• August 18, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

கதைகளை சுவாரசியமாக படிக்கும் ரகம் நான். சுஜாதாவும், சிவசங்கரியும், இந்துமதியும், வாசந்தியும் பாலகுமாரனும் தமிழ் வாசகர்களின் ஹீரோக்களாக கருதப்பட்ட காலத்தைச் சேர்ந்தவள். ஒரு கதை பிடித்துவிட்டால் அதை  எத்தனை முறை வேண்டுமானாலும் படிப்பேன். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் கதையை எத்தனை முறை படித்திருக்கிறேன் என்பதற்கு கணக்கு கிடையாது. இன்னும் படிக்கிறேன். சந்தோஷமாக இருந்தாலும் அதை கையில் எடுத்துக் கொள்வேன். துக்கமாக இருந்தாலும் அதை எடுத்து படிப்பேன். இப்போது வேள்பாரியும் அதில் சேர்ந்து கொண்டிருக்கிறது.

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்பது தவிர பாரி பற்றி பொதுவாக மக்கள் அவனைப் பற்றி  அதிகம் தெரியாமல் இருந்தார்கள் என்றுதான்  நினைக்கிறேன். எனக்கும் அப்படித்தான். அப்படிப்பட்ட பாரியை எல்லோர் வாயிலும் வரவழைத்தவர்  சு.வெங்கடேசன். பாரி, கபிலர், நீலன், திசைவேழர் , பொற்சுவை , ஆதினி , மயிலா, அங்கவை, தேக்கன்—யாரை விட.? யாரைச்  சேர்க்க? வேள்பாரியின் பல  பாத்திரங்களும் மனதில் நிற்பவை.

கதை மாந்தர்கள்  பற்றி பார்ப்பதற்கு முன்பாக வேள்பாரி சொன்னதில் எவையெல்லாம் மனதில் படிந்து மறைய மறுத்தது என்பதைப் பார்ப்போம்.

வீரயுக நாயகன் வேள்பாரி

இயற்கையை அடிக்கடி சீண்டிப் பார்க்கும் நமது இன்றைய சமூகம்,  பறம்பு கற்றுக்கொடுக்கும் இயற்கையின் உன்னதத்தைப் பற்றி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன். பறம்பின் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வியப்பேற்றுகிறது.  

பறம்பில் மனிதன் உழைத்து விளைவிக்கக்கூடிய  எந்த பொருளும் இல்லை தினை வகைகள், காய்கறிகள் பழங்கள் எல்லாம் தாமாக விளைகின்றன. உணவு உற்பத்திக்காக பெரும்  உழைப்பை செலுத்த வேண்டியதில்லை என்று பாரி சொல்லும்போது  பறம்பு நம்மை வாய்பிளக்க  வைக்கிறது. வணிகம் இயற்கைக்கு எதிரானது என்கிறான் பாரி.  இயற்கை வழங்குகிறது நாம் வாழ்கிறோம். இடையில் வாங்கவும் விற்கவும் நாம் யார் , பகிர்ந்து உண்பதும் பரிமாறி வாழ்வதும் இயற்கை நமக்கு கற்றுக் கொடுத்தவை என்று பாரி கோளூர் சாத்தனிடம் கூறுகையில் எவ்வளவு உண்மையான வார்த்தை இவை! என்றாவது ஒரு நாள் இந்தக் கோணத்தில் சிந்தித்திருக்கிறோமா என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வைக்கிறது.

இன்றைய தலைமுறை  … இல்லையில்லை, மக்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பெரும்பாடத்தை  பாரி ஒரு வரியில் சொல்கிறான்.

“விதையை நடாதவன் கிளைகளை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது”

“இயற்கையை அழிப்பவரே இயற்கை அழிக்கும்.”

இன்னும் நிறைய சொல்கிறார் வெங்கடேசன் பாரி மூலமாக . சொல்ல இடமில்லையே !!

அதே போல காட்டில் தான் எத்தனை விதமான தாவரங்கள் பூக்கள். ! வைணவ ஆச்சார்யார்  ராமானுஜர் சொல்வார் உலகில் 20,000 வகை தாவரங்கள் இருக்கின்றன என்று. வேள்பாரி நமக்கு தெரியாத பல தாவரவகைகளை   காட்டுகிறது. காய்ந்த சருகுகளை விட விரைவில் பற்றிக்கொள்ளும் பச்சை செடியான  பால் கொரண்டி, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறைப்  பூக்கும்  சாமப் பூ, , இரவில் ஒளி உமிழும் இராவெரி மரம்,( இதன் இலைகள் பகலிலே கதிரவனிடமிருந்து பெற்ற  ஒளியை இரவிலே உமிழும்  பார்ப்பதற்கு நிறைய சுடர்கள் எரியும் விளக்கைபோல இருக்கும் ஜோதி விருட்சம் என்று இப்போது சொல்லப்படுகிறது என்று நினைக்கிறேன் ), அடுத்தது இரிக்கிச் செடி . இந்தக் கொடியை ஒடித்தால் அதிலிருந்து கசியும் நீர் சிறிது நேரத்தில் பால் போல் மாறி நட்சத்திரம் போல மின்னும். ஆட்கொல்லி மரம், வண்டுகடி மரம் , பூனைகளுக்கு மயக்கம் ஏற்படுத்தும் பூனை வணங்கி  என்று பல மரங்கள்! செடிகள் தாவரங்கள்.!   இதைப்போன்ற பல தாவரங்கள் பூக்களை காடு தன்னகத்தே கொண்டுள்ளது என்கிற விபரங்களை பார்க்கும்போது இயற்கையை அதிகம் வியக்காமல் இருக்க முடியவில்லை. கருநெல்லி கனியைத் தின்றால் பகலிலும் விண்மீன்களைப் பார்க்கலாம் என்று சொல்லி பாணர் ஒருவன் திசைவேழருக்கு அந்தக் கனியைக் கொடுக்காமல் போய்விட்டேனே என்று வருந்தி அடுத்த முறை பறம்புசெல்லும்போது பாரியிடம் கேட்டு வாங்கி வருவதாகச் சொல்கிறான்.  கருநெல்லி பற்றி திசைவேழருடன் சேர்ந்து நாமும் அறிந்துகொள்கிறோம்.

வீரயுக நாயகன் வேள்பாரி

தாவரங்கள் தான் வியப்பை தருகின்றன என்றில்லை. காடுகளின் விலங்குகளும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.   முதலில் இயற்கையின் அதிசயமான, வானியல் விலங்கு  தேவ வாக்கு விலங்கு. எப்படி வைத்தாலும், வடக்கை நோக்கி அமரும். மூவேந்தர்களையும் , சூழ் கடல் முதுவனையும் யவனர்களையும் வாய் பிளக்க வைத்த தேவ வாக்கு விலங்கிற்காகவே போர் நடந்தது. கடல் பயணத்தில் திசை அறிதலுக்கு இந்த விலங்கு இன்றியமையாதது.   அத்துடன் பலவகை பாம்புகள், அவற்றின் குணங்கள், சுண்டா பூனை, சங்கு அட்டை என்று கேள்விப்படாத விலங்குகள் ஊர்வன, என்று காடுகளின் உயிரினங்களை வேள்பாரி காட்டும்போது அதனைப் பார்த்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடிவதில்லை.

ஆளிமலைப் பக்கம் யானைகள் போகவே போகாது என்கிற தகவல், சுவாரசியமானது.

காதல், வீரம், அறம் என்று அனைத்தையும் சொல்கிறது வேள்பாரி. முருகன்-வள்ளி , நீலன் -மயிலா , பாரி – ஆதினி அங்கவை -உதிரன் காதல் பற்றி படிக்கையில் சாதாரணமாக கதைகளில் வரும் சலிப்பூட்டும் காதல் வார்த்தைகள் வர்ணனைகள் காட்சிகள் போல் இல்லாமல்  வித்தியாசமானதாக இருக்கிறது என்றாலும், வேள்பாரி  காட்டும் வீரமும் அறமும் மனதை விட்டு நீங்காதவை.

முதலில் நமது நாயகன் பாரி

அறத்தின் மறுபெயர் பாரி. வீரத்தின் வழி மட்டும் தான் போர் நடத்தப்படவேண்டும், அதில் தந்திரம் கூடாது. அறமற்ற வழிக்கு தந்திரம் என்று பெயர் சூட்டுதல் கூடாது என்கிறான் பாரி. அத்தோடு எதிரிகளின் அறமற்ற செயலைப் பற்றி நாம் கவலைப்படவேண்டாம் என்று சொல்கிறான். அறத்தின் கொலைக்கு நாம் காரணமாகிவிடக்கூடாது என்று அவன் வலியுறுத்துகையில் அறத்தின் முகமாகவே பாரி என் கண்களுக்கு தெரிகிறான்.

மூவேந்தர்கள் அவனை வஞ்சகமாக கொன்றார்கள்  என்கிறது பாரி பற்றிய பிற கதைகள். அறத்தின் வடிவமாக இருக்கும் ஒருவனை மூவேந்தர்கள் வஞ்சகமாக கொன்றார்களா? அறத்தின் வடிவமாக இருந்தவனின் முடிவு பற்றி இந்த நாவல் என்ன சொல்லப்போகிறது.? பொற்சுவை  கொல்லப்பட்டதையே மனம் தாங்கவில்லை. பாரியின் முடிவுதான் கதையின் முடிவாக இருக்குமோ என்று பயந்தேன்.

நல்லவேளை ஆசிரியர் அப்படி முடிக்கவில்லை. பனையின் மகனே பனையின் மகனே என்று புகழ்ந்து முடித்திருந்தார். கதைப் பாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த ம.செ .யின் ஓவியம் அவனை சாந்தமான முகம் கொண்டவனாக காட்டுகிறது. முகம் மட்டும் சாந்தமல்ல. அவன் பேச்சும் இனிமை என்பதை அவன் பார்க்கும் மக்களிடம்  குசலம் விசாரிக்கும்போது தெரிகிறது. அவன் ஒரு சிறந்த தகப்பன் என்பது தீக்களி பூசிக்கொண்டு அங்கவை உதிரனுடன் ஆடும்போது பதைபதைத்து போகிறானே, அப்போது வெளிப்படுகிறது.

வீரயுக நாயகன் வேள்பாரி – 57

 சங்கு அட்டைகளை நீர்நிலையில் விட்டு  எதிரிகளின் யானைகளை  அதனைநீரோடு  உறிஞ்ச வைத்து பின்னர் அவை தாக்கப்பட்டு காயம்பட்டு  வேதனையுடன் உயிருக்கு போராடும்போது, “நமது காடுகளில் பிளிறிக் கதறும் யானைகளுக்கு நாம் உதவ வேண்டும் என்று” சொல்லி அவற்றிக்கு மருத்துவம் பார்க்கச் சொல்லும்போது   அவனது மனிதாபிமானம் வெளிப்படுகிறது. இந்த மாதிரி பாரியின் குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். பாரியைப் போலவே அவனது பறம்பு மக்களும்!!. இதனை கடுவன்- போதன் கதை மிக அழகாக காட்டுகிறது. கடுவன் இறக்கும்போது “பறம்பின் மக்கள் எந்நிலையிலும் வாக்கினைக் காப்பர் “ என்கிறான். “

 கதையின் நாயகன் பாரி நம்மை கவர்வது போலவே அவரது நண்பர் பெரும் புலவர் கபிலரும் கவர்கிறார்.  அவர்களது நட்பு  நம்மை வியக்க வைக்கிறது. மூவேந்தர்கள் பாரியிடம் சமாதானம் பேச கபிலரை வரவழைத்து அவருடன் பேசுகின்றனர். பறம்பு மலை தானே வேண்டும்,  பாரியிடம் பாட்டிசைத்து பறம்பைக் கேட்டால் இல்லை என்று சொல்லாமல் வழங்குவான் என்று மூவேந்தர்களிடம் கபிலர் சொல்லும்போது நட்பில் நா பிறழ்கிறது என்று அவர்கள் கபிலரிடம் கோபப்படும் அளவுக்கு பாரியின் வள்ளல் தன்மையையும்,  அவனை உங்களால் போரிட்டு வெல்ல முடியாது என்பதையும் கபிலர் சுட்டிக்காட்டும் சமயத்திலும்  இருவரது நட்பும் தெரிகிறது, கபிலர் மீதான நமது எண்ணமும் உயர்கிறது.

பற்றியெரியும் பறம்பினைப் பாட  உமக்கு அதிக நாள் இல்லை என்று கோபத்தில் குலசேகர பாண்டியன் கொதிக்கும்போது கபிலர் நெருப்பால் அழிக்க முடியாத அவனைப் பாடுவது என் தமிழுக்கு அழகு என்று அமைதியாக சொல்கிறாரே அப்போது கபிலர் எட்டா உயரத்திற்கு சென்று விடுகிறார்.  அது போலவே திசை வேழரிடம் தேவாங்கு மட்டுமல்ல; பாரியும் அப்படித்தான். என்ன விலை கொடுத்தாலும் சினம் கொண்டாலும், வீழ்ந்து பணிந்தாலும் திசை மாறமாட்டான் என்று சொல்லும்போது அவரது மொழியின் வலிமை தெரிகிறது.

பறம்பில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பறம்பு வந்த திசை வேழர் கேட்க , கபிலர் “இதுதான் வாழ்க்கை என்று தோன்றுகிறது” என்று சொல்லும்போது இயற்கையோடு இணைந்த பறம்பின் வாழ்க்கை எப்படியானது என்பது புரிகிறது.

கபிலருக்கு அடுத்து என்னைக் கவர்ந்தவர் அறத்தின் வடிவமான திசைவேழர் பாரியைப் போலவே திசைவேழரும் அறத்தின் மறுவடிவம். போர் துவங்க நாள் குறிக்க அவரை மூவேந்தர்கள் கேட்கும்போது, வளமிக்க மண்ணை பாழ் படுத்தல் அறமன்று என்கிறார், பேசிப் பார்க்காமலேயே போர்க்களம் புகுவது என்ன அறம் என்று கேட்கிறார். போரில் மூவேந்தர்கள் தரப்பினர்  போரை விதி மீறாமல் நடத்திச் செல்லும்  நிலைமான்  கோல் சொல்லியாக .திசைவேழரை அறிவிக்கின்றனர்.  

பறம்பு தரப்பிற்கு கபிலர். போர் நடக்கும்போது பொதியவெற்பனும் சோழவேழனும் போரின் விதிகளை  மீறிவிட்டதாக திசைவேழர்  குற்றம்சாட்டினார். அவர்கள் போர்க்களம் விட்டு சென்றிட வேண்டும் வாழ்நாள் முழுவதும் ஆயுதம் ஏந்தக்கூடாது என்று தீர்ப்புக்கூறியபோது அவர் அறத்தின் வடிவமாகத் தெரிகிறார்,. இறுதியில்  போரின் விதிமுறைகளை மதிக்க தெரியாத மூவேந்தர்கள் படைக்கு நிலைமான் கோல் சொல்லியாக இருந்த தான் அந்த தவறுக்கு பெறுப்பேற்று தனக்குத்தானே தண்டனை வழங்கி கொள்வதாக சொல்லி தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் போது அறத்திற்காக ஒரு மனிதன் உயிரையே விடுகிறார் என்று பார்க்கையில் திசைவேழர் நம்மனதில் நீங்கா இடம்பெறுகிறார்.

வீரயுக நாயகன் வேள்பாரி

அடுத்து பொற்சுவை . மிகச் சிறந்த அழகிய இளவரசி. புத்திசாலி. போரை நிறுத்திவிடவேண்டுமென்று திசைவேழரிடம் ஆவேசமாக வாதிட்டவள். அவள் மூலமாக பாரியை வஞ்சகமாக கொன்றுவிடவேண்டும் என்று நினைத்திருந்த குலசேகர பாண்டியனின் திட்டத்தை அறிந்து பாரியைக் காப்பாற்றி தனது உயிரைக்கொடுத்தவள். காராளியிடம் அவள் காதல் மலர் பற்றி சொல்வது, கேட்பது, அவளிடம் இருக்கும் கலாரசனையை வெளிப்படுத்துகிறது.

இளவரசி என்றால் வெறும் அழகு பதுமை அல்ல அவள் வித்தியாசமான அழகிய இளவரசி..  அவள் கொல்லப்பட்டது மனதை என்னவோ செய்தது உண்மை.
திசைவேழர் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் இடமும்  பொற்சுவை  தன்னுயிரைக் கொடுத்து பாரியைக் காப்பாற்றும் இடமும்,  மனதை விட்டு நீங்கவில்லை.
இறுதியில் பொற்சுவைக்கும் திசைவேழருக்கும் மரியாதை செய்தானே பாரி !! அவனை எப்படி பாராட்டுவது?

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *