
13 நாள்களாக தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டத்தினை தி.மு.க அரசு கையாண்ட விதமும், அந்தப் பிரச்னையை மறைப்பதற்கு நடத்திய நாடகமும் தி.மு.க அனுதாபிகளைக்கூட முகம்சுழிக்க வைத்திருக்கிறது. இந்தப் பிரச்னையில் என்னதான் நடந்தது… இதில், திமுக ஏன் இவ்வளவு விமர்சனங்களை எதிர்கொள்கிறது விரிவாகப் பார்க்கலாம்..!
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகள் மொத்தம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், 10 மண்டலங்களின் தூய்மைப் பணிகள் 2020-ம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சியிலேயே தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதும், சம்பந்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததுடன், `தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.’ என்று சென்னை மாநகராட்சிக்கு கடிதமும் அனுப்பினார்.
ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கொள்கை முடிவு என்று சொல்லி, தான் நினைத்ததை சாதித்தது அப்போதைய அ.தி.மு.க அரசு.
தனியார்மயம் என்ற அதே அராஜகம்!
இந்த சூழலில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்’ என்பதை 285-வது வாக்குறுதியாகக் கொடுத்தது தி.மு.க. இந்த வாக்குறுதியை நம்பி தூய்மைப் பணியாளர்களும் திமுக-வுக்கு வாக்களித்தார்கள்.
ஆனால், ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு கடந்த 4 ஆண்டுகளில் அதைச் செய்யவில்லை. மாறாக அ.தி.மு.க அரசு செய்த தனியார்மயம் என்ற அதே அராஜகத்தை கையில் எடுத்தது. தனியார் மயமாக்கப்படாமல் இருந்த 5 மண்டலங்களில் திருவிக நகர் மற்றும் ராயப்பேட்டை ஆகிய இரண்டு மண்டலங்களை தனியார் மயப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. இதற்கான ஒப்பந்தம் ராம்கி என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
அதிர்ந்துபோன பணியாளர்கள்
இந்த இரண்டு மண்டலங்களிலும் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மத்திய அரசின் NULM என்ற திட்டத்தில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்தார்கள். 10-லிருந்து 20 வருடங்களாக இந்தத் திட்டத்தில் பணியாற்றுவரும் இவர்களின் எதிர்பார்ப்பு என்றாவது ஒருநாள் நமக்கு பணி நிரந்தரம் கிடைக்கும் என்பதுதான். ஆனால், ஆகஸ்ட் 1-ம் தேதி வழக்கம் போல பணிக்குச் சென்றவர்களிடம், `இனிமேல் நீங்கள் மாநகராட்சிப் பணியாளர்கள் இல்லை. ராம்கி என்ற நிறுவனத்தின் கீழ்தான் பணியாற்ற வேண்டும். அவர்கள்தான் உங்களுக்குச் சம்பளம் தருவார்கள்’ என்று சொல்லவே, அதிர்ந்துபோனார்கள் அவர்கள் .
காரணம், இங்கு அவர்கள் சம்பளம் 23,000 ரூபாய். ஆனால், தனியார் நிறுவனத்திலோ 16,000 ரூபாய்தான் சம்பளம். வெறும் 6,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்த இவர்களுக்கு, 23,000 ரூபாய் சம்பளம் என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. உழைப்போர் உரிமை இயக்கம் சார்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்றத்தின் வாயிலாகவே இவர்களுக்கு 23,000 ரூபாய் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்தத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு ஓராண்டுகூட இவர்கள் அதை முழுதாக பெறவில்லை. அதற்குள் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு. இதில், ஊதிய குறைப்பு மட்டும் பிரச்னை இல்லை. லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தனியார் நிறுவனத்தினர் எங்களை கொத்தடிமைகளைப் போல நடத்துவார்கள். குறைந்த ஊழியர்கள், அதிக வேலை நேரம் என்று என்று ஈவு இரக்கமில்லாமல் எங்கள் உழைப்பைச் சுரண்டுவார்கள் என்றும் அவர்கள் கதறினார்கள்.
தீவிரமடைந்த போராட்டம்
இந்தநிலையில்தான், இரண்டு மண்டலங்களை தனியார் மயப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் இறங்கினார்கள்.
அவர்களின் உரிமைக்காக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வரும், உழைப்போர் உரிமை இயக்கம் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. இடது தொழிற்சங்க மய்யம் (LTUC) இதந்தப் போராட்டத்தை வழிநடத்தியது. போராட்டத்துடன் நின்றுவிடாமல், நீதிமன்றத்திலும் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்தை தி.மு.க பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஒன்றிரண்டு நாள்கள் கத்திவிட்டு கலைந்துசென்றுவிடுவார்கள் என்றுதான் நினைத்தது.

ஆனால், போராட்டம் தீவிரமடைந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், சட்டக்கல்லூரி மாணவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் போராட்டக் களத்துக்கு வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அனைத்து மீடியாக்களிலும் இவர்கள் போராட்டம் தொடர்ந்து செய்தியாக்கப்பட்டது. இதனை தி.மு.க அரசு சற்றும் எதிர்பார்க்கவில்லை.
போராட்டக் குழுவுடன் அரசு பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியும் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. காரணம், பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியாவும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை குறித்து பேசாமல், தனியாருக்கு வேலைக்குச் செல்லுங்கள் என்பதையே வலியுறுத்தியிருக்கினர். அவ்வப்போது பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கே.என்.நேருவும் அதையே சொல்லியிருக்கிறார். ஆனால், போராடிய தூய்மைப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்தார்கள்.
இதற்கிடையில், போராடும் தூய்மைப் பணியாளர்களிடம், ‘பணம் தருகிறோம், வீடு தருகிறோம் போராட்டத்தை கைவிடுங்கள்.’ என்று அமைச்சர் சேகர் பாபு தரப்பினர் தங்களிடம் பேசுவதாகவும் போராட்டக்குழுவினர் குற்றச்சாட்டை முன் வைத்தார்கள். அதைத்தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு இந்த விவகாரத்தில் என்ன வேலை என்று பலரும் கேட்க ஆரம்பித்தார்கள். ஆனாலும், அவர்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபாட்டார்.
ஏதாவது செய்தாக வேண்டும்!
இதற்கிடையில், `பேச்சுவார்த்தை தொடர்பாக கேள்விகேட்ட செய்தியாளர்களிடம், அமைச்சர் சேகர் பாபு வெளிப்படுத்திய மிரட்டல் தோரணை, நீங்கள் தனியாருக்கு வேலைக்குச் சென்றால் நிறைய சலுகைகள் கிடைக்கும் என்று மேயர் பிரியா கொடுத்த விளக்கம்’ என இந்த விவகாரத்தில் தி.மு.க அரசின் ஒவ்வொரு செயல்பாடும் நாளுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொந்தளிக்க வைத்ததே தவிர அமைதிப்படுத்தவில்லை.
அவர்கள் போராட்டத்தில் தீவிரமானார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல துய்மைப் பணியாளர்கள் போராட்டம் சுடர்விட ஆரம்பித்தது. இதனைக் கவனித்த தி.மு.க அரசு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டது.

அந்தநிலையில்தான், தேன்மொழி என்ற பெண், `தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்துவது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது’ என்று நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கினை தொடர்ந்தார். தனியார் மயம் கூடாது என்று போராடும் மக்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்குக்கு தீர்ப்பு கிடைக்காத நிலையில், தேன்மொழி தொடர்ந்த பொதுநல வழக்கு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டது, `தூய்மைப் பணியாளர்கள் அனுமதிக்கப்படாத இடத்தில் போராடுவது தவறு. அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்’ என்று தீர்ப்பை வழங்கியது நீதிமன்றம்.

இந்த தீர்ப்பை காரணம் காட்டி, அறவழியில் போராடிய மக்களை நள்ளிரவில் அராஜகப் போக்கோடு கைது செய்தது காவல்துறை. தமிழக அரசின் இந்த மோசமான செயல்பாடு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நேரத்தில், முதலமைச்சர் `கூலி’ படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்து படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்று புகைப்படத்துடன் செய்தி வெளியாக கொந்தளிப்பு பலமடங்கானது.
`வேலைக்காக போராடும் கூலித் தொழிலாளர்களை சந்திக்க நேரமில்லாத முதல்வருக்கு, கூலி படம் பார்க்க நேரம் இருக்கிறதா?’ என்று சமூகவலைதளங்களில் தகித்தார்கள். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்தன.
இதுஒருபுறம் என்றால், தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று பொதுநலவழக்குத் தொடர்ந்த தேன்மொழி, அமைச்சர் சேகர் பாபுவுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. `எல்லாமே செட்டிங்கா… ஏன் திமுக இப்படி நடந்துகொள்கிறது? என்று பலரும் முகம் சுழிக்க ஆரம்பித்தார்கள்.
அதற்குபிறகும்கூட, திமுக அரசு போராடும் தூய்மைப் பணியாளர்களுக்கு தீர்வு ஏற்படுத்தவோ அல்லது அவர்களை அழைத்துப் பேசவோ தயாராக இல்லை. மாறாக, இந்தப் பிரச்னையிலிருந்து மக்களை திசைதிருப்புவது எப்படி என்றே யோசித்தார்கள். அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்கள்.

ஆலோசனை முடிவில், `தூய்மைப் பணியாளர்கள் மீது முதலமைச்சர் தனி கரிசனத்தோடு இருக்கிறார். தூய்மைப் பணியாளர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது’ என்று கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள் என்று சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், “தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும், 3 ஆண்டுகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும், தூய்மைப் பணியாளர்களின் உடல நலன் காக்க 10 லட்சத்திற்கான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும், தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களின் குடும்பத்தினர் சுயதொழில் தொடங்க உதவிகள் செய்யப்படும், பணியின்போது மரணம் அடையும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்” என்றார். அதில் போராடிய தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை குறித்து குறிப்பிடவில்லை என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
போராடிய தூய்மைப் பணியாளர்கள் வேறு முதல்வரைச் சந்தித்த தூய்மைப் பணியார்கள் வேறு!
இதனைத் தொடர்ந்து, `தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய திட்டங்கள் அறிவித்தார் முதல்வர்’ என்று செய்திகள் வெளியானது. பல்வேறு தூய்மைப் பணியாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். இன்னொரு பக்கம், அமைச்ச சேகர் பாபுவும் மேயர் பிரியாவும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்ததுடன், அந்நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டிருந்த தூய்மைப் பணியாளர்களில் சிலரை, முதல்வரை வாழ்த்தி ஊடகங்களில் பேட்டிகொடுக்க வைத்தார்கள்.
போராடிய தூய்மைப் பணியாளர்கள் வேறு முதல்வரைச் சந்தித்த தூய்மைப் பணியார்கள் வேறு. ஆனால், அது பொதுமக்களுக்குத் தெரியவா போகிறது? தூய்மைப் பணியாளர்கள் என்று குறிப்பிட்டு பல்வேறு சங்கங்களின் பெயரைக் குறிப்பிட்டால் மக்கள் குழம்பிவிடுவார்கள் என்று நினைத்தார்கள் போலும். இதன்மூலம், போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் குழுவும் முதல்வரை சந்தித்தது போலவும் அவர்களுக்கான சிறப்புத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது போலவும் இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டது போலவும் ஒரு பிம்பத்தை உருவாக்க முயன்றது திமுக அரசு. இதன் பின்னணியை அறியாத பொதுமக்களும் அப்படித்தான் நினைத்திருக்கலாம்.

ஆனால், உண்மையில் போரட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைக்கும் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்புத் திட்டங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. போராடிய மக்களை காவல்துறையையும் வைத்து கலைத்ததை மட்டுமல்ல, போராட்டத்தை முன்னெடுத்த உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் இந்த போராட்டம் குறித்து 21 ம் தேதி வரை ஊடகங்களிலிலோ சமூக ஊடகங்களிலோ எதுவும் பேசக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதையும் நாம் இங்கே கூர்ந்து கவனிக்க வேண்டும்.
போராடிய மக்களை போலீஸை வைத்து கலைத்துவிட்டு, போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு நீதிமன்றத்தின்மூலம் வாய்ப்பூட்டு போட்டுவிட்டு இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது தி.மு.க அரசு.

உண்மையில் போராடிய மக்கள் என்ன ஆனார்கள் அவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விவாதமே நடக்காத சூழலில் விகடன் போராடிய மக்களைத் தேடிச் சென்றது. அவர்களின் கருத்தை விரிவாக காட்சிப் படுத்தியது. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்…
இவ்வளவு அவப்பெயருக்கு மத்தியிலும் திமுக அரசு தனியார்மயத்துக்கும் ஒரு நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுவதன் பின்னணி என்ன? என்பதுதான் எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி!