
‘கூலி’ திரைப்படம் பற்றிய மீம்ஸ்தான் சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பியிருக்கிறது.
அவற்றில் பெரும்பாலான பதிவுகள் கன்னட நடிகை ரச்சிதா ராம் பற்றியதாகத்தான் இருக்கிறது.
அந்தளவிற்கு அவருடைய கதாபாத்திரம் ‘கூலி’ திரைப்படத்தில் பலரையும் சர்ப்ரைஸ் செய்திருந்தது.
‘கூலி’ படத்தில் நடிகை ரச்சிதா ராமின் கல்யாணி என்ற கதாபாத்திரம் பலரையும் சர்ப்ரைஸ் செய்திருக்கிறது.
தமிழ் ஆடியன்ஸுக்கு பெரிதளவில் பரிச்சயமில்லாத ரச்சிதா ராம் இதற்கு முன் கன்னடத்தில் டாப் நடிகர்களுடன் இணைந்து திரையில் தூள் கிளப்பியிருக்கிறார்.
கன்னட சினிமா ரசிகர்கள் இவருக்கு ‘டிம்பிள் குயின்’ என்று பட்டம் சூட்டி அழைக்கிறார்கள். அந்தளவிற்கு கன்னட சினிமா ரசிகர்களிடையே நீக்கமற இடத்தைப் பிடித்திருக்கிறார் ரச்சிதா.
ரச்சிதாவின் உண்மையான பெயர் பிந்தியா. இவருடைய தந்தை ராம் ஒரு பரதநாட்டியக் கலைஞர். தந்தையைத் தொடர்ந்து இவரும் முறையாக பரதநாட்டியம் பயின்று பல இடங்களில் பர்ஃபாமும் செய்திருக்கிறார்.

சொல்லப்போனால், இவருடைய சகோதரி நம் தமிழ் மக்களுக்கு அவ்வளவு பரிச்சயம் என்றே சொல்லலாம். சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘நந்தினி’ சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்த நித்யா ராம்தான் இவருடைய சகோதரி.
அந்த சீரியல் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்று தந்தையைத் தொடர்ந்து இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘அண்ணா’ தொடரில் நடித்து வருகிறார்.
நித்யா ராமும், ரச்சிதா ராமும் தொடக்கத்தில் கன்னட மொழியில் சீரியல்களில் நடித்து வந்தார்கள். கன்னட சீரியல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும்போது ரச்சிதாவுக்கு ஒரு சினிமா வாய்ப்பு க்ளிக் ஆகியது.
2013-ம் ஆண்டு ‘புல்புல்’ என்கிற கன்னட திரைப்படத்தில் நடித்து கன்னட சினிமாவில் அறிமுகமானார். பலருக்கும் அமைந்திடாத ஒரு வாய்ப்பு ரச்சிதாவுக்கு முதல் திரைப்படத்திலேயே கைகூடி வந்தது.
ஆம், கன்னட சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக அப்போதிருந்த நடிகர் தர்ஷனுடன் இணைந்து நடித்திருந்தார்.

இத்திரைப்படம் அந்த வருடத்திலேயே அதிக வசூலித்த கன்னட திரைப்படமாக பெரும் வெற்றியைப் பெற்றது.
இதன் மூலம் கன்னட சினிமா ரசிகர்களுக்கு ஃபேவரைட்டான ரச்சிதா, உபேந்திரா, கிச்சா சுதீப், மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் என கன்னட திரையுலகின் டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.
குறிப்பாக, கடந்த 2019-ம் ஆண்டு ரச்சிதாவுக்கு தொடர்ந்து வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து 2021 மற்றும் 2022-ம் ஆண்டு ரச்சிதாவுக்கு கன்னட சினிமாவில் கொஞ்சம் கடின காலமாகவே இருந்தது.
அவர் நினைத்தப்படி அந்த இரண்டு வருடங்களில் பெரிய வெற்றிகள் அமையவில்லை. பிறகு 2023-ல் தர்ஷனுடன் ‘கிராந்தி’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் மீண்டுமொரு ஹிட் படத்தில் நடித்து கம்பேக் கொடுத்திருந்தார்.
ஒரே மாதிரியான கேரக்டரில் தொடர்ந்து நடிப்பதை ரச்சிதா எப்போதுமே விரும்பமாட்டார். புதிதான கதாபாத்திரங்களில் தோன்றி தன் மீது வைக்கப்படும் ஸ்டீரியோடைப்களை உடைக்கவே அவர் விரும்பியிருக்கிறார்.
அது தொடர்பாக அவர், “ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்காமல் இருக்கும்படி என்னிடம் சிலர் கேட்டனர். மக்கள் என்னை வழக்கமான கமர்ஷியல் திரைப்படங்களில் ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால் புதுமையான கதைகளிலும் நடித்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி என்மீதுள்ள ஸ்டீரியோடைப்களை உடைக்க விரும்புகிறேன். அதனால்தான் நான் ‘ஆயுஷ்மான் பாவா’, ‘புஷ்பக விமானா’, ‘100’, மற்றும் ‘ஆயோக்யா’ போன்ற கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறேன்.” எனக் கூறியிருக்கிறார்.
கடந்த 2013-ல் தன்னுடைய சினிமா கரியரைத் தொடங்கியவர் 12 ஆண்டுகளில் கன்னட சினிமாவைத் தாண்டி ஒரேயொரு தெலுங்கு திரைப்படத்தில் மட்டுமே நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் அறிமுக திரைப்படத்திலேயே நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வந்திருக்கிறார் ரச்சிதா.
அறிமுகப் படத்திலேயே இப்படியான ஒரு பரிணாமத்தில் களமிறங்குவதற்கு பலரும் சற்று தயங்கியிருப்பார்கள். ஆனால், ரச்சிதாவின் வித்தியாசமான கதாபாத்திர தேர்வு குறித்தான தேடல் ‘கூலி’ படத்திற்குள் அவரைக் கொண்டு வந்திருக்கிறது. அந்த வாய்ப்பும் அவருக்கு இப்போது அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பைக் கொடுத்திருக்கிறது.
வெல்கம் ரச்சிதா!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…