• August 18, 2025
  • NewsEditor
  • 0

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ளது தாணிக்கோட்டகம் கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் பணியாற்றினார். இவர் ஓய்வு பெற்ற நிலையில் தாணிக்கோட்டகம் கிராமத்தினர் தமிழ்ச்செல்வனுக்கு எடுத்த பாராட்டு விழா கவனம் பெற்றிருப்பதுடன் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மேடையில் தமிழ்ச்செல்வனுக்கு எடைக்கு எடை புது நாணயம் வழங்கி, குதிரை சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்றதில் நெகிழ்ந்திருக்கிறார் தமிழ்ச்செல்வன்.

எடைக்கு எடை நாணயம்

இது குறித்து தாணிக்கோட்டகம் கிராமத்தினர் சிலரிடம் பேசினோம், “தமிழ்ச்செல்வன் சுமார் 41 ஆண்டுகள் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர் பணியை செய்து வந்தார். இதில் தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மட்டும் 23 ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். அவர் பணிக்கு வந்த பிறகு பள்ளியில் மட்டுமல்ல ஊரின் நலனுக்காகவும் பல்வேறு முன்னெடுப்புகளை செய்தார். பள்ளியில் நூறு சதவீத தேர்ச்சிக்கு காரணமாக இருந்து பள்ளியையும், மாணவர்களையும் வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார்.

பள்ளியின் பொக்கிஷமான அவர் ஊர் மக்கள் மீது அளவில்லாத அன்பை காட்டி உறவுக்காரராக வாழ்ந்தார். இதனால் அனைத்து நல்லது, கெட்டதுகளில் தமிழ்ச்செல்வனும் எங்களுடன் கலந்திருப்பார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் பணி ஓய்வு பெற்றது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

தலைமை ஆசிரியர் தமிச்செல்வன்

இப்படியான சூழலில் 23 ஆண்டுகள் எங்களுடன் இருந்த தமிழ்ச்செல்வன் ஆசிரியருக்கு உரிய மரியாதை செய்து எங்கள் அன்பை வெளிப்படுத்த நினைத்தோம். இதற்காக பள்ளியில் பாராட்டு விழாவிற்கு ரெடி செய்தோம். பலரும் தமிழ்ச்செல்வன் பணியை பாராட்டி வாழ்த்தினர்.

தமிழ்ச்செல்வன் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில், மேடையில் தராசு வைத்து அவரது எடைக்கு எடை புதிய நாணயம் வழங்கினோம். 75 கிலோவும் புது நாணயமாக வழங்கினோம். இதில் நெகிழ்ந்த அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் கசிந்தது. பின்னர், குதிரை சாரட் வண்டியில் தமிழ்ச்செல்வனை உட்கார வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றோம். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முரசொலி சிங்காரம் சாரட் வண்டியை ஓட்டினார். வண்டிக்கு பின்னால் மாணவர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊர்வலமாக வந்தனர்.

பணி ஓய்வு பாராட்டு விழா

மேள தாளம், வான வேடிக்கை முழங்க, ஊர்வலமாக சென்ற தமிழ்ச்செல்வன் மீது மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கோயில் திருவிழா, அரசியல் கட்சி தலைவர்களின் வருகை ஆகியவைக்கு இணையாக பணி ஓய்வு பெற்ற தமிழ்செல்வனுக்கு விழா எடுத்தோம். பள்ளி வளர்ச்சி நிதிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கியதில் பள்ளி மீது தமிழ்ச்செல்வனுக்கு இருக்கும் அக்கறை எப்போதும் குறையாது என்பது வெளிப்பட்டது. நீங்கள் காட்டிய அன்பில் நெகிழ்ந்து விட்டதாக சொன்ன தமிழ்ச்செல்வனிடம், கல்வி கொடுத்த எங்களுக்கு நாங்கள் காட்டும் நன்றிக்கடன் தான் இந்த மரியாதை என்றோம்” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *