
நடிகர் விஜய் சேதுபதி, இரண்டு யூடியூபர்களை அழைத்து வாழ்த்து தெரிவித்ததோடு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் கூறிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி, தனது நடிப்பு திறமை மட்டுமின்றி, எதார்த்தமாக இருப்பதாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
நல்ல செயல்களில் ஈடுபடுபவர்களை ஊக்குவிப்பதோடு, தங்களின் திறமைகளை வெளிப்படுத்துபவர்களை அவ்வபோது பாராட்டி வருகிறார் விஜய் சேதுபதி.
இந்நிலையில், சிராஜ் மற்றும் அருண் என்ற இரு இளைஞர்கள், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் கிட்டதட்ட 3500 கி.மீ ட்ரை சைக்கிள் மூலம் பயணித்து, இயற்கைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் விஜய் சேதுபதியை அவரது இல்லத்தில் சந்தித்து, 2002-வது மரக்கன்றை அவருக்கு வழங்கி மரியாதை செய்தனர்.
இதுகுறித்து வெளியான வீடியோவின்படி, இந்த சந்திப்பின் போது விஜய் சேதுபதி அவர்களுக்கு பண உதவி செய்ய முன்வந்தார். ஆனால் அந்த இளைஞர்கள் “எங்களுக்கு சினிமாதான் கனவு, அதற்கு உதவி செய்யுங்கள்” என கோரிக்கை வைத்தனர்.
இதனைக் கேட்ட விஜய் சேதுபதி, “நீங்க ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கணுமா? நான் உங்களை சேர்த்து படிக்க வைக்கிறேன். இல்லை, வேறு எந்த உதவி வேணும்னாலும் கேளுங்கடா தம்பி, நான் செய்யுறேன்!” என்று கூறியிருக்கிறார். இந்த உரையாடல் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இளைஞர்களின் வீடியோக்களை விஜய் சேதுபதி பார்த்ததாகவும், “நல்லா பண்ணுறீங்க!” என மனதார பாராட்டி, அவர்களை அன்புடன் அரவணைத்து முத்தமிட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
இவரது இந்த செயல், சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு பரவலாக பகிரப்பட்டு வருகிறது.