
கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15), அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் நடந்து முடிந்தது.
இதையொட்டி, இன்று அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன்னில் ட்ரம்பை சந்திக்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
வெற்றி பெறாத சந்திப்பு
ட்ரம்ப் – புதின் சந்திப்பு, ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்தை நோக்கி நகரவில்லை. ‘அடுத்து என்ன செய்வது?’ என்பது குறித்து தான் ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தையாக இருக்கும்.
கடந்த பிப்ரவரி மாதம், ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்காவில் ஏற்பட்ட அவமானம் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்று இந்த முறை ஜெலன்ஸ்கியுடன் பிற ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் செல்கிறார்கள்.
ட்ரம்ப் பதிவு
இந்த நிலையில், ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,
“அதிபர் ஜெலன்ஸ்கி நினைத்தால் உடனடியாக, அவரால் ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் அல்லது சண்டையைத் தொடர முடியும்.
இந்தப் போர் எப்படி தொடங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பு, ஓபாமா ஆட்சியில் ஒரு தாக்குதலும் இல்லாமல் எடுக்கப்பட்ட கிரிமீயாவை திரும்ப பெற முடியாது.
உக்ரைன் நேட்டோவிற்குள் செல்ல முடியாது. சில விஷயங்கள் என்றும் மாறாது” என்று பதிவிட்டுள்ளார்.

குழப்பம்
ரஷ்யா – உக்ரைன் பிரச்னை கிரிமீயாவில் இருந்து தான் தொடங்கியது. அடுத்து இந்தப் போர் நேட்டோவில் சேர முயற்சித்ததால் வளர்ந்தது.
ஆக, இந்த இரண்டும் நடக்கவே நடக்காது. அப்போது தான், இந்தப் போர் முடிவு பெறும் என்று ட்ரம்ப் அறிவித்திருப்பது, இன்றைய சந்திப்பை எப்படி பாதிக்கும் என்கிற குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.