்தது.

சினிமா என்னும் கலை மக்களுக்கானது, மாற்று சினிமாவின் அலை தற்போது தமிழ் சினிமாவில் அடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த அலையின் உயரத்தை அதிகரிக்க வைகை திரைப்பட இயக்கத்தின் பட்டறையிலிருந்து கலைஞர்கள் வருவார்கள் என உறுதியாகச் சொன்னார் கிட்டு.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *