
பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம், வங்கி, மருத்துவமனை, மின்மயானம்…. எங்கெங்கும் ‘ஆதார்’ கட்டாயமாக்கப் பட்டுள்ளது. `ஒரே நாளில் ஆதார் கார்டு’ போன்ற விளம்பரங்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால், இதே நாட்டில்தான், 13 வயதாகும் தங்கள் மகனுக்கு ஆதார் வேண்டும் என்றும், அது இல்லாததால் அச்சிறுவனால் படிப்பைத் தொடர முடியவில்லை என்றும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாடோடி பழங்குடியின தம்பதியான சிவகுமார் – ராதிகா போராட்டம் நடத்தி யுள்ளனர்.
ஆதாரை எல்லா இடங்களிலும் கட்டாயமாக்கும் அரசு, அதை எல்லோருக்கும் வழங்குவதையும் கடமையாக எடுத்திருக்க வேண்டாமா? ஏன் கிடைக்கவில்லை ஆதார் கார்டு அந்தச் சிறுவனுக்கு? கேள்விகளுடன் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் உள்ள அம்மா நகரில் வசிக்கும் சிவகுமார் – ராதிகா தம்பதியைச் சந்திக்கச் சென்றோம். அவர்களிடம் பேசியபோது, 18 வயதுக் குட்பட்ட 40 குழந்தைகள் இப்படி ஆதார் கார்டு கிடைக்காமல், பள்ளிக்கூடம் செல்வதில் சிக்கல்களைச் சந்தித்து வரும் அவலம் மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது.
கிட்டத்தட்ட ஒரே மாதிரியான 40 வீடுகள். ஆங்காங்கே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். நம்மைப் பார்த்ததும், சிலர் நாற்காலியை எடுத்துத் தந்தனர். தங்கள் மகனுக்கு ஆதார் கார்டு தராமல் அலைக்கழிக்கப்படுவதாக, கிட்டத் தட்ட 30 குடும்பத்தினர் ஜெராக்ஸ் பேப்பர் களுடன் நம்மைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர்.
ஆதார் கார்டு கேட்டா… அலைய விடுறாங்க!
“நாங்க நாடோடி பழங்குடியினர்ங்கிறதால, போற எல்லா இடத்துலயும் அவமானப் படுத்துவாங்க. யாரும் எங்களை மனுஷங்களா மதிக்கிறதில்ல. ரோட்டுல கிடக்குற இரும்பு, பிளாஸ்டிக் பொருள்களை பொறுக்கி எடைக்குப் போட்டுத்தான் சாப்பிடுறோம். ஒரு நாள் வேலை செய்யலைனா, கிடைக்கிற 50 ரூபாவும் இல்லாம போயிரும். பேங்க்ல போயி, ‘அய்யா எங்களுக்கு ஏதாச்சும் தொழில் தொடங்க வழி காட்டுங்க, லோன் கொடுங்க’னு கேட்டா, ‘நீங்க பணத்தைத் திரும்பித் தராம ஊரை விட்டு ஓடிருவீங்க’னு விரட்டுறாங்க (ம்… இவர்களெல்லாம் விஜய மல்லையா பரம்பரை?).
சரி, புள்ளைங்க படிச்சா இதுலாம் மாறும்னு நினைக்குறோம். ஆனா, அதுக்கும் அந்த சர்டிபிகேட், இந்த சர்டிபிகேட்னு கேக்குறாங்க. வாங்கறதுக்காக கவர்மென்ட் ஆபீஸ்களுக்குப் போனா, அதே அவமானம், அலைக்கழிப்பு. என் பையன் ஏழாவது படிக்குறான். `ஆதார் கார்டு இல்லாம பள்ளிக்கூடத்துல இனி சேர்த்துக்க முடியாது’னு சொல்லிட்டாங்க. ஆறு மாசமா ஆதார் கார்டுக்கு அலையுறேன். ‘திருவள்ளூர் போ’, ‘ஆவடி போ’, ‘அந்த முகாமுக்குப் போ, இந்த முகாமுக்குப் போ’னு அலைய வெச்சாங்க. பஸ்ல ஏறினா, ஜனங்க எங்களை பக்கத்துலகூட உட்காரவிட மாட்டாங்க’’ என்றவர், ஆதார் கார்டில் என்ன சிக்கல் என்று பகிர்ந்தார்.
வீட்டுலேயே பிரசவம்… பிறப்புச் சான்றிதழ் வாங்கணும்னு தெரியல!
“என் மனைவிக்கு வீட்டுலேயே பிரசவம் ஆச்சு. அதனால, மகனுக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்ல. குழந்தை பொறந்ததும் பிறப்புச் சான்றிதழ் வாங்கணும்ங்கிற விஷயமும் எங்களுக்குத் தெரியல. கவர் மென்ட்டு நர்ஸுங்க (சுகாதாரப் பணி யாளர்கள்) எல்லா ஏரியாவுக்கும் போவாங்க. ஆனா, எங்க ஏரியாவுக்கு வந்து இதுலாம் சொல்லிக்கொடுக்க மாட்டாங்க. என் பையனுக்கு ஆதார் கேட்டுப் போன இடத் துல எல்லாம், பிறப்புச் சான்றிதழ் கேட்டாங்க. பிறப்புச் சான்றிதழ் வாங்க எல்லா ஆபீஸ்களுக்கும் ஏறி இறங்கியாச்சு. மனசு வெறுத்துப் போயித்தான் போராட்டம் பண்ணினோம். போலீஸ் அடிச்சா அடிக் கட்டும், புள்ள படிச்சுப் பொழைச்சுக்கட்டும்னு நெனைச்சேன்” என்ற சிவகுமாரின் முகத்தில் வேதனையின் உச்சம்.
“போராட்டம் பண்ணினதை டி.வி-யில போட்டுட்டாங்க. அதுக்கு அப்புறம்தான், அதிகாரிங்க எங்களைக் கூப்பிட்டுப் பேசினாங்க. இன்னும் 10 நாள்ல ஆதார் கார்டு வந்துரும்னு கலெக்டர் சொன்னதா சொல்லியிருக்காங்க’’ என்றார் சிறிது நம்பிக்கை கிடைத்தவராக.

40 குழந்தைகள்… பள்ளிக்கூடம் போக முடியவில்லை!
போராட்ட செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியாக, தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார். தொடர்ந்து, அதிகாரிகள் அவசர அவசரமாகச் செயல்பட்டு, மாணவருக்குப் பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் என கோட்டாட்சியரால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தித்தான் ஆதார் அட்டை யைப் பெற வேண்டுமா என்பதே அவல நிலை. ஆனால் அதைவிட அவலமாக, இன்னும் 40 குழந்தைகளும் இங்கு ஆதார் இல்லாமல், அதனால் பள்ளிக்கூடம் செல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
பிரசவ ஆஸ்பத்திரிக்குப் போனா… உள்ளே விட மாட்டாங்க!
“எங்க குடியிருப்புல இருக்குற நிறைய குழந்தைகளுக்கு ஆதார் அட்டையே இல்ல மேடம். பிறப்புச் சான்றிதழ் இல்லைனு ஆதார் அட்டை தரமாட்டேங்கிறாங்க. ஆஸ்பத்திரி போயி புள்ள பெத்தக்கலாம்னு நாங்க போனாலும், கேவலமா நடத்துவாங்க. `சொந்தக்காரங்க யாரும் உள்ளே வரக் கூடாது’னு சொல்லுவாங்க. எங்களுக்கு மூணாவது குழந்தை கே.எம்.சி மருத்துவ மனையில தான் பொறந்துச்சு. குடும்பக் கட்டுப்பாடு செய்யக் கட்டாயப்படுத்து னாங்க. நாங்க மறுத்ததால, எங்க குழந்தைக் குப் பிறப்புச் சான்றிதழ் தரல. அதனால, ஆதார் கார்டும் வாங்க முடியல. அரசாங்கம், `நாங்க மக்களுக்கு அது தர்றோம், இது தர்றோம்’னு சொல்லுது. நாங்க போய் கேட்டா, `உங்ககிட்ட இந்த சர்டிபிகேட்லாம் இல்ல’னு சொல்லுது.
ரோட்டுல வேலைபார்க்கிற எங்கள்ல நிறைய பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கூட கிடைக்கிறது இல்ல. ஆனா, மாடி வீட்டுல இருக்குறவங்களுக்கு எல்லாம் கொடுக்குறங்க. எங்க எல்லாருக்கும் ஓட்டுப் போடுற கார்டு மட்டும் தவறாம கொடுத் திருக்காங்க. தேர்தல் நேரத்துல எல்லா அரசியல்வாதிகளும் இங்க வருவாங்க. `நாங்க ஜெயிச்சதும் உங்க நிலைமை மாறும்’னு சொல்லுவாங்க. எங்க பசி, பட்டினி, அவமானம்னு எதுவும் மாறவே இல்ல’’ என்று தங்கள் வலியைப் பகிர்ந்தார் சிலுக்கு.

கிடைச்ச வேலையும் போச்சு!
சிலுக்குவின் கணவர், “என் பையனுக்கு 18 வயசு ஆகிப்போச்சு. அவனுக்கு ஆதார் கார்டு வாங்க இதுவரை அலைஞ்சிட்டு இருக்கேன். அவன் வேலைக்குப் போன இடத்துல, சம்பளம் போட பேங்க் அக்கவுன்ட் கேட்டாங்க. ஆதார் கார்டு இல்லாம பேங்க்ல அக்கவுன்ட் ஆரம்பிக்க முடியாம, சம்பளம் வாங்க முடியாம, அந்த வேலைக்கே போக முடியாம போச்சு. ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டாங்கனு ஒரு எடத்துல சொல்லி, அதையும் கொடுத்துப் பார்த்துட்டோம். அப்பவும் எதுவும் நடக்கல’’ என்று விரக்தியுடன் கூறியபோது, நம்மைப் பின்னிருந்து யாரோ இழுக்க, திரும்பிப் பார்த்தால் 13 வயது சிறுமி சைலு.
`ஸ்கூல்ல சேர்த்துவிடுங்க ப்ளீஸ்..!’
“அக்கா, எனக்குப் படிக்கணும்னு ஆசை. மூணாவது வரைக்கும் பள்ளிக்கூடம் போனேன். ஆனா, ஆதார் அட்டை இல்லைனு போக முடியல. நான் ஒரு தடவை கலெக்டரை பார்த்தப்போ, அவரை மாதிரியே நானும் ஆகணும்னு ஆசை வந்துச்சு. படிச்சாதானே அதெல்லாம் நடக்கும்? என்னை எப்படியாச்சும் பள்ளிக்கூடத்துல சேர்த்து விடுறீங்களா?” என்றபோது, மனதில் கலக்கமும், அரசின் மீது கோபமும் வந்தது.
தொடர்ந்த சிவகுமார், “10 வருஷத்துக்கு முன்னாடி, திடீர்னு ஒருநாள் வந்து எங்களை எல்லாம் போட்டோ புடிச்சாங்க. ஆதார் கார்டு கொடுத்தாங்க. அப்போ, அதோட முக்கியத்துவம் எல்லாம் எங்களுக்குத் தெரியல. ஆனா, எங்க புள்ளைங்களுக்கு ஆதார் கார்டு கொடுக்க எந்த அதிகாரியும் வரல. நாங்களா போய்க் கேட்டாலும் விரட்டுறாங்க. புது கலெக்டர், எல்லாருக்கும் பத்து நாள்ல ஆதார் கார்டு கொடுக்கிறதா சொல்லியிருக்காரு’’ என்று அவர் கூற, நம்மைச் சுற்றி நின்றவர்கள் தங்களிடமுள்ள மனுக்கள், சான்றிதழ்களை எல்லாம் காட்டியபடி திரும்பத் திரும்பக் கூறிய அந்த வார்த்தைகள், அங்கிருந்து நான் கிளம்பிய பின்னரும் பல மணி நேரம் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது… ‘ஏதாச்சும் பண்ணுங்க…!’

அரசு துறைகள் என்னதான் வேலை பார்க்கின்றன?
சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட எந்த அரசு துறைகளும் இம்மக்கள் கூட்டத்தின் பிரச்னைகளை இத்தனை ஆண்டுகளாகச் சரி செய்யாதது ஏன்? அரசு நிர்வாகத்தையும் இம்மக்களையும் இதுவரை இணைக்கக்கூட இல்லாமல், இவர்கள் என்னதான் வேலை பார்க்கிறார்கள்? அரசின் கவனம் ஏன் இம்மக்கள் மேல் படுவதில்லை? இவர்களே தேடிச் சென்று கோரிக்கைகள் வைத்தாலும், ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள்? படிப்புக்காக ஒரு தலைமுறை குழந்தைகள் போராடுவது எவ்வளவு பெரிய அவமானம் அரசுக்கு?
சொன்னபடி ஒரு வாரத்துக்குள் ஆதார் அட்டைகளை வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்கிறார்களா என்று பார்ப்போம்.