
மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்றுமுன் தினத்தில் இருந்து தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இக்கனமழை இன்று காலையில் மேலும் தீவிரம் அடைந்தது. இதனால் நகரில் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கிக்காணப்படுகிறது. ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் புறநகர் ரயில்கள் மிகவும் தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் காலை நேரத்தில் அலுவலகத்திற்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேற்கு புறநகர் பகுதியில் உள்ள அந்தேரி மற்றும் லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ் பகுதி சாலையில் மழை நீர் வெள்ளமாக சென்றது. மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
மும்பை மற்றும் தானேயில் நாளை வரை கனமழை பெய்யும் என்று கூறி ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். கடந்த 24 மணி நேரத்தில் காட்டன் கிரீன் பகுதியில் 145 மிமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. தகிசர் பகுதியில் 188 மிமீட்டரும், காந்திவலியில் 150 மிமீட்டரும் மழை பதிவாகி இருக்கிறது. கனமழையால் மும்பை விமான நிலையத்தில் வெளிச்சம் குறைவு மற்றும் ஓடுதளத்தில் தண்ணீர் போன்ற காரணங்களால் 9 விமானங்கள் தரையிறங்குவது தவிர்க்கப்பட்டது. சில விமானங்கள் வானிலேயே சுற்றிக்கொண்டு இருந்தன. மேலும் சில விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
கனமழை பெய்து வருவதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விமானத்தில் பயணம் செய்பவர்கள் வீட்டில் இருந்து விரைவில் கிளம்பும்படி இண்டிகோ விமான நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. மும்பையில் இன்று பிற்பகலில் இருந்து நாளை வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து மாநில அமைச்சர் ஆசிஷ் ஷெலார் மும்பை மாநகராட்சியால் நடத்தப்படும் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று மழை நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். மாட்டுங்காவில் டான்போஸ்கோ பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்துச்சென்ற பள்ளி பேருந்து மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.
ஒரு மணி நேரமாக அந்த பஸ்சால் மழை வெள்ளத்தில் இருந்து நகர முடியவில்லை. இது குறித்து பத்திரிகையாளர் சுதாகர் போலீஸ் அதிகாரி ராகசுதாவிற்கு தகவல் கொடுத்தார். துணை போலீஸ் கமிஷனர் ராகசுதா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்பு துறையினரும் வந்தனர். பஸ்சில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். மாட்டுங்காவில் சாலைகளில் முட்டி அளவுக்கு மேல் தண்ணீர் சென்றது. இதனால் பாதசாரிகளால் நடக்கக்கூட முடியவில்லை. அந்தேரி வீர்தேசாய் பகுதியில் மழை நீர் சாலைகளில் வெள்ளம் போன்று ஓடியது. மும்பை முழுக்க தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டது.

மாநகராட்சி ஊழியர்கள் ராட்சத மோட்டார் பம்ப் மூலம் தண்ணீரை சாக்கடைகளுக்கு அனுப்பிய வண்ணம் இருக்கின்றனர். மும்பை கடல் பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு ராட்சத அலைகள் பல மீட்டர் உயரத்திற்கு எழும்ப வாய்ப்பு இருப்பதால் மக்கள் அங்கு செல்வதை தவிர்க்கும்படி வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மும்பை மட்டுமல்லாது ராய்கட், பால்கர் உட்பட மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மராத்வாடாவில் உள்ள நாண்டெட் மாவட்டத்தில் மழை வெள்ளம் 5 பேரை அடித்துச்சென்றுவிட்டது. அவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். அங்கு ஆறு கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அக்கிராம மக்கள் வெளியில் வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோலாப்பூர் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.