
‘தவெக மதுரை மாநாடு’
மதுரை பாரபத்தியில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டை விஜய் நடத்தவிருக்கிறார். தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன்பு நடக்கவிருக்கும் இந்த மாநாட்டை தவெகவின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மிக முக்கியமானதாக பார்க்கின்றனர்.
அடுத்த மாதத்திலிருந்து விஜய் தொகுதிவாரியாக சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கிறார். அதற்கான எதிர்பார்ப்பையும் இந்த மாநாட்டின் மூலம் உண்டாக்கிவிட வேண்டும் என நினைக்கின்றனர். மதுரை மாநாடு சார்ந்து தவெகவின் முக்கியத் திட்டங்கள் என்னென்ன?
‘விக்கிரவாண்டியில் என்ன நடந்தது?’
கட்சி ஆரம்பித்து 8 மாதங்கள் கழித்து முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் விஜய் நடத்தியிருந்தார். இந்த மாநாட்டையே தமிழகத்தின் மையப்பகுதியில் அல்லது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் நடத்த வேண்டும் என்பதுதான் விஜய்யின் திட்டமாக இருந்தது. திருச்சியைத்தான் விஜய் முதல் ஆப்சனாகவும் வைத்திருந்தார். அங்கே ஒரு டீம் இறங்கி இடம் பார்த்து எல்லாவற்றையும் இறுதி செய்யும் கட்டம் வரை செல்கையில், இன்னொரு தரப்பின் மூலம் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

திருச்சி இல்லை என்றவுடன் மதுரை, கோவை, சேலம் என தமிழகத்தை ஒரு ரவுண்ட் அடித்தனர். எங்குமே விஜய் எதிர்பார்த்ததை போல பிரமாண்டை மாநாட்டை நடத்தும் அளவுக்கு இடம் கிடைக்கவில்லை. எல்லா பக்கமும் ஆளும் தரப்பின் இடையூறுகள் இருந்ததாக தவெகவின் முக்கிய நிர்வாகிகளே குற்றஞ்சாட்டினர். கடைசியாகத்தான் விக்கிரவாண்டி வி.சாலையை லாக் செய்தனர்.
விஜய் எதிர்பார்த்த அளவுக்கான பிரமாண்டமான இடமாக அது இல்லை. 50000-75000 சேர்கள் மட்டுமே அங்கே போட முடிந்தது. தொகுதிக்கு 2000 லிருந்து 2500 பேர் வரைக்கும் கூட்ட வேண்டும், மொத்தமாக 5 லட்சம் பேரை இறக்க வேண்டும் என்பதுதான் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். அதில் வெற்றியும் அடைந்தனர். தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக கூட்டத்தையே கூட்டினர்.

‘இரண்டாவது மாநாட்டின் நோக்கம்!’
ஜூன் மாதம் வரைக்குமே இரண்டாவது மாநாட்டை இவ்வளவு விரைவில் நடத்த வேண்டும் என தவெக முகாம் நினைக்கவில்லை. அப்போது வரைக்குமே விஜய் அதிமுகவோடு செல்வாரா மாட்டாரா என்ற பேச்சுவார்த்தைகள் ஓடிக்கொண்டேதான் இருந்தன. அதிமுக பாஜகவுடன் கூட்டணி என அறிவித்த பிறகும் இந்தப் பேச்சு ஓயவில்லை. களத்தில் விஜய் அதிமுகவோடு கூட்டணி செல்லப்போகிறார் என்கிற ‘Perception’ தான் உருவாகியிருந்தது.
‘விஜய்தான் முதல்வர் வேட்பாளர்!’
பனையூரின் வியூகப்புள்ளி இதை மாற்ற நினைத்தார். இப்படியே சென்றால் மக்கள் மனதில் தங்கள் தரப்பு பிரதான போட்டியாளராக நிற்காமல் போய் விடுவோம் என வியூக தரப்பு எண்ணியது. இதைத் தொடர்ந்துதான் இரண்டாவது ஒரு மாநாட்டை நடத்துவோம் எனும் முடிவுக்கு வருகின்றனர். ‘கொள்கைத் திருவிழா’ என்பதுதான் விக்கிரவாண்டி மாநாட்டின் கருப்பொருள். கட்சியின் கொள்கைகளை விஜய் விளக்கிப் பேசியிருந்தார். அதேமாதிரி, இரண்டாவது மாநாட்டுக்கும் ஒரு கருப்பொருளை ஆரம்பத்திலேயே செட் செய்துவிட்டனர். அதாவது, விஜய் யாருடைய தலைமையையும் ஏற்று கூட்டணி செல்லப்போவதில்லை.

விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை முடிவெடுத்துவிட்டனர். முதல்வர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்தி பொசிஷன் செய்யும் வேலைகளையும் தொடங்கினர். செய்ற்குழுவில் இரண்டாவது மாநாட்டை அறிவித்ததோடு விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் தீர்மானித்தனர்.
அடுத்த சில நாட்களிலேயே ‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்’ எனும் கோஷத்தை முன்னெடுத்தனர். மாநாட்டுக்கு அடிக்கப்படும் பேனர்களில் கட்டாயம் இந்த வாசகம் இருக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டனர். ஐ.டி.விங்கை வைத்து சமூக வலைதளங்களிலும் களமாடினர். அதாவது, மதுரை மாநாட்டில் கூட்டணியெல்லாம் பற்றி எந்த குழப்பமும் இல்லாமல் விஜய்யை முதல்வர் வேட்பாளராக காட்டிவிட வேண்டும். விஜய்யும் பிரதான போட்டியாளர்தான் என மக்கள் மனதில் நிறுத்திவிட வேண்டும் என்பதுதான் வியூகப்புள்ளி தரப்பின் திட்டம்.
‘சைலன்ட் அசைன்மென்ட்!’
விஜய்யை பெரிய தலைவராக காட்ட வேண்டுமெனில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் கூட்டத்தை கூட்டி மாநாட்டை நடத்த வேண்டும் என முடிவெடுத்தனர். அதன்படி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் ஒரு டீம் இறங்கி சைலன்ட்டாக வேலை பார்த்தனர்.

மதுரையில் இடத்தை லாக் செய்தனர். விக்கிரவாண்டியில் மாநாட்டின் பூமி பூஜையை கூட்டத்தை கூட்டி பிரமாண்டமாக நடத்தினர். ஆனால், மதுரை மாநாட்டுக்கான பூமி பூஜை செய்தியே வெளியில் கசியாமல் பார்த்துக் கொண்டனர். அதிகாலை பூஜை என்பது முந்தைய நாள் இரவில்தான் மா.செக்களுக்கே சொல்லப்பட்டது. ஆளும்தரப்பிலிருந்து அழுத்தங்கள் வருவதை தவிர்க்கவே இப்படியொரு திட்டம் என பனையூர் தரப்பு தகவல் சொன்னது. சைலண்டாக பூமி பூஜையை நடத்தியிருந்தாலும் காவல்துறையினர் தவெகவினர் நினைத்த தேதியில் மாநாட்டை நடத்தவிடவில்லை.
ஜோதிட காரணங்களை மையப்படுத்தி ஆனந்த் தரப்பு முதலில் டிக் அடித்து வைத்திருந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு பதிலாக 21 ஆம் தேதியே மாநாட்டை நடத்த வேண்டிய சூழலை காவல்துறை ஏற்படுத்தியது. ஒன்றரை மாதங்களுக்கு முன்பாகவே வேலையை தொடங்கிவிட்டதால் பெரிய சிக்கலில்லாமல் வேலை ஏறக்குறைய முழுமையாக முடித்துவிட்டனர்.

’15 லட்சம் டார்கெட்!’
விக்கிரவாண்டி மாநாட்டுத் திடலை விட மதுரை பாரபத்தி மாநாட்டுத் திடல் மூன்று மடங்கு பெரிது. அதனால் கூட வேண்டிய கூட்டத்தின் எண்ணிக்கையையும் மூன்று மடங்காக உயர்த்தி நிர்வாகிகளுக்கு டாஸ்க் கொடுத்திருக்கிறார்கள். மதுரையில் நடக்கவிருப்பதால் திருச்சிக்கு கீழுள்ள மாவட்டங்களிலிருந்தே பெருவாரியான கூட்டத்தை திரட்டிவிட முடியுமென நினைக்கின்றனர். விக்கிரவாண்டியை விட 3 மடங்கு அதிகமாக 15 லட்சம் பேரை திரட்டிவிட வேண்டும் என்பதுதான் தவெக முகாமின் திட்டம்.
‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்!’ என்பதுதான் மாநாட்டின் கருப்பொருள். அதனால் விஜய் மட்டும்தான் மாநாட்டின் மையமாக இருப்பார். சிறப்பு விருந்தினராகக் கூட வேறு யாரையும் அழைக்கும் திட்டமில்லை என்கிறார்கள். கவனம் மொத்தமும் விஜய்யின் மீது மட்டுமே இருக்கும் வகையில்தான் நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டிருக்கின்றன.
‘சுற்றுப்பயணத்துக்கான முன்னோட்டம்!’
மாநாட்டை முடித்த கையோடு விஜய் சுற்றுப்பயணமும் மேற்கொள்ளவிருக்கிறார். இதற்காக ‘வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு!’ என்பதை மையப்படுத்தி ஒரு பாடலையும் தயாரித்து வைத்திருக்கிறார்கள். அதையும் விஜய் மேடையில் வெளியிடுவார். சமீபத்தில் விஜய் சில பிரச்னைகளுக்கு வாய் திறக்கவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்தது. அவற்றில் சில பிரச்னைகளை வெளிப்படையாகவும் சிலவற்றை பட்டும்படாமலும் விஜய் பேசி செல்லக்கூடும் என தகவல் சொல்கின்றனர்.
மேலும், தன்னை திமுகவுக்கான பிரதான எதிரியாகவும், களத்தை ஸ்டாலின் vs விஜய் என மாற்றும் நோக்கத்தோடும்தான் விஜய்யின் பேச்சு இருக்குமென உறுதியாக சொல்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

கட்சி ஆரம்பித்த பிறகும் கால்ஷீட் ஒதுக்கி அரசியல் செய்து வருவதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் விஜய், 2026 தேர்தலில் தன்னைப் பிரதான போட்டியாளராக நிறுவிவிட வேண்டும் என பல பிரயத்தனங்களையும் எடுக்கிறார். அவர் எதிர்பார்க்கும் தாக்கம் ஏற்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.