• August 18, 2025
  • NewsEditor
  • 0

‘தலைவர் சினிமாவுக்கு வந்து ஐம்பது வருஷம் ஆகுது. இதுல கிட்டத்தட்ட 25 வருஷத்துக்கு மேல நாங்களும் படம் ரிலீசாகுறப்பெல்லாம் கட் அவுட், போஸ்டர், பாலபிஷேகம்னு லட்சக்கணக்குல பணம் செலவு செய்திருப்போம். இப்ப யோசிச்சுப் பார்த்தா எங்களுக்கு எங்க மேல கோபம் வருது. ஆனாலும் முடிஞ்சு போனதை நினைச்சு என்ன செய்ய? அதனால இனிமேல் அந்தத் தப்பை ஒரு நாளும் செய்ய மாட்டோம்’ என்கிறார் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சாதிக் பாட்ஷா.

Coolie movie

விருகம்பாக்கம் பகுதி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி.

கடந்த வாரம் ‘கூலி’ ரிலீசான அன்று ரசிகர் மன்றத்தின் சார்பில் ஐம்பதாயிரம் திரட்டி அந்தப் பகுதியில் வசிக்கும் நலிந்த மக்களுக்கு தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், புடவை வேட்டி போன்றவற்றை வழங்கியுள்ளார்.

இவரிடம் பேசினோம்.

”தலைவர் படம் ரிலீசாகுதுன்னா ஒரு மாசத்துக்கு முன்னாடியே ரெடி ஆகிடுவோம். மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் சேர்ந்து பணம் திரட்டி போஸ்டர், கட் அவுட் வைக்கிறதுன்னு ரகளை பண்ணுவோம். இதுல மன்றங்களுக்கிடையில போட்டி வேற. ஒரு லட்சம் வரைக்குமெல்லாம் இதுக்காக செலவு செய்வோம்.

சாதிக் பாட்ஷா

பிறகு கட் அவுட் வைக்கிறதுல கொஞ்சம் சிக்கல் வந்துச்சு. அது கீழே விழுந்ததுல சிலருக்கு அடிபட்ட சம்பவமெல்லாம் நடந்தது. படம் பார்க்க வர்ற ரசிகர்கள் சும்மா இருக்காம கட் அவுட் மேல ஏறினாங்கன்னா விழாம என்ன செய்யும்?

இதனால ஒருகட்டத்துல கட் அவுட் வைக்கறதை விட்டுட்டு போஸ்டர், பாலபிஷேகம்னு பண்ணினோம். அதுக்கும் பால் முகவர் சங்கத்துக்காரங்க ரொம்பவே எதிர்ப்பு தெரிவிச்சாங்க. காசு கொடுத்துதான் வாங்குறோம்னாலும் ‘எதுக்குப்பா இப்படி வீணா கொட்டுறீங்கன்னு கேட்டாங்க. ஒருகட்டத்துல அவங்க பேச்சுலயும் நியாயம் இருக்கிறதா பட்டுச்சு.

பால் வாங்கக் காசு இல்லாம அதைக் குடிக்காத குழந்தைகள் இங்க இருக்கிற சூழல்ல நாம பண்றது சரியில்லைன்னு எங்களுக்கே புரிஞ்சது. தவிர நாங்க இப்படி செய்யறதால தலைவருக்கும் சேர்ந்தே கெட்ட பெயர்ங்கிறது புரிஞ்சப்போ அதையும் விட்டுட்டோம்.

கடைசியா போஸ்டர் மட்டும் ஒட்டிகிட்டிருந்தோம். அதையும் படம் முடிஞ்ச ரெண்டாவது நாள் மாடுதான் திங்கும்.

இந்த நிலையிலதான் இந்தப் பகுதியில் வசிக்கிற சில பொதுநல ஆர்வலர்கள் ‘மகிழ்ச்சியை நீங்க கொண்டாடுறப்ப கூட நாலு பேரைச் சேர்த்துக்கோங்கப்பா’ன்னு சொன்னார்.

நலிந்தவர்களூக்கு உதவி

அப்பதான் எங்களுக்கு புத்தியில உறைச்சது. எங்க பகுதியிலேயே கஷ்டப்படுகிற சில குடும்பங்களைத் தேர்வு செய்து அவங்க வாழ்வாதாரத்துக்குத் தேவைப்படுகிற சில உதவிகளைச் செய்தோம்.

படம் ரிலீசான அன்னைக்கே அவங்களையும் வரவழைச்சு அந்த பொருட்களைத் தந்தப்ப அவங்க முகத்துல கண்ட சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் பத்தாது.

அதனால இனிமே அஞ்சு பைசா தேவையற்ற செலவு செய்யற்தில்லைன்னு முடிவு செய்திருக்கோம்” என்கிறார் இவர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *